பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடியிடம் ஆட்சியை அளித்தால், அவர் தேசத்தை மாற்றிக் காட்டுவார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சண்டீகரில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பாஜக வாக்குச் சாவடி முகவர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியதாவது:
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததை காங்கிரஸ் துணைத் தலைவர் (ராகுல் காந்தி) எதிர்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி ஊழல்களின் மறுபெயராகத்தான் விளங்கியது.
கருப்புப் பணம் என்பது நமது நாட்டைப் பீடித்துள்ள புற்றுநோய். அறுவை சிகிச்சை மூலம்தான் அதனை ஒழிக்க முடியும். இந்த சிகிச்சையின்போது ஏற்படும் வலியை சற்று பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழலாம்.
மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அதில் சிக்கிய எலிகள், பாம்புகள், பூனைகள், கீரிகள் போன்றவை அலறியபடி பெரிய மரத்தில் ஏறித் தப்பிக்க முயற்சிக்கும். ரூபாய் நோட்டுகள் தொடர்பான பிரதமரின் அதிரடி அறிப்பால், வெள்ளத்தில் சிக்கிய எலிகள், பாம்புகள், பூனைகள், கீரிகள் போல எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரே மரத்தில் தங்க முடியாது.
காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மோடியின் அதிரடி அறிவிப்பால் வேறு வழியின்றி ஒரே மரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பிரச்னை தீர்ந்த பிறகு, அவர் ஓடி விடுவார்கள்.
சண்டீகரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வெற்றியைத் தர வேண்டும். பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து நிலைகளிலும் மோடியிடம் 15 ஆண்டுகளுக்கு ஆட்சியை அளித்தால், அவர் தேசத்தையே மாற்றிக் காட்டுவார் என்றார் அமித் ஷா.
முன்னதாக, கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகே அமித் ஷா வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
English Summary : Give him 15 years of Modi regime: Amit Shah Request.