திருமணத் தேவைகளுக்காக அதிக அளவில் பணம் தேவைப்படுவதால் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
அதன்படி, திருமணச் செலவுகளுக்காக மணமகன் அல்லது மணமகளின் தந்தையோ, தாயோ வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதாக இருந்தால் ரூ.2.5 லட்சம் வரை எடுக்க அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், அரசின் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்ட பிறகே, திருமணச் செலவுகளுக்காக ரூ.2.5 லட்சம் எடுக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடியும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷா அனந்தசுப்பிரமணியன் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் இல்லாமல், திருமணத்துக்காக வாடிக்கையாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க அனுமதிக்க இயலாது.
வரும் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் அறிவிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே, வீட்டில் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருப்பவர்கள் அடுத்த வாரம் முதல் ரூ.2.5 லட்சம் ரூபாய் வரை வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
அரசு அறிவிப்பின்படி, திருமணம் நடைபெறவிருக்கும் மணமகன் மற்றும் மணமகளின் தாயோ, தந்தையோ, இருவரில் ஒருவர் மட்டுமே ரூ.2.5 லட்சம் எடுக்க முடியும்.
மணமகள் வீட்டாரும், மணமகன் வீட்டாரும் தனித்தனியாக பணம் எடுக்கலாம்.
ஏடிஎம் இயந்திரங்கள்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் 9,000 ஏடிஎம் இயந்திரங்களில் 2,000 இயந்திரங்கள் புதிய நோட்டுகளை வழங்குவதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் மேலும் பல ஏடிஎம் இயந்திரங்களல் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும்.
வட்டி விகிதம்: வங்கிகளில் குறைந்த வட்டி விகிதம் கொண்ட சேமிப்புக் கணக்குகளில் அதிக பணம் செலுத்தப்படுவதால், நிலை வைப்புகளுக்கான (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் இதுவரை ரு.47,000 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நடப்புக் கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்றார் உஷா அனந்தசுப்பிரமணியன்.
பஞ்சாப் நேஷனல் வங்கியைப் போலவே, பிற வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் இல்லாமல் திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து வருகின்றன.
இதுகுறித்து கார்ப்பரேஷன் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருமண செலவுகளுக்காக வாடிக்கையாளர்கள் ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவற்றைத் தெளிவாக விளக்கும் ரிசர்வ் வங்கியின் அறிவிக்கையை எதிர்நோக்கியுள்ளோம்.
அந்த அறிவிக்கை வெளியிடப்படுவரை எங்களால் அரசின் சலுகை அறிவிப்பை செயல்படுத்த முடியாது என்றார் அவர்.
English Summary: Federal Reserve Bank guidelines, announced after the marriage of Rs 2.5 lakh to take the money will be given the banks said.
Marriage needs large amounts of cash needed money from the bank for some relaxation in the norms for the federal government announced Thursday.