தமிழகத்தின் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் (அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர்), நெல்லித்தோப்பு (புதுச்சேரி) ஆகியவற்றுக்கு சனிக்கிழமை (நவ.19) நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 70 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் சனிக்கிழமை நடைபெற்றது. நான்கு தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே விறுவிறுப்பு அடைந்தது. அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வேட்பாளர்கள் யார் யார்? அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி (அதிமுக), கே.சி. பழனிச்சாமி (திமுக), எஸ்.பிரபு (பாஜக), முத்து (தேமுதிக) ஆகியோர் களம் காணுகின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் (அதிமுக), டாக்டர் சரவணன் (திமுக), சீனிவாசன் (பாஜக), தனபாண்டியன் (தேமுதிக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். தஞ்சாவூர் தொகுதியில் எம்.ரங்கசாமி (அதிமுக), பில் அஞ்சுகம் பூபதி (திமுக), அப்துல்லா சேட் (தேமுதிக), எம்.எஸ்.ராமலிங்கம் (பாஜக), ஜி.குஞ்ஜிதபாதம் (பாமக) ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.
அரவக்குறிச்சியில் 81.86 சதவீதம்: தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 81.86 சதவீத வாக்குகள் பதிவாகின. தஞ்சாவூரில் 69.41 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71.04 சதவீத வாக்குகளும் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
நெல்லித்தோப்பில் 85.76 சதவீதம்: புதுச்சேரி நெல்லித்தோப்பு பேரவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. அத்தொகுதியில் 85.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தீவிர கண்காணிப்பு: சனிக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது. மூன்று தொகுதிகளிலும் உள்ள 812 வாக்குச் சாவடிகளில் 625 வாக்குச் சாவடிகளின் நிகழ்வுகள் இணையதள முறையிலான கண்காணிப்பு கேமரா மூலமும், 187 வாக்குச் சாவடிகளின் நிகழ்வுகள் விடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்பட்டன.
இணையதள முறையிலான கேமரா மூலம் பதிவான காட்சிகள், தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டிலுள்ள அறையில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதனால், அனைத்து வாக்குச் சாவடிகளின் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் கண்காணித்தது.
மொத்த வாக்குப்பதிவு: காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நிலவரங்கள் அனைத்தும் கணினி வழியிலான தொலைபேசி மூலம் உடனுக்குடன் கேட்டறியப்பட்டன. ஒரு சில இடங்களில் மட்டுமே திமுக, அதிமுக கட்சியினரிடையே கைகலப்பும், வாக்குவாதங்களும் ஏற்பட்டன.
கடந்த தேர்தலைவிட வாக்கு சதவீதம் குறைவு
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 2011 -இல் நடந்த பேரவைத் தேர்தலைக் காட்டிலும் தற்போது வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளது.
அரவக்குறிச்சியில் கடந்த 2011 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 85.94 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், தற்போது 81.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோன்று, தஞ்சாவூர் தொகுதியில் 2011 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது 69.41 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில்: திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது 70.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது அதே அளவுக்கு அதாவது 71.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி நெல்லித்தோப்பில்...இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலின்போது 85.43 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது அதே அளவுக்கு 85.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நவ.22 -இல் வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த மையங்களுக்கு துணை ராணுவப் படையினர் உள்பட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 22 -ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. எண்ணிக்கை தொடங்கப்பட்ட ஓரிரு மணி நேரங்களில் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.
English Summary : The state of the three assembly constituencies (Aravakurichi, Thirupparankundram, Thanjavur), Nellithope (Pondicherry) to Saturday (Nov. 19) in the general elections by an average of 70 per cent or more of the votes recorded.
Tamil Nadu's three constituencies voting was peaceful and was the Chief Electoral Officer Rajesh lakkani said.