
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. 2000 ரூபாய் நோட்டு லாட்டரி சீட்டு போல இருக்கு... என்னா கலரு... பண நோட்டு போலவே இல்லையே என பல தரப்பில் இருந்து பல்வேறு வகையான கருத்துகள் நிலவி வருகின்றன.
ஆனால், மக்கள் கையில் புழக்கத்துக்கு வந்து ஒரு சில நாட்களே ஆன 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு சில குளறுபடிகள் இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது, இரண்டு விதமான ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டுக்கும், மற்றொரு 500 ரூபாய் நோட்டுக்கும் ஒன்றல்ல... இரண்டல்ல... குறைந்தபட்சம் 9 வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டின் ஓரங்களில் உள்ள பார்டரின் அளவு, ரூபாய் நோட்டின் நிறம், தேசியச் சின்னம் மற்றும் காந்தியின் புகைப்படம் ஷேட் அடிப்பது, ரூபாய் நோட்டுக்கு இடையே இருக்கும் இழைக்கும் அருகில் இருக்கும் வார்த்தைகளுக்கும் இடையேயான இடைவெளி என அந்த ரூபாய் நோட்டுகளில் பல வேறுபாடுகள் காணப்படுகிறது.
இது குறித்து ஆர்பிஐயிடம் கேட்டால், ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்யும் போது அதிக அளவில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஏற்பட்ட தவறே இதற்குக் காரணம் என தெரிவித்துள்ளனர். புதிதாக அச்சடித்த 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். யாரேனும் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தால், அதனை ஆர்பிஐ வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ செய்தித் தொடர்பாளர் அல்பனா கிலாவ்லா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெங்களூருவில் இந்த 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும் அந்த நோட்டுகளில் வித்தியாசங்களைக் கண்ட மக்கள் அதிர்ச்சிக் குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English summary:
Bangalore: New 500 Rupee notes issued with 9 differences it confused among Bangalore people and also they shocked seeing it