மக்களுக்கு உபயோகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த ஓராண்டில், இஸ்ரோ 10 செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. அனைவரின் உழைப்பு காரணமாக இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது. சந்திரயான் செயற்கைக்கோள் அதன் துருவ வட்டப் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. சந்திரயான் அனுப்பியப் படங்களைக் கொண்டு சந்திரயான் 2-இன் செயல்பாடுகள் குறித்த சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அடுத்த கட்டமாக சந்திரயான் 2 நிலவில் இறங்கிச் சோதனை செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. நிலவில் 6 சக்கர வாகனத்தை இறக்கி முழுமையான ஆய்வுகளைச் செய்வதற்கான சோதனைப் பணிகள் பெங்களூரில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சந்திரயான் அனுப்பிய படங்களைக் கொண்டு நிலவில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனடிப்படையில், நிலவில் இருப்பதைப் போன்ற பாறைகள், நாமக்கல் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், நாமக்கல்லில் இருந்து, 50 டன் பாறையை எடுத்து, பொடியாக்கி நிலவு போன்று உருவாக்கம் செய்து அந்தப் பொடிகளைத் தூவி, சந்திரயான் 2-இன் செயல்பாடுகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்தச் சோதனைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்த பிறகு 2017-ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்படும். ஆதித்யா திட்டத்தின் கீழ் சூரிய மண்டல ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப ரீதியில் சவாலான பணியான, சூரியனின் புவியீர்ப்பு விசையில் ஆதித்யா செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் சூரியனின் இயக்கத்தை ஆய்வு செய்யும் வகையில், ஆதித்யா வடிவமைக்கப்பட்டிருப்பதால், சூரியன் பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
புவியின் பருவ நிலையைத் தாண்டி, சூரியனின் பருவ நிலையைத் தெரிந்து கொள்வதன் மூலம், அண்டங்களின் கதிரியக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்தியா, மக்களுக்கு உடனடி பலன் தரும் வகையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆதித்யா திட்டம் வாயிலாக முழுமையாக தகவல்களைப் பெறுவதற்கான, முதல் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.
English Summary : Due to the efforts of all those who reached this achievement. Chandrayaan satellite is proceeding well on its polar orbit. Chandrayaan 2 Chandrayaan sends photos of the activities and specific tests are now under way. The next step is to test down on the moon, Chandrayaan-2, preparatory work is ongoing