பல கோடி ரூபாய் மதிப்புடைய சீட்டு நிதி மோசடியின் பின்னணியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ரூபாய் நோட்டு விவகாரத்தில் என்னைத் தாக்குகின்றனர் என்று பிரதமர் மோடி மறைமுகமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் ஆட்சிமாற்றப் பேரணி என்ற பெயரில் பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆக்ராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
பணக்காரர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்கு ஜன் தன் வங்கிக்கணக்குகளை வைத்திருப்போர் உதவக்கூடாது. அவ்வாறு உதவினால் அவர்கள் தேவையில்லாமல் சட்டரீதியிலான பிரச்னையில் சிக்க வேண்டியிருக்கும்.
கருப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் எந்த வகையான நபர்கள் எனக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர் என்பது எனக்குத் தெரியும். சீட்டு நிதி நிறுவன வர்த்தகத்தில் யாருடைய பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன? சீட்டு நிதி நிறுவனங்களில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஏழை மக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளின் ஆசியோடு கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போய்விட்டது.
சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்து நூற்றுக்கணக்கான குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, சீட்டு நிதி மோசடிக்குப் பின்னணியில் இருந்தவர்களின் (மம்தா) வரலாற்றைப் பாருங்கள். அவர்கள்தான் தற்போது என்னைக் கேள்வி கேட்கின்றனர்.
மத்தியில் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் (காங்கிரஸ்) கருப்புப் பண விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்தனர். ஏனென்றால், அவர்கள் தங்களிடம் இருந்து ஆட்சி போய்விடுமோ என்ற கவலையிலேயே காலத்தைக் கழித்தனர் என்றார் மோடி.
பிரதமர் தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எனினும், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த சில தலைவர்கள் சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கி, வழக்குகளைச் சந்தித்து வருவதால் அவர்களையே மோடி மறைமுகமாகத் தாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
மாயாவதி மீது தாக்கு: இதனிடையே, ஆக்ரா பொதுக்கூட்டத்தில் மோடி மேலும் பேசுகையில், "அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சீட் வழங்கி, பணம் பெற முடியாமல் போன எதிர்க்கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று குற்றம்சாட்டினார். இவ்வாறு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பிரதமர் மோடி மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.
English Summary : Multi-crore worth of vouchers to financial fraud in the context of the political leaders of the bill in the case of me attacking the Prime Minister alluded to the West Bengal Chief Minister Mamata Banerjee criticized. Uttar Pradesh, slated for next year in the assembly election in the state regime-change rally in the name of BJP election propaganda meetings is conducting