புதுடில்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு இது வரை இல்லாத வகையில் கட்சியின் துணை தலைவர் ராகுல் தலைமை ஏற்றார்.உ.பி., மாநில தேர்தல் மற்றும் மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியன குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. காங்., மூத்த நிர்வாகிகளான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், ஏ.கே., அந்தோணி, மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
காங்., தலைவர் சோனியா தலைமையில்தான் இந்த கூட்டம் நடப்பது வழக்கம். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என காங்., மேலிட வட்டாரம் தெரிவிக்கிறது.
மோடி அரசு மீது ராகுல் தாக்கு :
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்; தற்போது ஜனநாயக குரல் நசுக்கப்படுவதாகவும், இது இப்போது ஒரு இருண்ட காலமாக திகழ்கிறது என்றும் குற்றம்சாட்டினார். மேலும் அவர் பேசுகையில்; பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பார்லி.,யில் இயற்றிய சட்டங்கள் மதிக்கப்படுவதில்லை. நில கையகப்படுத்தும் மசோதா, ரியல் எஸ்டேட் தொடர்பான சட்டங்கள் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதில்லை. சமீப காலங்களில் எல்லை பகுதியில் நமது ராணுவத்தினர் பலி அதிகரித்துள்ளது. இது கவலை தரும் விஷயமாகும். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு செயல்பாடு சரியில்லை. ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டம் மறுக்கப்படுவது அநீதியாகும். அரசு மமதையுடன் செயல்படுகிறது. ஏழைகளுக்கு எதிரான அரசாக மோடி அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.