3 தொகுதிகளில் தேமுதிகவுக்கு ஆதரவு கிடையாது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோவின் கருத்தே மக்கள் நலக் கூட்டணியின் கருத்து என்றும் கூறினார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியானது விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அப்போது தேமுதிக கட்சியின் நிவாகியும் தலைவருமான விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தது.
ஆனால் மக்கள் நலக் கூட்டணியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக கட்சி மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகியது.
இந்நிலையில் இப்பொழுது நடைபெறவிருக்கும் தஞ்சை, அரவக்குறிச்சி, மற்றும் திருப்பரக்குன்றம் ஆகிய மூன்று தொகுதி தேர்தலுக்கும் மக்கள் நலக் கூட்டணியானது தேமுதிகவுக்கு ஆதரவு கிடையாது என வைகோ அறிவித்தார். ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேமுதிக ஆதரவு கோரினால் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினர்.
ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 3 தொகுதிகள் தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக கூறினார். மேலும் வைகோவின் கருத்தே மக்கள் நலக் கூட்டணியின் கருத்து என்றும் தெரிவித்தார்.