வாஷிங்டன் : அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக நடந்த பேரணியின் போது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவருக்கு அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டிரம்ப் வெற்றிக்கு எதிராக ஆயிரகணக்கானோர் அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க், சிகாகோ, பிலிடெல்பியா, போஸ்டன், கலிபோர்னியா, கொலரடோ, சியாட்டில் மற்றும் சில நகரங்களில் ஆயிரகணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து வயதுடையவர்களும் கலந்து கொண்டனர். நகரங்களின் பல முக்கிய சாலைகளில் டிரம்புக்கு எதிரான பதாதைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். டிரம்ப் எங்களின் ஜனாதிபதி அல்ல என கோஷம் எழுப்பினர். டிரம்ப் பிரசார தலைமையகம் அமைந்த பகுதியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்ப்பட்டனர். ஆனால் போலீசார் அங்கு போராட்டம் நடத்த தடை விதித்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பலர், தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு எதிராக பேசிவிட்டு, தேர்தல் முடிந்த பின்னர், திடீரென மாற முடியாது. டிரம்ப்பை நம்ப மாட்டோம். டிரம்ப் தான் அடுத்த அதிபர் என தெரிந்த பின்னர், ஏமாற்றமடைந்தோம். ஹிலாரியின் அனுபவம், அறிவு டிரம்ப்பிடம் கிடையாது என்றனர்.
துப்பாக்கிச்சூடு:
சீட்டல் பகுதியில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். முதல்கட்ட தகவலின்படி 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணிக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.