உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மம்தா பானர்ஜி அண்மையில் சந்தித்து முறையிட்டார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தை மம்தா பானர்ஜி சனிக்கிழமை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதால் நாடு முழுவதும் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த முன்யோசனையற்ற அறிவிப்பால் கடந்த 11 நாள்களில் மட்டும் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.2.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏடிஎம் மையங்களில் நாள்தோறும் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ.4,500-இலிருந்து ரூ.2000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருப்பதையே காட்டுகிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற கெடு விதித்திருக்கிறோம். வரும் திங்கள்கிழமையுடன் அந்த கெடு முடிகிறது. அதற்கு பிறகு இந்த நடவடிக்கை திரும்பப் பெறப்படவில்லையெனில், அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து ஆம் ஆத்மி, சிவசேனை உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் மம்தா பானர்ஜி.
English Summary : High-value banknotes invalid, as the announcement of the country's economy in case of bankruptcy of the West Bengal Chief Minister Mamata Banerjee's allegation.