முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. முதல்வருக்கு கொடுக்கப்படும் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு முதல்வரை மாற்ற டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார்.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகி யோரது ஆலோ சனையின்படி அப்போலோ மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.
டாக்டர்களின் தொடர் சிகிச் சையால் முதல்வரின் உடல் நிலை தொடர்ந்து வேகமாக குணமடைந்து வருகிறது. முதல்வருக்கு பொருத்தப் பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டாலும், அவரது தொண்டை பகுதியில் இருக்கும் டியூப் மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை. டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வருக்கு கொடுக்கப் பட்டு வந்த உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு திரவ உணவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.
கடந்த 2 நாட்களாக திட உணவுகள் கொடுக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வரை வரும் 15-ம் தேதி சிறப்பு வார்டுக்கு மாற்றுவதற்கு டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்த பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் டாக்டர்களிடம் விசாரித்தார்.
முதல்வர் நலம் பெற வேண்டி கேதார்நாத் கோயிலில் பூஜை செய்யப்பட்ட பிரசாதம் மற்றும் மானசரோவர் ஏரியில் இருந்து கொண்டு வந்த புனித நீர் ஆகியவற்றை தம்பிதுரையிடம் கொடுத்தார்.
பின்னர், தருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் விரைவில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்புவார். முதல்வர் நலம் பெற வேண்டி உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்று வருகின்றன. முதல்வர் குணமடைந்ததும், அவரை கேதார்நாத் கோயிலுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படும்” என்றார்.