நுழைவு இசைவு (விசா), இணையதளப் பாதுகாப்பு, முதலீடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும், கத்தாருக்கும் இடையே சனிக்கிழமை ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்ததாவது:
இந்தியாவில் முதல்முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா-பின் நாஸர்-பின் கலீஃபா அல் தானி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்தார்.
பாதுகாப்புத் துறை, இணையதளப் பாதுகாப்பு முதலியவற்றில் இதுதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கத்தார் - இந்தியா இடையேயான நல்லுறவு மேலும் வலுவடைந்து வருவதை கத்தார் பிரதமரின் இந்திய வருகை உணர்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், வெறும் ஏற்றுமதி - இறக்குமதியுடன் இரு நாட்டு வர்த்தக உறவு நின்றுவிடாமல்,
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள், எண்ணெய்வளம் கண்டறியும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் இந்தியாவும், கத்தாரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
கத்தாரின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளதை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், இந்தியா இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயுவில் 66 சதவீதம் கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
வரும் 2022-ஆம் ஆண்டு "ஃபிஃபா' கால்பந்துப் போட்டி கத்தாரில் நடைபெறவுள்ளதால், அந்த நாட்டின் உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள வேண்டும் என்று கத்தார் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதுதவிர, உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் இராக், சிரியா, யேமன் ஆகிய நாடுகளின் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகள் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தூதரக அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கான சிறப்பு கடவுச் சீட்டுகளுக்கு (பாஸ்போர்ட்) நுழைவு இசைவு விதிமுறைகளில் தளர்வு, இணையதளக் குற்றங்களைத் தடுப்பதில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தொழில் நிமித்தம் பயணிப்பவர்களுக்கு மின்னணு நுழைவு இசைவு வழங்குவது ஆகியவை தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
மேலும், முதலீடுகள் மேற்கொள்வது குறித்து கத்தார் வர்த்தக அமைப்புக்கும், இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புக்கும் (சிஐஐ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதவிர, துறைமுகப் பராமரிப்பில் கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதற்கான மற்றோர் ஒப்பந்தமும் கையெழுத்தானது என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
English Summary : 5 agreements signed between India and Qatar.Entry clearance (visa), Internet security, investment and other issues in relation to India, Qatar, for the agreements between signed on Saturday. The Ministers of Foreign Affairs spokesman, said Vikas Swarup: Visit India for the first time in Qatar's Prime Minister Sheikh Abdullah bin Nasser bin Khalifa Al Thani, Prime Minister Narendra Modi on Saturday met in Delhi. Department of Defense, Internet Security, etc. both leaders on improving cooperation, the two leaders held talks.