புதுடெல்லி - புதிய 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்கிறோம் என்று மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காலாவதியான நோட்டுகளை மாற்ற புதிய 2000 ரூபாய் நோட்டுகளை முதலில் அச்சடித்தோம். தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடித்து வருகிறோம். முதல்முறையாக புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கிறோம். அதற்காக கிராமங்களுக்கு அதிக அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பப்படுகின்றன. சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தப் பணமும் விரைவில் புழக்கத்துக்கு விடப்படும்.
நாடு முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. அவற்றில் 2 லட்சம் ஏடிஎம் மையங்களில் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் வகையில் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது வினியோகிக்கப்படும், புதிய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் 100 சதவீதம் பாதுகாப்பானவை. 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் முதல் முறையாக முற்றிலும் உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை. அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். இவற்றை கள்ள நோட்டாக அச்சிட வாய்ப்பு மிக, மிக குறைவு.
புதிய ரூபாய் நோட்டு சப்ளை போதிய அளவு இல்லை என புகார்கள் வந்துள்ளன. புகார் வந்ததும் துரித கதியில் நடவடிக்கை எடுக்கிறோம். புதிய ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் கிடைப்பது தற்போது அதிகரித்துள்ளது. மதிப்பை ஈடுகட்டுவதற்காக, முதலில் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதில் ஆர்வம் காட்டி வந்தோம். தற்போது, புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.சட்ட விரோத பண மாற்றல்களை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். வங்கிகள் தங்களிடமுள்ள வங்கி கணக்குகளை, தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.