சென்னை - உலகத் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக மக்களின் நலன் ஒன்றையே தமது இலட்சியமாகக் கொண்டு, கோடானு கோடி மக்களின் மனதில் என்றென்றும் வாழும் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் கழகத் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல்லாயிரக் கணக்கில் வரிசையாக நின்று தினந்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றும் ஏராளமானோர் கண்ணீரஞ்சலி செலுத்தினர். ஏழை - எளிய மக்களுக்காக ஜெயலலிதா செயல்படுத்திய எண்ணற்ற நலத்திட்டங்களை அவர்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.
வெளிநாட்டவர் அஞ்சலி : ஜெயலலிதா நினைவிடத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். உலகத் தமிழர்களின் தலைவியாக ஜெயலலிதா விளங்குகிறார் என அவர்கள் நெஞ்சம் நெகிழ தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாணவர்களின் நலன்களுக்காகவும், கல்விக்காகவும் அம்மா அவர்கள் ஏராளமான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியிருப்பதாக மாணவ மாணவிகள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
நினைவிடத்தில் திருமணம் : நெஞ்சை நெகிழவைக்கும் முக்கிய நிகழ்வாக, சென்னை அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவரின் மகன் பிரான்சிஸ் மற்றும் ரஷீலா ஆகியோருக்கு ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் முன்னிலையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இது நிறைவேறாமல் போனதால், முதலமைச்சரின் ஆசியை பெற்றே திருமணம் நடத்துவது என முடிவு செய்த இத்தம்பதியர் நேற்று மெரினா கடற்கரைக்கு சென்று அங்குள்ள நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஜெயலலிதாவின் பூரண ஆசியுடன் தாங்கள் திருமணம் புரிந்தது தங்களுக்கு மனநிறைவைத் தருவதாக தம்பதியரும், அவர்களது பெற்றோரும் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த ஜெயலலிதா நினைவைப் போற்றும் வகையில் கழகத்தினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடியில், பேருந்து நிலையத்தில் இருந்த புறப்பட்ட மவுன ஊர்வலம், பல்வேறு சாலைகள் வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. மலைகிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த மவுன ஊர்வலத்தில் கலந்துகொண்டு, மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்தில் நேற்று மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல், மறைந்த ஜெயலலிதா நினைவாக கஞ்சி தர்மம் செய்தனர்.
பாரீஸ் நகரில் அஞ்சலி: ப்ரான்ஸில் செயல்படும் ஜெயலலிதா பேரவை சார்பாக, பாரீஸ் நகரில், ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ப்ரான்ஸ் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம் மற்றும் பாரீஸ் தமிழ்ச்சங்கம், வாணிதாசன் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று மலரஞ்சலி செலுத்தினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
English Summary: Jayalalithaa in Tamil Nadu to commemorate the memory of the events of Remembrance: Memorial married couples.