சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நேற்று மாநில அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை அடிப்படையாக கொண்டு, தமிழக கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை அரசாணையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துறையின் இயக்குனரான ககன் தீப் சிங் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி கடந்த ஒரு வாரமாக தொடர் தன்னெழுச்சி போராட்டம் நடக்கிறது. இதன் காரணமாக மத்திய அரசின் துணையுடன் நேற்று தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதாக அரசு அறிவித்தது. விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் - 1960ல் திருத்தம் ஏற்படுத்தி, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. விலங்குககள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு - 3,துணை பிரிவு(2)ன்படி, தமிழக கவர்னர் சில விதிமுறைகளை உருவாக்கி உள்ளார். அவை பின்வருமாறு:
* விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 2, உட்பிரிவு( டிடி)ன் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர் அல்லது அமைப்பினர் மாவட்ட கலெக்டருக்கு எழுத்து பூர்வமாகதகவல் தெரிவிக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மனிதர்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இத்தகவல்களை கலெக்டர் பதிவு செய்ய வேண்டும்.
* ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும கலெக்டர், ஜல்லிக்கட்டு நடக்க உள்ள இடத்தை பார்வையிட வேண்டும்.
* வருவாய், கால்நடை, போலீஸ் மற்றும் சுகாதார துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்ற ஒரு ஜல்லிக்கட்டு குழுவை கலெக்டர் ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளின்படி நடக்கிறது என்பதை அந்த குழுவினர் மேற்பார்வையிடுவர்.
* கால்நடை துறையினரால், காளைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை போட்டி நடத்துபவர்கள் உறுதி செய்ய வேண்டும். போதை பொருள் உள்ளிட்ட உணர்வுகளை துண்டும் பொருட்கள், காளைகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள், நோயால் பாதிக்கப்படவில்லை; போதை பொருட்களுக்கு ஆட்படவில்லை என்பதை, கால்துறை நிபுணர்களின் உதவியுடன் கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும்.
* போட்டி நடத்துபவர்கள், திறந்வெளி மைதானத்தில் கீழ்கண்ட வசதிகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.
நிபந்தனைகள்:
போட்டி துவங்குவதற்கு முன் காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில், ஒவ்வொரு காளையும் சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் போதிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். முன்னதாக மைதானத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், காளைகளுக்கு, 20 நிமிட ஓய்வு அளிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர அடி இடம் தர வேணடும். அவற்றுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் தந்து, அவை சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் வசதி ஏற்படுத்தவேண்டும். காளையின் மன நல பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் உரிமையாளர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையையும், கால்நடை துறையின் டாக்டர்கள் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
.
காயம் இருக்கும் காளையை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும். காளை உடலின் மேற்பகுதியில் காயங்கள் ஏதும் உள்ளதா, காது அருகே காயம் உள்ளதா, வால் பகுதியில் காயம் உள்ளதா என்பதை கால்நடைதுறை டாக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். காளைகளின் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லாதஅளவுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும்.காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் ஷாமியானா போட்டு இருக்க வேண்டும். மழை மற்றும் சூரிய ஒளியில் இருந்து காளைகளை பாதுகாக்க வேண்டும்.
மருத்துவர் ஆய்வு கட்டாயம்:
காளைகளை, கால்நடைதுறையின் தகுதி வாய்ந்த கால்நடை டாக்டர்களின் ஆய்வுக்கு உட்படுத்துவது கட்டாயம். காளைகளின் பொதுவான உடல்நலம் ஆய்வு செய்ய வேண்டும், பரிசோதனை கூட ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும். சோர்வு, நீர்போக்கு பாதிப்பு, உடல் நல பாதிப்புள்ள காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. போதை பாதிப்புக்கு உள்ளான காளையை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. மேலும் தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.
வாடிவாசல் பகுதிக்கு காளையை கொண்டு சென்று, அதன் மூக்கணாங்கயிற்றை அதன் உரிமையாளர் தான் அகற்றி, மைதானத்திற்குள் அனுப்ப வேண்டும். காளைகளை பரிசோதனை செய்யும் இடம், பந்தல் வசதியுடன் இருக்க வேண்டும். போட்டி நடக்கும் மைதானம் குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர் இட வசதி கொண்டதாக இருக்க வேண்டும். 50 சதுர மீட்டர் பகுதிக்குள் தான், காளைகளை போட்டியில் பங்கேற்பவர்கள் ஏறுதழுவ வேண்டும்.
வாடிவாசலை மறித்து கொண்டு போட்டியாளர்கள் நிற்க கூடாது. அதே போல் காளைகள் வெளியேறும் பகுதியையும் அவர்கள் மறிக்க கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15.மீட்டர் அல்லது 30 வினாடிகள் அளவுக்கு அல்லது காளையின் மூன்று துள்ளல்கள் வரை போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும். போட்டியாளர்கள் காளையின் வால், கொம்பு மற்றும்வாலை பிடித்து அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த கூடாது. இந்த விதிகளை மீறும் போட்டியாளர்கள், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுவார்கள். போட்டியாளர்கள் ஏறு தழுவும் முயற்சி மேற்கொள்ளும், 15 மீட்டர் இடம், மிருதுவான பகுதியாக மாற்றப்பட வேண்டும். அப்போது தான், காளைகளுக்கோ, போட்டியாளர்களுக்கோ காயம் ஏற்படாது.
ஏறு தழுவும் இடத்தில் இருந்து காளை சென்று சேரும் இடம் வரையான பகுதி காளை ஓடும் பகுதி எனப்படும். அப்பகுதி, பார்வையாளர் மாடத்தில் இருந்து, தள்ளி இருக்கும் வகையில்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். காளைகள் அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் தூரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் பார்வையாளர்கள் எழுப்பும் சத்தம், காளைகளை மிரள செய்யாது. போட்டி முடியும் இடத்தில், காளையின் உரிமையாளர் அல்லது அவரது பிரதி நிதி மட்டுமே இருக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர மீட்டர் இடம் அளிக்க வேண்டும். அங்கு உணவு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். அங்கு, 20 நிமிடங்கள் காளைகள் ஓய்வு எடுத்த பிறகு வீட்டுக்க அழைத்து செல்லலாம்.
பார்வையாளர் மாடம், குறைந்தபட்சம், 8 அடி உயரத்தில், இரட்டை தடுப்பு வசதியுடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும். பார்வையாளர் மாடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்பதை பொதுப்பணித்துறையினரின் வழிமுறைகளின்படி கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்கள்மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள், கால்நடை டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். அவசர காலவெளியேறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.