தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், இளைஞர்கள் போராட்டமாக வெடித்துள்ளது. ஒரு சிறு பொறியாக கிளம்பும் நெருப்பு ஒரு ஊரையே அல்லது மிகப்பெரிய வனப்பகுதியையே எரித்துச் சாம்பலாக்கி விடும். அதுபோன்று, சிறிய அளவில் அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள், அடுத்தடுத்து சென்னை மெரினா, மதுரை,கடலூர், திருச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி என தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவி விட்டது.
தமிழர் திருநாள், தமிழர்கள் பண்டிகை, உழவர் திருநாள் என்றெல்லாம் இதுவரை பேசிவந்த நிலையில், உண்மையான தமிழர் பண்டிகையாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொங்கல் திருநாளாக இந்த ஆண்டு பண்டிகை அமைந்துள்ளது எனலாம்.
இளைஞர் சக்தி என்பதை தமிழகமும், மத்திய, மாநில அரசுகளும், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அக்கறையாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், நாளை (ஜனவரி 20) மவுனப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுவரை இந்த நடிகர்-நடிகைகள் எங்கே சென்றிருந்தார்கள்? இளைஞர்கள், மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள், மருத்துவ மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஒன்று திரண்ட பின்னரே, திடீரென சுதாரித்துக் கொண்டு, இளைஞர்கள் இல்லாவிட்டால், திரைப்படம் இல்லை என்ற உணர்வு உரைத்து, மவுனப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு. தமிழர்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாக, இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஏதாவது செய்திருக்கலாம். மாநில அரசாவது அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். கடைசி வரை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது போன்ற சூழலில்தான், இளைஞர்கள் வீதியில் இறங்கி அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்களின் போராட்டத்தில் சென்னை மெரினாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்றார். "தங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியின் சாயமும் வேண்டாம். எந்த திரைப்பட நடிகரும் தங்களுக்குத் தேவையில்லை. இது இளைஞர்களின் ஒற்றுமைப் போராட்டம்" என மிகத் தெளிவாகக் கூறி விட்டதால், இந்தப்போராட்டத்தால், தாங்கள் அரசியல் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அரசியல்வாதிகளுக்கும், அனைத்து நடிகர்களுக்குமே உள்ளது எனலாம்.
காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கொக்கரித்தபோது, இந்த தமிழ் திரைப்படத்துறையினர் எங்கே இருந்தார்கள்? அனைத்து நடிகர்-நடிகைகளும் வெளிநாட்டுக்கு அவுட்டோர் சென்று விட்டார்களா? ஏனென்றால், தங்களின் திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்பட வேண்டும் அல்லது அந்த மொழியில் உரிமைக்கு விற்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கலாம். திரைப்பட நடிகர்களிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் உள்ளது.
"கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்துப் போனதாலும், விவசாயிகள் கொத்து கொத்தாக மரணம் அடைந்தது, தற்கொலை செய்து கொண்டது பற்றி எந்தவொரு திரைப்பட நடிகராவது கவலைப்பட்டிருப்பாரா? அல்லது தாங்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தில், ஏதாவது ஒரு சிறு தொகையை உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உதவித்தொகையாக இதுவரை அளித்துள்ளார்களா? இல்லையே. இப்போது, எதிர்பாராத வகையில், இளைஞர்கள் போராட்டம் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளதால், திரைத்துறையினரும் பெயரளவுக்கு உணர்வுகளைத் தெரிவிப்பதாக காலங்கடந்து அறிவித்துள்ளனர்." என்கிறார்கள் போராட்ட களத்தில் நிற்கும் இளைஞர்கள்.
'காவிரிக்காக போராடாத நடிகர் சங்கம் எங்கள் போராட்டத்தில் தலையிட வேண்டாம்' என்ற கோஷம் மெரினாவில், அலங்காநல்லூரில், கும்பகோணத்தில், தமுக்கத்தில் உரக்க கேட்கிறது.
இந்தப் போராட்டம் என்பது அரசியல்வாதிகள், கட்சிகளுக்கு மட்டுமல்ல, திரைப்படத்துறையினருக்கும், புகழ்பெற்ற நடிகர்களுக்கும் ஒரு எச்சரிக்கைதான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இது ஏதோ ஒரு நடிகருக்கான அறிவுறுத்தல் அல்ல. அனைத்து நடிகர்-நடிகைகளுக்குமானது.