சென்னை: மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, விழுப்புரத்தில் இன்று மதியம் நிருபர்களிடம் பேசியபோது, பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1ம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர். அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.
சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.