சசிகலா, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதால் அவர் விடுதலை தொடர்பான விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆனால், ``அபராதத் தொகையை செலுத்தியதால் மட்டும் சசிகலாவின் விடுதலை உறுதியாகிவிடாது. அதற்குப் பின்னால் பல அரசியல் ஆட்டங்கள் நடந்துவருகின்றன'' என்கிறார்கள் சசிகலா தரப்பினர்.ஜெயலலிதா - சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் குற்றவாளிகள் என பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் நால்வருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராதமும் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கினார். தனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் நால்வரின் தண்டனையையும் ரத்துசெய்து அவர்களை விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்த நிலையில், 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூர் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு அவரது நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிவுக்கு வருகிறது. இந்தநிலையில், சிறையில் சசிகலாவின் நன்னடத்தையைக் காரணம் காட்டி அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்கிற பேச்சுகள் தொடர்ந்து எழுந்துவந்தன.சசிகலா, இளவரசி
குறிப்பாக, பா.ஜ.க-வின் தேசிய நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி ``2020-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார்” என்று ட்விட்டரில் பதிந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர் சொன்ன தேதியிலும் சசிகலா விடுதலையாகவில்லை. மற்றொருபுறம், அவரது நன்னடத்தைக் காலத்தைக் கணக்கிட்டு 2020, செப்டம்பர் இறுதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் விடுதலையாக வாய்ப்புண்டு என்று சசிகலா தரப்பில் சொல்லப்பட்டது. இப்படி சசிகலா விடுதலை குறித்த தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் கர்நாடகச் சிறைத்துறைக்கு ஆர்.டி.ஐ மூலம் சசிகலா விடுதலை குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார். அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ``ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது சசிகலா ஏற்கெனவே சிறையிலிருந்த நாள்களையும், அவர் பரோலில் இரண்டு முறை வெளியே வந்த நாள்களையும் கணக்கிட்டு இந்தத் தேதியைக் குறிப்பிட்டிருந்தது கர்நாடக சிறைத்துறை. ஜனவரி 27-க்கு மேல் சசிகலாவை சிறையில் வைத்திருக்க முடியாது என்கிற நிலையே இருந்தது.
ஆனால், குன்ஹா தீர்ப்பின்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்களுக்கான அபராதத் தொகையை முதலில் செலுத்த சசிகலா தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டினாலும், யாரால் இந்தத் தொகை கட்டப்பட்டது, இந்தத் தொகைக்கான வருவாய் எப்படி வந்தது, சசிகலா இந்தத் தொகைக்கு எப்படிப் பொறுப்பாவார் உள்ளிட்ட விவரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.பெங்களுர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி...
இந்தநிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியனும், சசிகலாவுக்காக ஆரம்பத்தில் வழக்குகளை நடத்திய வழக்கறிஞர் முத்துக்குமாரும் நேற்று மாலை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயை டி.டி-யாகச் செலுத்தினார்கள். இது குறித்த தகவல் வெளியானதும் ``சசிகலாவின் விடுதலையை இனி யாரும் தடுக்க முடியாது” என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆனால், ``பணத்தைக் கட்டினாலும் சசிகலா விடுதலையிலுள்ள சிக்கல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கின்றன'' என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கான அபராதத் தொகைக்கு மூன்று பேர் டி.டி-களை வழங்கியிருக்கிறார்கள். அப்போது நீதிபதி ``இந்த மூவரும் சசிகலாவுக்கு எந்த வகையில் பணம் செலுத்துகிறார்கள்” என்று குறுக்குக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். `ஏற்கெனவே அளிக்கப்பட்ட குன்ஹா தீர்ப்பில் தங்கள் வசமுள்ள நகைகளை விற்று பணத்தைக் கட்டச் சொல்லியிருந்தார்கள். அந்தமுறையில் இப்போது ஏன் பணத்தைக் கட்டவில்லை?’ என்கிறரீதியில் கேள்விகளை நீதிபதி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அபராதத் தொகையை சசிகலா தரப்பு கட்டினாலும், அதை இன்று நண்பகல் வரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்யவில்லை.
Also Read: `2021 ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை!’ - ஆர்.டி.ஐ கேள்விக்கு பெங்களூரு சிறை பதில்
இதற்குப் பின்னால் பலமான அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். ``தனி நீதிமன்றம் பணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், சசிகலா விடுதலையை ஜனவரி 27-ம் தேதிக்கு மேல் தள்ளிப்போட முடியாது. மேலும், இந்தப் பணம் கட்டிய பிறகு சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கும் மனுவையும் அவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். அப்போது சிறைத்துறையும் சசிகலாவின் நன்னடத்தைக்கான காலத்தை அவருக்கு வழங்கும் நிர்ப்பந்தம் உருவாகும்.இதைத் தடுக்க முதலில் சசிகலாவின் அபராதத் தொகைக்கே சிக்கலை ஏற்படுத்தலாம் என்று தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு ஓர் அழுத்தம் சென்றிருக்கிறது. இதற்கு பின்னால் தமிழகத்தின் ஆளும் பிரமுகர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சசிகலாவின் விடுதலையால் அ.தி.மு.க-வுக்குள் பல்வேறு சர்ச்சைகள் உருவாகும் என்பதால், அவரது விடுதலையைத் தள்ளிப்போட அபராதத் தொகையை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் முன் உள்ள வாய்ப்பு.சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி
எனவே சசிகலாவுக்காகக் கட்டப்பட்டுள்ள பணத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதைவைத்தே சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதை முறியடிக்க சசிகலா தரப்பினரும் பல்வேறு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளை நடத்திவருகிறார்கள். ஒருவேளை சசிகலாவின் அபராதத் தொகையைத் தனி நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் போனால் இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சைகள் கிளம்ப வாய்ப்பிருக்கிறது. சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் பெங்களூரிலேயே கடந்த சில நாள்களாக முகாமிட்டு, சசிகலாவின் விடுதலையை உறுதி செய்வதற்கான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
http://dlvr.it/RlxVj3
Wednesday, 18 November 2020
Home »
» `சசிகலா விடுதலையில் சிக்கல்’ - அபராதத் தொகையைவைத்து அரசியல் ஆட்டம் ஆரம்பம்?