தொடர் தோல்வியால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல்-இல் சிஎஸ்கே தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்பது இதுவே முதல்முறை.நடப்பு சாம்பியன் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கிய சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் பேரிடியாக இறங்கியிருக்கிறது இந்த சீசனின் தொடர் தோல்விகள். காரணம் சிஎஸ்கே இதுபோன்ற மோசமான ஃபார்மில் இதுவரை இருந்ததில்லை. ஒரு போட்டியில் தோற்றாலும் அடுத்து மீண்டு வரும் திறன் படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தமுறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது அணியின் தலைமை மாற்றம். இந்த சீசனும் மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் பொறுப்பை வழங்கினார் அவர். இந்நிலையில், சிஎஸ்கேவின் தொடர் தோல்வி காரணமாக, தோனியே மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
அடுத்ததாக சென்னையின் மிக மோசமான பவுலிங். தீபக் சஹார் இல்லாதது சென்னைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடைசி மூன்று சீசன் ஐபிஎல் போட்டிகளில் அவர் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். புதிய பந்தில் வீசும் போது தீபக் சஹார் சென்னை அணியின் முக்கிய ஆயுதமாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் காயம் காரணமாக கடைசி நேரத்தில் அவர் விலகியதும் சிஎஸ்கேவின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணம்.
அதே போல், கடந்த சீசனில் ஆரஞ்ச் கேப் வென்ற ருதுராஜ் கெய்க்வாட், இப்போது சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்காததும் சென்னைக்கு பின்னடைவு தான். அவர் இந்த சீசனில் மிக மோசமான ஃபார்மில் உள்ளார். ருதுராஜ் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்காததால், அதன்பின் வரும் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்கின்றனர். மெகா ஏலத்திற்கு பிறகு மும்பை போல் வீரர்களை ஒருங்கிணைப்பதில் சென்னைக்கு சிக்கல் ஏதும் இல்லை. ஏனென்றால் சிஎஸ்கேவில் முக்கியமான 8 பேர் ஏற்கனவே விளையாடிய வீரர்கள். அதனால் சிஎஸ்கே விரைவில் பழைய ஃபார்முக்கு வரும் என்று நம்புகின்றனர் ரசிகர்கள்.இதையும் படிக்கலாம்: சாஹலை 15வது மாடியிலிருந்து தொங்கவிட்ட வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்கவேண்டும்: ரவி சாஸ்திரி
http://dlvr.it/SNJqVt
Sunday, 10 April 2022
Home »
» சாம்பியன்கள் இப்படியா விளையாடுவது? தொடர் தோல்வியில் சிஎஸ்கே! -அடுத்தது என்ன?