அமெரிக்க காவல்துறைக்கே சிம்மசொப்பனமாக விளங்கி வந்த மெக்சிகோவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஒருவன், பெண் சபலத்தால் போலீஸாரிடம் சிக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவன் பிரையன் டொன்கியானோ (45). மெக்சிகோவை தலைமையிடமாக கொண்டு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். ஆரம்பத்தில், தனது 20-வது வயதில் மெக்சிகோவில் போதைப்பொருள் பொட்டலங்களை கைமாற்றும் வேலையை செய்து வந்த இவருக்கு, ஒருகட்டத்தில் இந்த தொழிலில் கொடிக்கட்டி பறக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. அதன்படி, தன்னுடன் வேலை செய்யும் கூலிக்கார இளைஞர்களை கூட்டு சேர்த்து, மெக்சிகோவில் செயல்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனை பிரையன் கொலை செய்திருக்கிறான். இதையடுத்து, அந்த கும்பலின் தலைவனாக பிரையன் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த சில வருடங்களிலேயே, மெக்சிகோவில் யார் - யார், எந்தெந்த போதைப்பொருட்களை விற்க வேண்டும்; எங்கு விற்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறிப் போனார் பிரையன்.
இவ்வாறு தனக்கென ஒரு போதைப்பொருள் ராஜாங்கத்தை அமைத்துக் கொண்ட இவன், அமெரிக்காவிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் தனது கடத்தலை விரிவுப்படுத்தினான். பிரையனுக்கு கீழே பல்வேறு நாடுகளில் தற்போது சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வேலை செய்து வருகின்றனர். இவனை கைது செய்ய 200 நாடுகளைச் சேர்ந்த போலீஸார் முயற்சி செய்து வந்தனர். அமெரிக்க போலீஸாரும், அந்நாட்டு போதைப்பொருள் தடுப்புப் படையினரும் (டிஇஏ) இணைந்து 30-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து பிரையனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடி வந்தனர். ஆனால், எந்தவொரு நாட்டு காவல்துறையும் பிரையனை நெருங்க முடியவில்லை. அதையும் மீறி, பிரையன் இருக்கும் இடம் தெரிந்து அங்கு சென்ற போலீஸார் இதுவரை உயிருடன் திரும்பியதில்லை. அந்த அளவுக்கு சர்வதேச போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக பிரையன் விளங்கி வந்தார்.
இந்நிலையில், யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல, பிரையனுக்கு பேஸ்புக்கில் ஒரு மாடலிங் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமாக மாறியிருக்கிறது. இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அந்தப் பெண்ணை பிரையன் கடந்த வாரம் சந்தித்திருக்கிறான். இருவரும் 4 நாட்களாக அங்குள்ள பிரபல சுற்றுலா பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர். இதனிடையே,, அந்தப் பெண் ஆர்வமிகுதியில் பிரையனுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ஆனால், இந்த விஷயம் பிரையனுக்கு தெரியாது.
இந்நிலையில், இந்த புகைப்படம் அமெரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கண்ணில் சிக்கியுள்ளது. அந்தப் பெண்ணுடன் இருப்பது பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் என்பதை அறிந்து அதிர்ந்து போன அவர், உடனடியாக இதுகுறித்து கொலம்பியா போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, கொலம்பியா போலீஸார் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். இந்த சூழலில், ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பிரையனை 300-க்கும் மேற்பட்ட போலீஸார் ஹெலிகாப்டர்களிலும், கார்களிலும் சுற்றி வளைத்து நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
தான் எங்கு சென்றாலும் தனது பாதுகாப்புக்காக குறைந்தபட்சம் 100 பேரையாவது அழைத்து செல்லும் வழக்கம் உடையவர் பிரையன். ஆனால், இந்த முறை தன்னுடைய காதலியை சந்திப்பதால் யாரையும் தன்னுடன் பிரையன் அழைத்து செல்லவில்லை எனத் தெரிகிறது. இதுதான், போலீஸாரிடம் பிரையன் எளிதில் சிக்க காரணமாக அமைந்துவிட்டதாக கொலம்பியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பிரையனின் காதலியான அந்த மாடலிங் பெண்ணுக்கு, அவர் மிகப்பெரிய கடத்தல் மன்னன் என்பதே போலீஸார் கூறிய பிறகு தான் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
தற்போது பிரையனை அமெரிக்க போலீஸிடம் ஒப்படைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் கொலம்பியா போலீஸார் ஈடுபட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன், சாதாரண பெண் சபலத்தால் சிக்கியது மேற்கத்திய நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
http://dlvr.it/SNkS2q
Sunday, 17 April 2022
Home »
» அமெரிக்க போலீஸ்க்கு சிம்மசொப்பனம்...! பெண் சபலத்தால் சிக்கிய பரிதாபம் - யார் அந்த 'டான்'?