மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாய மக்களுக்கு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, கடந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து மராத்தா இட ஒதுக்கீடு ஒருங்கிணைப்பாளர் மனோஜ் ஜராங்கே தனது சொந்த கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்தார். இந்தப் போராட்டம் காரணமாக மராத்தா சமுதாயத்தினர் மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ-க்கள் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது. இதையடுத்து மாநில அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இந்தப் பிரச்னை குறித்து ஆலோசித்தது. இதில் மராத்தா சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நேற்று மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் தனஞ்சே முண்டே, தொழில்துறை அமைச்சர் உதய் சாவந்த், வீட்டு வசதித்துறை அமைச்சர் அதுல் சாவே ஆகியோர்கொண்ட குழு, மனோஜ் ஜராங்கேயுடன் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மனோஜ் ஜராங்கே சம்மதம் தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட பிறகு, நிருபர்களுக்குப் பேட்டியளித்த மனோஜ் ஜராங்கே, ``நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இட ஒதுக்கீடு கொடுங்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கும் அதிகபட்ச கடைசி கால அவகாசம். இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி இட ஒதுக்கீடு கொடுக்கவில்லையெனில், மும்பையின் செயல்பாட்டை நிறுத்திவிடுவோம். ஜனவரி 2-ம் தேதி வரை அரசுக்குக் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது'' என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தபோது, மேடையில் இருந்த சிலர் `உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர வேண்டும்' என்று தெரிவித்தனர்.
அவர்களை அமைதிப்படுத்திய மனோஜ், ``இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் கொடுப்பதால், அரசுக்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும். அரசு இட ஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்திருக்கிறது. எனவே கூடுதல் அவகாசம் பிடிக்கும். ஆனால், அனைத்து மராத்தா சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க உறுதிசெய்யுங்கள். மகாராஷ்டிரா அரசு மராத்வாடாவிலுள்ள மராத்தாக்களுக்கு குன்பி சமுதாயத்துக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.மனோஜ்
ஆனால், மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மராத்தாக்களுக்கு அந்தச் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். எனவேதான், அரசுக்குக் கூடுதல் அவகாசம் கொடுத்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா அமைச்சர்கள் மனோஜ் ஜராங்கேயைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, மாநில அரசு நியமித்திருக்கும் கமிட்டியில் இடம்பெற்றிருக்கும் நீதிபதி சுனில், முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவர் கெய்க்வாட் ஆகியோர் மனோஜைச் சந்தித்து, உடனே இட ஒதுக்கீடு வழங்குவதிலுள்ள சிக்கல்கள் குறித்து எடுத்துக் கூறினார்கள்.
மேலும் நிச்சயம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், அதேசமயம் அதற்குக் கால அவசாகம் தேவை என்றும் தெரிவித்தனர். இந்தச் சந்திப்புக்கு சுயேச்சை எம்.எல்.ஏ பச்சுக்காடு ஏற்பாடு செய்தார். மனோஜ், மாநில அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அதில் மராத்தா சமுதாயத்தினரைக் கணக்கெடுப்பு செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்பை நியமிக்க வேண்டும் என்றும், கணக்கெடுப்பை தாமதப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் மராத்தா சமூகத்துக்கு நிச்சயம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.Maratha Quota Protest: தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டுக்குத் தீவைத்த போராட்டக்காரர்கள்!
http://dlvr.it/SyKQJ6
Friday, 3 November 2023
Home »
» Maratha Quota Protest: உண்ணாவிரதத்தைக் கைவிட்ட மனோஜ் ஜராங்கே; மாநில அரசுக்கு ஜனவரி 2 வரை கெடு!