சேலம், கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உட்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள், இணைவு பெற்று இதன் கீழ் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியார் குறித்த நூல் எழுதியதற்காக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியருக்கு மெமோ வழங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணை பேராசிரியரான சுப்ரமணி, அங்குள்ள கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இவரை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல்வித்துறை நியமித்தது. பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய ’பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம், கடந்த ஆண்டு வெளியானது. தொடர்ந்து ஏற்கெனவே இவர் எழுதிய ’மெக்காலே’ `பழைமைவாத கல்வியின் பகைவன்' என்ற நூலின் மறு பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
நிர்வாக அனுமதி பெறாமல் இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்ரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாசாரத் தன்மையுடைய விவகாரங்களுக்கு எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால் பெரியார் குறித்து புத்தகம் எழுதிய பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பெரியார் பல்கலைக்கழகம்
இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட இணை பேராசிரியர்மீது புகார் வந்ததின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தனிக்குழு அமைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இது போன்று புத்தகங்கள் வெளியிட வேண்டுமென்றால், முன் அனுமதி பெறவேண்டும்” என்றார்.
மேலும் இணை பேராசிரியர் சுப்ரமணியிடம் பேசியபோது, “நான் பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டுதான் புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன். என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிக்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன்” என்றார். `தமிழக அரசுதான் சம்பளம் போடுதுனு தெரியுமா?’ - உறுதிமொழி குழுக் கூட்டத்தில் பெரியார் பல்கலை., பிரச்னை
http://dlvr.it/SzxsHq
Sunday, 10 December 2023
Home »
» நூல் வெளியிட்ட விவகாரம்; பேராசிரியருக்கு மெமோ வழங்கிய பெரியார் பல்கலை., நிர்வாகம்! - நடந்தது என்ன?