மக்களிடம் செல்லுங்கள். அவர்களுடன் வாழுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நேசியுங்கள். அவர்களுக்கு என்ன தெரியுமோ அதில் இருந்து தொடங்குங்கள். அவர்களிடம் இருப்பதைக் கொண்டு உருவாக்குங்கள். ஆனால் சிறந்தவற்றுடன் தலைவர்களே !
என்று Lao Tzu (லாவோ ஸு) சொன்னது இந்த மனிதருக்கு நிச்சயம் பொருந்தும் எனலாம்.அறிஞர் அண்ணா
இங்கே ”மும்மொழி கொள்கை என இந்தியென்ற வார்த்தை மீண்டும் வரும் போதும். தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்கலாம் எனச் சலசலப்பு ஏற்பட்ட போதும் ஒரே ஒரு பெயரின் மேற்கோள் காட்டி அந்த சத்ததிற்கெல்லாம் பதிலெழுதபட்டிருக்கும். “நான் கொண்டு வந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும் போதே! மக்கள் வெகுண்டு எழுவார்களே! என்ற அச்ச எண்ணமும் கூடவே சேர்ந்து வரும் இல்லையா? அந்த பயம் இருக்கிற வரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்.” என முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் பெயர்தான் அது. அவர் ஆண்ட 2 ஆண்டுகளில்இங்கே செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது. அரசு ஏடுகளில் ஸ்ரீ மறைந்து திரு பிறந்தது. மெட்ராஸ் ஸ்டேட் மறைந்து 'தமிழ்நாடு' பிறந்தது.
இப்படி அரசியலில் தவிர்க்க முடியாத சிம்மசொப்பனமாக இருந்த அண்ணா இலக்கியத்திலும் திரையுலகிலும் மாற்றங்களைச் செய்திருக்கிறார். கலை கலைக்கானதா ? கலை மக்களுக்கானதா? என்ற கேள்வி இன்றும் எழுகிறது. இதற்கு அண்ணா “கலை வழியாக மக்கள் அறிவைப் பெருக்கலாம்; அரசியல் விழிப்பை உருவாக்கலாம்: சமூக சீர்திருத்தம் செய்யலாம். நாட்டின் மேம்பாட்டிற்கு, வருங்காலத்தில் கலை, வலிமை மிக்க சாதனமாக அமையப் போகிறது.” என்று அன்றே பதில் கூறியிருக்கிறார். "Yes.. I represent the man in the street " நான் சாலையோரத்து சாரசரி மனிதனின் பிரதிநிதி" என்று பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த அவரது குரல் செல்லுலாய்டின் மரபையும் மாற்றி எழுதியது.
சித்திரத்தில் நிழல் பார்த்த தமிழ் சமூகம் நிஜம் பார்க்க ஆரம்பித்தது. திரையில் முதன் முதலாக மனிதர்கள் அசைய அறிவியலின் உன்னதம் கண்டு பிரம்மித்த காலக்கட்டம் அது. அதுநாள்வரை கோயிலில் கண்ட சிலைகளை. புராண இதிகாச கதைகளை திரையில் பார்க்க வர கைத்தட்டி ஆர்ப்பரித்து வந்தனர். அப்போது பாரதிதாசன் அச்சூழலை பார்த்துக் கவிதை எழுதுகிறார்.அண்ணாபாரதிதாசன்"எனது தமிழர் படம் எழுதுகிறார்கள் ஒன்று பத்தாக நூறாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதில் நம் அழகுத் தமிழ் தான் குறைவாக உள்ளது. தெலுங்கு கீர்த்தனங்கள், வடமொழி சொற்கள் அதிகமாக உள்ளது. உடைகள் கூட நமது உடைகள் அல்ல. ஒன்று கூட எனது தமிழ் அருமை பேசவில்லை. வீழ்ந்தவர் பக்கம் நிற்கவில்லை. ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் முதலாளி கூட்டம் பக்கம் நிற்கிறது. எப்போது எம் ஏழைகளின் கதைகளை இந்த திரைக் காட்டும்?" என்று காட்டமாக கவிதை ஒன்றை எழுதி குமறுகிறார்.
அண்ணா அக்காலத்தில் தான் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருந்தார். மதுரை பல்கலைக்கழகம் ஒரு ஆய்வுக் கட்டுரையில் அவரது எழுத்துக்களில் பொதிந்துள்ள திராவிட, பொதுவுடைமை சித்தாந்த கருத்துக்களுக்காக அவர் `பிளாக் கம்யூனிஸ்ட்' என்று அழைக்கப்பட்டதாக கூறுவார்கள். அப்படி இருந்தவர் நாடகத்தின் பக்கமும் தன் கலை பார்வையைத் திருப்பி இருந்தார். அந்த நாடகத்தின் பொறி சினிமாவின் திரை சீலை மீதும் பட “தீ பரவியது”. அவரது கதைக்களம் வீழ்ந்து கொண்டிருக்கிற பாமர மக்களின் வாழ்வைச் சொல்ல, வசன வீச்சு அடுக்குமொழிகளில் செந்தமிழ் மொழியில் அடிமைத்தனத்தை விரட்ட குமுறிய பாரதிதாசனின் ஏக்கம் தீர ஆரம்பித்தது.
பெரியார் மீது மிகவும் பற்று கொண்ட அண்ணாவின் கருத்தமைப்புகளில் பெரியாரை ஈர்த்த மேற்கத்திய எழுத்துக்களை எழுதிய பெர்னாட்ஷா, இப்சன் ஆகியோரின் அறிவுசார் தரவுகள் வெளிப்பட்டன. புராண உலகத்தை மட்டுமே கண்ட ரசிகர்கள் தங்களைப் போன்ற மனிதர்களை திரையில் பார்க்க ஆரம்பித்தார்கள். சுருங்கக் கூறினால் காட்டை பற்றிய கதையில், இதுநாள் வரையிலும் வேடர்களை மட்டும் காண்பித்த வெள்ளித்திரை வரிப்புலிகளின் கதைகளையும் காட்டத் தொடங்கியது.
முதன் முதலில் அண்ணா பற்ற வைத்த நெருப்பு, இயக்க மேடைகளில் வெற்றிகரமாக நிகழ்ந்துவந்த `வேலைக்காரி' நாடகத்தைத் திரைப் பிரவேசம் செய்தது. ஜுபிடர் மூவிஸ் தயாரிக்க அண்ணா இதற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதினார். தமிழ்த்திரை ஒரு புதிய பாணி துள்ளு தமிழ்ப் பேச்சுக்குக் களமானது. அதில் ஆனந்தன் என்னும் முதன்மைப் பாத்திரம் காளிமாதாவைக் கேள்வி கேட்கிறான். திரையரங்கம் முதன்முறையாக பகுத்தறிவு வாதத்திற்கு செவிமடுக்கிறது. தெய்வங்கள் பேசக் கேட்ட ரசிகக் கூட்டம், பாமரன் பேச தெய்வம் கேட்பதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறது.
இந்த வெற்றியை கண்ட பணமுதலாளிகள் அண்ணாவை படத்திற்கு எழுத அணுக அவர்கள் செல்வத்தை தம் கருத்தியல் பிரசாரத்துக்கு மாற்றிக் கொண்டார். அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் தமது கருத்தியலுக்கு எதிரான கதைகளை படமாக்க அவர் பங்களிப்பு செய்ததில்லை. அண்ணாவின் 'நல்லதம்பி' திரைப்படம் மக்களுக்காக சிறை சென்று வந்த கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்காக எழுதப்பட்டது. அதில் ஜமீன்தாரி முறையை எதிர்த்து கூட்டுபண்ணை எனும் சமதர்மத்தை பேசி இருப்பார் பேரறிஞர்.நல்லதம்பி
அடுத்ததாக “ஓர் இரவு” தொடங்கி பல படங்களுக்கு கதைகளையும் சில படங்களுக்கு வசனங்களையும், திரைக்கதையையும் எழுதித் தந்தார் அண்ணாத்துரை. அவரது கதைகள் யாவும் “யாருக்கும் தாழாமலும், யாரையும் தாழ்த்தாமலும், யாருக்கும் அடிமையாகாமலும், யாரையும் அடிமைப்படுத்தாமலும் நல்வாழ்வு வாழ வேண்டும்” என்கிற அவருடைய லட்சிய வாக்குப்படியே இருந்தது. அவரில் தொடங்கிய பயணம் அவரது தம்பி கருணாநிதி, எம்.ஆர்.ராதா என அடுத்தடுத்து மக்கள் படைப்புகளுக்கு வழிவிட்டது. ஒருபுறம் இது பிரசாரப்படம் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. ஆனால் மக்கள் இந்தப் படங்களைத் தொடர்ந்து வெற்றி பெற வைத்தாகக் கூறுகிறது வரலாற்று விமர்சனங்கள்.
அண்ணா தனது தம்பிகளுக்கு இவ்வாறு கடிதம் எழுதுகிறார், “ படம் எடுப்பதைவிட சமுதாயத்தில் நடைபெறும் சங்கடமான கோணல்களின் பக்கம் 'காமிரா'வைக் கொண்டு செல்ல வேண்டும். தன்னைச் சுற்றி வளர்ந்து கிடக்கும் சமுதாயக் கேடுகளைக் கண்டு மனிதன் நகைக்கிறான்! துடிக்கிறான்! 'ச்சு, ச்சு' என்று பரிதாபப்படுகிறான்! ஆக அவனே, அந்த சமுதாயக் கேடுகளுக்கு ஆட்பட்டவனாக இருக்கலாம் அல்லது பலரை ஆட்படுத்தியவனாக இருக்கலாம். அவனே அந்தக் காட்சிகளைக் கண்முன் காணும்போது, அதில் ஏதோ ஒரு விசித்திரம் இருப்பதாக அவன் உள்ளத்தில் தைக்கும் சூழ்நிலை இருக்கிறதே அதுதான் , புதுமை காண விரும்பும் சமுதாயத்தின் விடிவெள்ளி” என்கிறார். அண்ணா, கருணாநிதி
இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை பேசியே ஆக வேண்டும் என்கிற ஒரு கட்டாயம் இருக்கிறது. எளிய மக்களை கேலி செய்யக்கூடாதென்ற பொறுப்புணர்வு திரைக்கதையில் வரத் தொடங்கியிருக்கிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால் அது வேறொன்றுமில்லை அண்ணா தன் தம்பிகளுக்கு செல்லுலாய்டின் வழி விட்டுச்சென்ற விடிவெள்ளியின் வெளிச்சம் என்றே தோன்றுகிறது!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சி.என்.அண்ணாதுரை!
http://dlvr.it/TDFgKm
Sunday, 15 September 2024
Home »
» அண்ணா: `வெள்ளித்திரையில் சாமானியனின் குரல்' - தமிழ் சினிமாவின் நவீன முகத்துக்கு முன்னோடி