ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மரணித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடற்தகுதித் தேர்வில் 10 கிலோ மீட்டர் தூரம் உச்சி வெயிலில் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்துள்ளனர். பணியிலிருந்து காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஜார்கண்ட் முழுவதும் ஆகஸ்ட் 30ம் தேதி, 7 மையங்களில் காவலர் உடற்தகுதித் தேர்வு நடந்துள்ளது. இதில் 1,27,772 இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில், 21,582 பெண்கள் உட்பட 78,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 22ல் தொடங்கிய ஆட்சேர்ப்பு செயல்முறை பல கட்டங்களாகச் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
உடற்தகுதித் தேர்வில் இறந்தவர்கள், ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கலாம் அல்லது தேர்வுக்கு முன்பாக எனர்ஜி ட்ரிங்குகளை குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நின்றதும், சுட்டெரிக்கும் வெயிலும் கூட மரணத்துக்கு வழிவகைச் செய்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.ஹேமந்த் சோரன்
"துரதிர்ஷ்டவசமாக இறந்த 11 பேர் குறித்தும் இயற்கைக்கு மாறான மரணம் (unnatural death) என வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர்கள் மரணத்துக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. உண்மையான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அனைத்து மையங்களிலும் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியிருக்கிறார். பிற்பகலில் நடைபெறும் ஓட்டம் முதலான உடற்தகுதித் தேர்வுகளை மாலை 4:30 மணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹேமந்த் சோரன் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறதா அல்லது மரணத்தையா வழங்குகிறதா என எதிர்க்கட்சியான பா.ஜ.க கேள்வி எழுப்பியிருக்கிறது.பாபுலால் மராண்டி
"ஹேமந்த் சோரன் அரசின் நிர்வாகம் மற்றும் பிடிவாதத்தால் உடற்தகுதித் தேர்வு ஓட்டம், 'மரணத்துக்கான பந்தயமாக' மாறியுள்ளது." என்று பா.ஜ.க-வின் ஜார்கண்ட் மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
மேலும், உடற்தகுதித் தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நள்ளிரவு முதல் வரிசையில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆட்சேர்ப்பு மையங்களில் போதுமான சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
http://dlvr.it/TChSGQ
Monday, 2 September 2024
Home »
» Jharkhand: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரணம் - மருத்துவர்கள் சொல்வதென்ன?