கலவரம் பாதித்த மணிப்பூரில் மீண்டும் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. குக்கி, மேதி இனக்குழுக்கள் மீண்டும் மோதலைத் தீவிரப்படுத்தியிருப்பதால், மணிப்பூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அமைதி வேண்டிப் போராட்டங்களையும் தொடங்கியிருக்கிறார்கள் மணிப்பூர் மக்கள். என்ன நடக்கிறது அங்கே..?
என்ன பிரச்னை?
மணிப்பூரின் மொத்த மக்கள்தொகையில் 53 சதவிகிதம் பேர் மேதி இன மக்கள். மாநிலத்திலுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் பரவி வாழும் இவர்கள், `மலைப்பகுதிகளில் வாழும் நாகா, குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் நினைத்தால் பள்ளத்தாக்கு பகுதியில்கூட நிலம் வாங்கலாம். அதே நேரம், நாங்கள் மலைப்பகுதியில் நிலம் வாங்கச் சட்டம் அனுமதிக்கவில்லை. இதே சூழல் தொடர்ந்தால், மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் எங்களுக்கு வாழ்விடமே இருக்காது. மியான்மர், வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகளாலும் எங்கள் வாழ்விடத்துக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, எங்களையும் பழங்குடி பட்டியலில் இணையுங்கள்' என்றனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், `மேதி மக்களைப் பழங்குடி பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்' என்ற உத்தரவைப் பிறப்பித்தது.மணிப்பூர் மக்கள்!பா.ஜ.க-வை விரட்டியடித்த மணிப்பூர் மக்கள்!
இந்த உத்தரவைக் கடுமையாக எதிர்த்த நாகா, குக்கி பழங்குடியின மக்களோ, ``மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருக்கின்றன. சட்டமன்றத்தில் 40 எம்.எல்.ஏ-க்கள் மேதி சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். மக்கள்தொகை, அரசியல் பிரதிநிதித்துவம் என இரண்டிலும் அவர்களின் ஆதிக்கமே இருக்கிறது. தற்போது பழங்குடி அந்தஸ்தும் கொடுக்கப்பட்டால் எங்கள் கதி அவ்வளவுதான்'' என்றனர்.
இந்த உத்தரவைத் திரும்பப்பெறக் கோரி குக்கி மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க, வன்முறைக்காடானது மணிப்பூர். குக்கி, மேதி இனத்தின் கிளர்ச்சிக்குழுக்களுக்கு இடையேயான மோதலில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 60,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
மீண்டும் மோதல்!
ஒன்றரை வருடங்களாகியும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இருந்தும், கடந்த சில மாதங்களாக வன்முறைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் மணிப்பூரின் ஜிரிபாம், மேற்கு இம்பால் மாவட்டங்களில் குக்கி, மேதி இனக்குழுக்கள் ஆயுத மோதலில் ஈடுபட்டன. இதில் சுமார் 10 பேர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மேலும் இந்த மோதலில், டிரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் என போர் ஆயுதங்கள் சில பயன்படுத்தப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநில முதல்வர் பிரேன் சிங்கும், காவல்துறை தலைமை இயக்குநரும் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின. அந்தப் போராட்டத்தில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் மோதல் வெடித்து, பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூர்
இந்தப் புதிய வன்முறைக்கு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான ஆடியோ ஒன்று காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. மாநில முல்வர் பிரேன் சிங் பேசியதாகச் சொல்லப்படும் அந்த ஆடியோவில், மேதி இனத்துக்கு அவர் ஆதரவாகச் செயல்பட்டதாக, அவரே சொல்லும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன. பிரேன் சிங் தரப்பு, `இது போலி ஆடியோ' என்று மறுத்திருந்தாலும், இது குக்கி இனக்குழுக்களை கோபப்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழு, இந்த ஆடியோ தொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ``மணிப்பூர் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், உங்கள் 'இரட்டை இஞ்சின் ' அரசாங்கம், அதனைத் தணிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மணிப்பூர் முதல்வரை நீங்கள் ஏன் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை... அரசு இயந்திரத்தை கிட்டத்தட்ட முடக்கி, அருவருப்பான அறிக்கைகளை வெளியிட்ட குற்றவாளி அல்லவா அவர்... பதவி நீக்கம் நடந்துவிடாமல் தடுக்கும் நோக்கில், வெட்கமின்றி ராஜினாமா நாடகம் நடத்தியவர் அல்லவா அவர்?
நீங்கள் ஏன் இவ்வளவு இரக்கமற்றவராக இருக்கிறீர்கள்... ஏன் மணிப்பூருக்கு இதுவரையிலுல் செல்லவில்லை... மணிப்பூர் மக்களைப் பாதுகாப்பதில் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறீர்கள் பிரதமரே'' என்று கூறியிருக்கிறார்.
உள்நாட்டுப் போர்?
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``மணிப்பூர் பற்றி எரிய அனுமதித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. உலக நாடுகளுக்குச் சென்று, தலைவர்களைக் கட்டியணைக்கும் அவருக்கு, மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லையா?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். பிரேன் சிங் - மோடி “பிரதமர் வாய்திறந்தால், நான் வாயை மூடிக்கொள்கிறேன்!”- அதிரவைத்த மணிப்பூர் எம்.பி-யின் கன்னிப்பேச்சு!
மணிப்பூர் வன்முறை மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ``உள்நாட்டிலேயே அமைதியை நிலைநாட்ட முடியாத பிரதமர் மோடி, உலக அரங்கில் அமைதி குறித்துப் பேசிக் கொண்டிருப்பது வேடிக்கைதான். உலகம் முழுவதும் இரண்டு இனக்குழுக்களிடையே நடக்கும் மோதலை உள்நாட்டுப் போர் என்றுதான் அழைக்கிறார்கள். அந்த வகையில், மணிப்பூர் கலவரமும் உள்நாட்டுப் போர் வகையில் தான் உள்ளது. உக்ரைன், காஸா போர் குறித்து கருத்துத் தெரிவிக்கும் மோடி, உள்நாட்டுப் போர் குறித்து எப்போது பேசப் போகிறார்'' என்ற கேள்வியை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். இனியாவது மணிப்பூரில் அமைதிய நிலைநாட்ட நடவடிக்கைகளை எடுக்குமா மோடி அரசு?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
">
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY
">
https://bit.ly/3PaAEiY
/>
http://dlvr.it/TD5ynw
Wednesday, 11 September 2024
Home »
» MANIPUR: மீண்டும் வெடித்த வன்முறை... மணிப்பூரில் நடப்பது உள்நாட்டுப் போரா?