சென்னை : எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் கட்ட முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம்:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று பகல் 11-30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், பெஞ்ஜமின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலை கீழ்க்கண்டவாறு தெரிவித்துக் கொள்கிறது.
இரங்கல்:
"தமிழகத்தின் முதன்மைக்கும், தமிழ் இனத்தின் மேன்மைக்கும், தமிழகமே முன்மாதிரி மாநிலம் என்கிற பெருமைக்கும், தன் வாழ்நாளெல்லாம் உழைத்து, உழைத்து, தன் வாழ்வையே அர்ப்பணம் செய்து தியாக தீபமான தமிழக முதல்வர் ஜெயலலிதா சமூகநலம், கல்வி, அமைதி, வளம், வளர்ச்சி இவை யாவிலும் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற லட்சியத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் மக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்து உழைத்த ஓர் ஒப்பில்லாத் தாய். அனைத்து மக்களாலும் ‘அம்மா’ என்று மனம் உருக அழைக்கப்பட்ட தன்னலமில்லா ஈடு இணையற்ற மாபெரும் தலைவியின் வாழ்க்கைப் புனிதத்தை இந்நாளில் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறோம்.
கற்கும் காலத்திலேயே முதலிடம் :
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் எதற்காகவும், எப்போதும், எவரிடத்திலும், கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவதே தம் வாழ்வின் இலட்சிய நோக்கமாகக் கொண்டு உழைத்த தங்கத் தாரகையின் தூய துறவுமனத் தொண்டுகளை இந்நாளில் நினைவலைகளில் நிறுத்தி, நெஞ்சார நன்றி கூறுகிறோம்.
அன்புக்கு இலக்கணமான அன்னை சந்தியா - ஜெயராம் தம்பதியரின் அன்பு மகளாக, அழகும், அறிவும், கருணையும், கம்பீரமும் கலந்து வடிவெடுத்து, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரில 24 ஆம் நாள் இப்பூமிப் பந்தில் பாதம் பதித்தார். இன்று குழந்தை, நாளை இந்த குவலயத்தையே ஆளப் போகும் குலமாதா என்பதை பிள்ளைப் பிராயத்திலேயே பிறருக்கு உணர்த்தும் விதத்தில், பள்ளி வளாகம் அனைத்திலும் முதலிடத்தை ஜெயலலிதாவே பிடித்தார் ! கற்கும் காலத்திலேயே கற்பிக்கும் அளவுக்கு அறிவும், ஆற்றலும் மிளிர்ந்தோங்கி நின்றார். இசையும், நடனமும் இயல்பாகவே அவரிடம் வெளிப்பட்டன.
`இரக்கப்படும் இதயத்தைவிட உதவுகிற கரங்களே உன்னதமானது’ என்னும் கருணை உணர்வையும், வள்ளல் மனதையும் தன்னுள் கொண்ட அம்மா, பரிவு, பாசம், தைரியம், நாணயம், பணிவு, நம்பகத்தன்மை, அடக்கம், அறிவாற்றல், அச்சமின்மை என சான்றோர்களுக்கான அத்தனை உயர் பண்புகளையும், குணங்களையும் தன்னுள் இயல்பாகக் கொண்டு வளர்ந்தார்.
நடமாடும் நூலகம் ஜெயலலிதா :
இளம் வயதினிலேயே திரைப்படத் துறையில் கால் பதித்த முதல்வர் ஜெயலலிதா, தனது திரை வாழ்வில் அனைவரும் நினைவு கொள்ளும் விதமான பாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்து, அனைவரது மனதிலும் திடமாக இடம் பிடித்தார். படப்பிடிப்பின்போது அவர் நடிப்புக்கு இலக்கணமானார். இடையே ஓய்வு கிடைக்கும் ஒவ்வொரு வினாடியிலும் தானே ஒரு நடமாடும் நூலகமானார். இன்பத் தமிழில் ஏற்றம்பெற்ற முதல்வர் அம்மா, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என எண்ணற்ற மொழிகளிலும் புலமை பெற்றவர் ஆவார். எனவே, பன்மொழியிலான புத்தகங்களைப் படித்து, அனைத்து தளங்களிலும் அறிவாற்றலை வளர்த்துகொண்டது மட்டுமல்லாமல் இந்திய நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவரும் வியப்படையும் வகையில் தனது பொது அறிவை உலகுக்குப் புலப்படுத்தினார்.
தனது திரை உலக வாழ்வில் சிறந்த நடிகையாகவும், பாடகியாகவும், புகழ்பெற்று, பலப்பல விருதுகளை பெற்று, கலை உலகத் தங்கத் தாரகையாய் மின்னிக்கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆர்., 1982 ஜூன் மாதம் 4-ம் தேதி, அ.தி.மு.க அடிப்படை உறுப்பினராக்கி, அரசியல் பயணத்திற்கு அடிகோலினார். அதைத் தொடர்ந்து, கடல்போல் கூடியிருந்த கடலூர் பொதுக்கூட்டத்தில், ‘பெண்ணின் பெருமை’ என்னும் தலைப்பில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியதை உற்றுக் கேட்ட தமிழ் உலகம், இனி திராவிட அரசியலை வழி நடத்தப்போகும் திருவிளக்கு இவர்தான் என்பதை அன்றைக்கே குறித்துக்கொண்டது.
அண்ணா பெயரிலான இயக்கத்தை வழிநடத்தியவர்:
1983-ம் ஆண்டு அ.தி.மு.க கொள்கை முழக்கங்களை தமிழ்நாடு முழுவதும் பறைசாற்றிட, எம்.ஜி.ஆர்., முதல்வர் ஜெயலலிதாவை, கொள்கை பரப்புச் செயலாளராக்கியதோடு, தனது உலகம் வியந்த உன்னதத் திட்டமான சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் நியமித்தார். அதைத் தொடர்ந்து, 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை, பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற, ஜெயலலிதாவுக்கு பேரறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கை ஒதுக்கப்பட, அதன்மூலம், அண்ணாவின் பெயரிலான இயக்கத்தை, நாளை, உலகமே அன்னாந்து பார்க்கும் வண்ணம் வழிநடத்தப்போவது முதல்வர் ஜெயலலிதா தான் என்பதை காலமும் குறிப்பால் உணர்த்தியது.
நெருப்பாற்றில் நீந்தியவர் :
அன்றைய மாநிலங்களவை விவாதங்களில், மாநில உரிமை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்தெல்லாம் ஜெயலலிதாவின் சொற்சிலம்பம் கண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உச்சிமோந்து பாராட்டினார். இவ்வாறாக தெள்ளிய நீரோடையாக சென்று கொண்டிருந்த, முதல்வர் அம்மாவின் பொதுவாழ்க்கைப் பயணம், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, நெருப்பு ஆற்றில் நீந்துகிற நெருக்கடி ஆயிற்று. ஆனாலும் திரண்டுவந்த சோதனைகளையெல்லாம் எதிர்கொண்டு, தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து, இடர்கள் யாவையும் வெற்றிகண்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளராக முடி சூடினார் முதல்வர் ஜெயலலிதா.
தலைவர்களுக்கு மத்தியில்...:
தொடக்கம், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி - இவைதான் ஒவ்வொருவர் வாழ்வின் சாராம்சங்களாக இருக்கும் நிலையில், தமது பொது வாழ்க்கை தொடங்கி, அரசியல் போர்க்களங்களை படிப்படியான புகழ் களங்களாக மாற்றி, ஒப்பில்லா உச்ச நிலையை தமதாக்கிக் கொண்டு, அந்த உச்சத்திலேயே பல வெற்றிச் சரித்திரங்களை அடுக்கடுக்காய் பதித்து விட்டு, இன்று பிரியா விடை பெற்றிருக்கும் நமது பேரறிவுத் தாய் முதல்வர் ஜெயலலிதா, ஆறறிவுத் தலைவர்களுக்கு மத்தியில் அவதரித்த நூறறிவு அதிசயமென்றால் அது மிகையல்ல.
ஒப்பில்லாப் பெருந்தலைவி:
1982 முதல் 2016 வரை முப்பத்தி ஐந்து வருட பொதுவாழ்வு, அதில் இருபத்தெட்டு வருடங்கள் கழகத்தின் பொதுச்செயலாளர்! ஆறாண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினர், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே எதிர்க்கட்சித் தலைவர், ஆறு முறை முதலமைச்சர், 50 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, பாராளுமன்றத்தின் தரைதளத்தில் திராவிட இயக்கத்திற்கென முதல் அலுவலகம் அமைக்கும் உரிமையோடு, கழகத்தை முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் மூன்றாம் பெரும் இயக்கம் ஆக்கிய ஒப்பில்லாப் பெருந்தலைவி.
தேர்தல்களில் இமாலய வெற்றி:
உள்ளாட்சி, மாநகராட்சித் தேர்தல்களில் தமிழக அரசியல் வரலாறு காணாத வெற்றி, இடைத் தேர்தல்கள் யாவிலும் இமாலய வெற்றி, 1991, 2001, 2011, 2016 என சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அபார வெற்றி, இவற்றோடு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமது அரசியல் ஆசானின் வழியிலேயே ஆட்சியில் இருந்துகொண்டு, ஆட்சியைத் தொடரும் விதமாக, 2016-ன் சட்டமன்ற பொதுத் தேர்தலில் சரித்திர வெற்றி பெற்று, வாகைப் பூக்களால் தோரணம் கட்டி வரலாற்றினைப் படைத்த வெற்றித் திருமகள் அம்மா அவர்கள் .
எத்தனையோ துன்பங்களை எதிரிகள் ஏவினாலும், அத்தனையும் எதிர்கொண்டு, புத்தனைப் போல் நின்று பொறுமை காத்து, சத்தியமே வெல்லும் என்பதை சரித்திரமாய் சொன்ன போதி மரத்துப் பூங்கொத்து அம்மா. தன்னலத்தை மறந்து, தமிழர் நலம் ஒன்றையே நினைந்து, தன் உடல்நலத்தை பொருட்டாகக் கருதாது, உருகும் மெழுகாக ஒளிவீசிக் கரைந்தவர்,
தங்கம் தந்த "தங்கத்தாரகை":
1965-ல் இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின்போது, அன்னைத் திருநாட்டுக்கு ஆபத்து என்றதுமே, தான் அணிந்திருந்த பொன் நகைகளை அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் அள்ளிக் கொடுத்த வள்ளல் தங்கம்! தங்கம் தருகிற கை எங்கள் ‘தங்கத் தாரகை’ என்று தரணி போற்றும் தாய்க் குலத்தின் காவலர்! இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி என்னும் அவதாரம் எடுத்தவர். சளைக்காத சட்டப் போராட்டங்களால் காவேரி, முல்லை பெரியாற்று உரிமைகளை வென்றெடுத்த சாதனையாளர். அலைமீது வலைகொண்டு வாழும் மீனவர் துயர்துடைக்க, கச்சத்தீவு மீட்புக்கு களமிறங்கிய போராளி.
கருணை தாய்:
ஈழத்தில் நடந்த இன அழிப்புக் கொடூரங்களுக்காக போர்க்குற்ற விசாரிப்பும், பொருளாதாரத் தடையும் வேண்டும் என சட்டப் பேரவையில் புரட்சிகர தீர்மானம் இயற்றி, அனைத்துக் கட்சிகளையும் ஓர் குரலாய் ஒலிக்க வைத்த ஆளுமைத் திலகம். அடிப்படையில் தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே தன் அரசியல் வாழ்வெல்லாம் தீர்க்கமாகக் கொண்டிருந்தவர். ஈழத் தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசின் இனவாதத்தை கருத்தில்கொண்டு, தனி ஈழம் ஒன்றே தீர்வு என திடமாக முடிவெடுத்து, அதனை சட்டமன்றத்தின் தீர்மானமாக ஒலித்ததும், தமிழக முகாம்களில் தஞ்சம் புகுந்திருந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து மக்கள்நலத் திட்டங்களின் சலுகைகளையும் இம்மி குறையாது வழங்கியதோடு, உதவித் தொகையையும் சேர்த்தே வழங்கி, அவர்கள் மறுவாழ்வுக்கு வழிவகுத்த ஈகையின் இருப்பிடமும் முதல்வர் ஜெயலலிதா தான். இவை யாவிற்கும் மேலாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகாலமாய் சிறையிருப்பவர்களை மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப் பேரவையில் சரித்திரப் புகழ்மிக்கத் தீர்மானத்தை இயற்றியதும் கனிவுள்ளத் தாயின் கருணை தான்.
பெண்களை விஞ்ஞான யுகத்திற்கு அழைத்து வந்தவர்:
பெண்சிசுக் கொலைக்கு முடிவு கட்டி குப்பையிலே வீசப்பட்ட கொத்துப் பூவை, தொட்டில் குழந்தையென தூக்கி வளர்த்து, மட்டில்லா மகிழ்ச்சியினை மாதர்குலத்திற்குத் தந்திட்ட மகராசி. வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்ட உலகத் தரக் கல்வி ஒன்றே உயர்வு தரும் என்று, மாணவர்க்கு மடிக்கணினி வழங்கிய மகராசி. இடைநிற்றல் இன்றி கல்வி பயில உதவித் தொகை, தூரம் கடக்க மிதிவண்டி, பேதம் மறைக்க சீருடைகள், இன்னும், வண்ண பென்சில்கள், வரலாறு, புவியியல் வரைபடங்கள், காலணிகள், கணித உபகரணங்கள் என அள்ளிக் கொடுத்த வள்ளல்.
விலையில்லா அரிசி, அம்மா உணவகம் என்று திட்டங்கள் தந்து, பசிப்பிணி என்பதே பாசத் தாய் ஆளும் எல்லைக்குள் இல்லை என உறுபசி துடைத்திட்ட ஒப்பில்லா அன்னை. இல்லத்தரசிகளின் இன்னல் களைய, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வீடுதோறும் வழங்கி, அம்மி குழவிகளோடு மல்லுக்கட்டிய கற்காலத்திலிருந்து, ஏழை எளியோரின் இல்லங்களை விஞ்ஞான யுகத்திற்கு அழைத்து வந்த வெற்றித் திருமகள்.
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடும் மக்களுக்கு, கறவை மாடு, ஆடுகள் வழங்கி வெண்மை புரட்சிக்கு வித்திட்ட விவேகத் தாய். குருவிக்கும் கூடுண்டு, எனக்கென வீடு இல்லையே! எனும் ஏக்கத்தில் தவித்த எளியோர்க்கு, சூரிய மின் வசதியோடு, பசுமை வீடு வழங்கிய பொன்மனத் தாய்.
தொலைநோக்கு திட்டம் தந்தவர்:
உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு, சிறந்த மனிதவள மேம்பாடு இவற்றால் ஒரகடத்தில் கார் உதிரிபாகத் தொழிற்சாலை, காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டும் தளம், திருவரங்கத்தில் புதிய காகித அட்டை தயாரிக்கும் ஆலை, தேசிய சட்டப்பள்ளி என்றெல்லாம் வளர்ச்சியைப் பெருக்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வறுமையை அடியோடு துடைப்பதையே லட்சியமாக்கி, "தொலைநோக்கு 2023" என்ற திட்டத்தினால், வீறுதமிழ் பூமிக்கு வெற்றிப் பாதை அமைத்திட்ட வேதா இல்லம் தந்த வீரத் துறவி முதல்வர் ஜெயலலிதா .
முதியோருக்கு உதவித்தொகை:
ஆதரவற்றோர், முதியோர் மற்றும் கணவனை இழந்தோரை கருணையோடு அரவணைக்கும் விதமாக மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கிய ஒப்பில்லா உயர்வுள்ளம். அன்னைத் தமிழ் மொழி, அது விண்ணைத் தொடும் வண்ணத் தமிழ்மொழி என்று அரிதாள் அறுக்கையில் மறுதாள் வளரும் தஞ்சைத் தரணியில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு கண்ட எட்டாம் அதிசயம்.ஆட்சி பீடத்தில் அமர்ந்த முதன்முறையிலேயே 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கி, சமூக நீதி காத்த வீராங்கனை. அரசியல் வானில் அச்சம் அறியா சிம்மம், ஆற்றல்களின் பிரம்மம், அதிசயங்களால் வடிவெடுத்து வந்த அரசியல் மையம், சாதிமதப் பூசல்களுக்கு சவுக்கடி கொடுத்து, சமத்துவத்திற்கு அடையாளமாய் சபாநாயகர் இருக்கையில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் தலைப்பாகை சூட்டிய சமதர்மச் சுடரொளி.
வாடிய பயிர் கண்டு வாடிய நவீன வள்ளலார்:
மகளிர் காவல் நிலையம், பெண் கமாண்டோ படை அமைத்து ஆணுக்குப் பெண் சளைத்தவர் இல்லை என்று எடுத்துக்காட்டிய வீரச் சுடர் ஒளி, குடிமகனுக்கு இணையாக குடிமகள் என்னும் சொல்லை பயன்படுத்த ஆணையிட்டு, தாயின் முதலெழுத்தை குழந்தையின் தலைப்பெழுத்தாய் பயன்படுத்த அனுமதி அளித்து, மகளிர் நீதிமன்றங்கள் அமைத்து, ஏனையோர்க்கு வழிகாட்டி, தீரமிகு மங்கையர்க்கு கல்பனா சாவ்லா விருது தந்து, பெண்ணினத்திற்கே பெருமை சூட்டிய பேரறிவுத் தாய். பணிபுரியும் பெண் அரசு ஊழியர்க்கு பேறுகால விடுப்பை ஒன்பது மாதமாக உயர்த்தி, உலகுக்கே வழிகாட்டிய தனிப் பெரும் கருணை. மண்ணுக்கும் மழைநீர் வார்த்து, புவி வெப்பமாவதைத் தடுக்க, மழைநீர் சேகரிப்புத் திட்டம் தந்து, முன்கூட்டியே முதலில் சிந்தித்த இயற்கை ஆர்வலர். யானைகளுக்குப் புத்துணர்வு முகாம்கள் அமைத்து, "வாடிய உயிர் கண்டு வாடினேன்" என்ற நற்றமிழ் பூமியின் நவீன வள்ளலார். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு இறையென்று வைக்கப் படும்" என்ற ஈரடிக் குறளுக்கு வடிவம் கொடுத்த இலக்கண முதல்வர். இந்திய தேசத்தின் இன்ன பிற மாநிலங்கள் மட்டுமல்ல, உலகின் எண்ணில்லா நாடுகளுக்கும் தம் ஆட்சியே முன்மாதிரி என்னும் இலக்கணத்தை வகுத்துச் சென்றிருக்கும் ஈடு இணையில்லா முதல்வர்.
அன்னை தெரசா வாழ்த்திய தியாகங்களின் சிகரம்!:
‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்னும் மாதவத்தில் வாழ்ந்து, மண்ணுலகிலிருந்து விடைபெற்றிருக்கும் முதலமைச்சர் இதய தீர்க்கம் நிறைந்த தியாகத்தின் வழியில் இம்மி அளவும் விலகாது சத்தியத்தில் பயணிப்போம்.
"எனக்காக ஏதுமில்லை, எல்லாமும் என் மக்களுக்கே" என்று உரக்கச் சொன்ன உத்தமத் தாயின் லட்சிய தீபத்தை உயிராகக் காப்போம்.வங்கக் கடலோரம் உறங்குகிற வாஞ்சைத் தாய், தன் சுட்டுவிரல் நீட்டிய பாதையில் அரசு சுழன்று பணி செய்கிறதா என்று கண்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதையே எங்கள் நெஞ்சத்தில் நிறுத்தி, அம்மா காட்டிய வழியில் அயராது உழைப்போம் என உளமாரச் சத்தியம் செய்கிறோம்!
தாய்மையின் வடிவமாய், தமிழினத்தின் வரைபடமாய்,தனிமனித ராணுவமாய், தாயுருவத் தெய்வமாய், புரட்சிகளின் புகலிடமாய், பொன்மனத்தின் முதலிடமாய், வீரமே சுவாசமாய், வெற்றிகளின் விலாசமாய் தான் வடித்திட்ட சரித்திரத்தை வருங்காலத் தலைமுறை படித்திங்கே பண்படட்டும், பயன்பெறட்டும் என்றே வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தங்க சரித்திரமே! வணங்கி நடப்போம் உன் வழித்தடமே! என்று இந்நாளில் உறுதிமொழி ஏற்று, இந்த அமைச்சரவை முதலமைச்சர் ஜெயலலிதாவிந் மறைவிற்கு தனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
பாரத ரத்னா வழங்க தீர்மானம்:
நம் அனைவரின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டமன்ற பேரவையில் வைப்பதற்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மைய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு உருவ வெண்கலச்சிலை அமைப்பதற்கு மைய அரசிடம் கோருவதற்கும், முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் அமைப்பதற்கும், பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ. ஜெயலலிதா நினைவிடம் என பெயர்மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
English Summary:
Chennai: MGR. Memorial campus, were buried at the memorial to the late Chief Minister Jayalalithaa in the Rs 15 crore in Tamil Nadu at a Cabinet meeting chaired by Chief Minister Panneerselvam resolution passed yesterday. She was nominated for the Bharat Ratna to the central government.