பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் அளித்து புதிய நோட்டுகளை மாற்றுவோரின் கை விரலில் அழிக்க முடியாத மை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் குழுக்களாக சில நபர்களை நியமித்து தங்கள் பணத்தை பல்வேறு வங்கிகளில் தொடர்ந்து மாற்றி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
குறையாத கூட்டம்: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் கொடுக்கும் பணி தொடங்கி ஒருவார காலமாகிவிட்ட நிலையில் வங்கிகள், அஞ்சலகங்களில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. சில இடங்களில் பணத்தை மாற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
சிறப்புப் படைகள்: அப்போது, பணப்புழக்கம் குறைந்துள்ளதால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்ய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது தவிர கள்ள நோட்டுகள் புழக்கத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், கருப்புப் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படாமல் இருப்பதைத் தடுக்கவும் சிறப்புத் தனிப் படைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அழியாத மை
தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
சில வங்கிகள் பல நபர்கள் மீண்டும் மீண்டும் வந்து பழைய பணத்தை மாற்றிச் செல்வதாகவும், ஒரே நபர் வெவ்வேறு வங்கிகளுக்குச் சென்று பணத்தை மாற்றி வருவதாகவும் மத்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது.
கருப்புப் பணம் வைத்திருப்போர், குழுக்களாக நபர்களை நியமித்து இந்த முறையில் தங்கள் கருப்புப் பணத்தை மாற்றி வருவதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கும் வகையில் பழைய நோட்டுகளுக்கு புதிய நோட்டுகளை மாற்றும்போது பணத்தை மாற்றும் நபரின் விரலில் அழிக்க முடியாத மையால் அடையாளம் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நபர் மீண்டும், மீண்டும் வெவ்வேறு வங்கிகளுக்குச் சென்று பணத்தை மாற்றுவது தடுக்கப்படும்.
மை வைக்கும் திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற விதிகளை வங்கிகள் முடிவு செய்யும். உண்மையிலேயே பணம் தேவைப்படும் மக்களுக்கு ரொக்கம் கிடைப்பதை உறுதி செய்யவும், கருப்புப் பணம் மாற்றுவதைத் தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் பண இருப்பு: பொதுமக்கள் யாரும் வேறு நபர்களின் பணத்தை வாங்கி தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி கருப்புப் பணத்தை மாற்ற உதவக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களுக்குத் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக வங்கிகளுக்கு போதுமான அளவு ரொக்கம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, பணம் கிடைக்காது என்று பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றார் அவர்.
வலது கை விரலில்...
வங்கிகளில் பணம் மாற்றும்போது வலது கை விரலில் மை வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமாக தேர்தலின்போது வாக்காளர்களின் இடது கை விரலில் மை வைக்கப்படுவது வழக்கம். அதற்கு மாற்றாக வங்கிகளில் வலது கை விரலில் மை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது வங்கிகளில் வைக்கப்படும் மையால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதைத் தவிர்ப்பதற்காக வங்கியில் பணத்தை மாற்றுவோருக்கு வலது கை விரலில் மை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மை வழங்கும் நிறுவனம்
பெரு நகரங்களில் சில வங்கிகளில் செவ்வாய்க்கிழமை முதலே பணத்தை மாற்றுவோரின் விரலில் மைவைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்துக்கான கர்நாடக அரசுக்கு சொந்தமான மை மைசூர் பெயிண்ட் மற்றும் வார்னீஷ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுகிறது. தேர்தலின் போது வாக்காளர்களின் விரலில் வைக்கும் மையை, கடந்த 1962-ஆம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம்தான் வழங்கி வருகிறது. மை பாட்டில்களை போதுமான அளவுக்கு இருப்பு வைக்குமாறு அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.
"ஜன் தன்' கண்காணிப்பு
அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதிசெய்யும் ஜன் தன் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில் திடீரென அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்படுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதன் மூலம் கருப்புப் பணத்தை மாற்றும் முயற்சி நடைபெற அதிகம் வாய்ப்பு உள்ளது. ஜன்தன் திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் டெபாசிட் செய்ய முடியும். இப்போது அந்த வகை வங்கிக் கணக்குகள் பலவற்றில் ரூ.49,000 வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி வேறு நோட்டுகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?
செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத அடையாள மை வைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இது, பொதுமக்கள் மீது அரசு வைத்துள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது?
- திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா
ரூ.500, ரூ.1000 ஆகிய பழைய நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பாகிஸ்தானுக்கு மை, பாதுகாப்பு நூலிழை ஆகியவற்றை அளிக்கும் நிறுவனத்திடம் இருந்துதான் இந்தியாவும் அவற்றை வாங்கி வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது?
அகில இந்திய மஜ்லீஸ்-ஏ-தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி