பிரிட்டிஷ் அரசி எலிசபத்தின் அதிகாரபூர்வ லண்டன் இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனை , 369 மில்லியன் பவுண்டு அரச செலவில் புதுப்பிக்கப்படவுள்ளதாக பிரிட்டிஷ் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
10 ஆண்டு காலம் இந்த புதுப்பிக்கும் பணி நீடிக்கும்.
வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள இந்தப் பணிகளின்போது, ராணி எலிசபத், பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே தங்கியிருப்பார்.
பழையதாகிப்போன கேபிள்கள், ஈயக் குழாய்கள், வயர்கள் மற்றும் கொதிகலன்கள் ஆகியவை புதிதாக மாற்றப்படவேண்டும். இவைகளில் பல, இனியும் விட்டுவைத்தால், தீப்பிடிக்கலாம் அல்லது தண்ணீரால் சேதம் ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கிடையே, 60 ஆண்டு காலத்தில் முதன் முதலாக மாற்றப்படவிருக்கின்றன.
படிப்படியாக மேற்கொள்ளப்படும் வேலைகள், செலவிடப்படும் ''பணத்திற்குச் சிறந்த மதிப்பை'' தருவதாக அமையும் என்றும் இந்தப் பணிகள் நடைபெறும் போது, அரண்மனை அலுவல்களும் வழக்கம் போல் தொடர்ந்து நடக்கும் என்று ராணியின் அரண்மனை அலுவல்களுக்கான தலைமை அதிகாரி, டோனி ஜான்ஸ்டன்-பர்ட் கூறினார்.
ராஜகுடும்ப விவகாரங்களை கவனிக்கும் அறங்காவலர்கள் ( இதில் பிரதமர் மற்றும் பிரிட்டிஷ் நிதியமைச்சரும் அடங்குவர்) , தற்காலிகமாக ராஜமானியத்தை அதிகரிக்கப்பதன் மூலம் இந்தப் பணிகளுக்கு பணம் செலவிடப்படும் என பரிந்துரைத்துள்ளனர்.
சுயாதீன சொத்து நிறுவனமான, ராஜகுடும்பத்தின் சொத்துக்களிலிருந்து கிடைத்த இந்த ஆண்டு லாபத்திலிருந்து 15 சதவீதம், அதாவது சுமார் 43 மில்லியன் பவுண்டுகள், இந்த பணிக்கு ஒதுக்கீடாகத் தரப்படுகிறது. இந்த லாபம் பொதுவாக கருவூல நிதியில் சேர்ந்துவிடும்.
பழுது பார்க்க வழங்கப்படும் இந்த மானியம் லாபத்தில் 25 சதவீதமாக உயர்த்தபட வேண்டும் என்று அறங்காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை.
பேரழிவை தவிர்க்க எடுக்கும் நடவடிக்கை
தற்போது முதலீடுகளைச் செய்வதன் மூலம், ''வரும் ஆண்டுகளில், மிகவும் செலவு பிடிக்கக்கூடிய மற்றும் செய்யாவிட்டால் பேரழிவை விளைவிக்கக்கூடிய கட்டடப் பிரச்சனைகளை நாம் தடுக்க முடியும்,`' என ஜான்ஸ்டன்-பர்ட் கூறினார்.
''அரண்மனை கட்டிடம் மற்றும் நாட்டுக்கு சொந்தமான, விலைமதிப்பற்ற கலை பொருட்களின் சேகரிப்புகள் ஆகியவை, தீ விபத்து, வெள்ளம் மற்றும் சேதங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வண்ணம் அவசரமாக முற்றிலும் பழுது பார்க்க வேண்டிய தேவை உள்ளது, '' என்று நிதியமைச்சக அதிகாரிகள் கூறினார்.
1992ல் நடந்த தீ விபத்தில் வின்ட்சர் கோட்டையில் நேர்ந்த சேதத்தை சுட்டிக்காட்டிய நிதியமைச்சகம், ''அதை மறு சீரமைப்பு செய்ய ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பிடித்தது. இது போன்ற சேதம், பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒரு பிரிவில் மட்டும் ஏற்பட்டால், அதற்கு 250 மில்லியன் டாலர் வரை செலவாகும்,'' என்று கூறியது.
ராஜாங்க வீட்டு அலுவல் அதிகாரிகள், அரண்மனையின் கொதிகலன்கள் 33 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை என்றும் அவைகளின் சில உதிரிப் பாகங்களை வாங்குவது மிகக் கடினமாக உள்ளது என்று கூறினர்.
பெரும்பாலான வயர் இணைப்புகள் ''தீ விபத்து நேரும் ஆபத்தான மற்றும் பழுதடையும் நிலையில்'' இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், பெரும்பாலான இயந்திர மற்றும் மின் அமைப்புகள் குறைந்தது 40 ஆண்டுகள் பழமையானவை என்றும் இவற்றின் பழுதடையும் ஆபத்து ''எப்போதும் அதிகரித்து" வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், முடியாட்சி அகற்றப்பட வேண்டும் என்று விரும்பும் குடியரசு பிரச்சாரக் குழு(Campaign group Republic),
ராஜாங்க நிதியை, ஆறு தசாப்தங்களாக அதிர்ச்சி தரக்கூடிய அளவில் ராணி தவறாக பயன்படுத்திய முறையே இதற்குக் காரணம் என ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது.
ஆண்டு முழுவதும் அரண்மனை, சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டால், அதன் மூலம் வரும் நிதி பழுது பார்க்கும் செலவுகளுக்கு உதவும் என 'நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்திய போது, அந்த யோசனை மறுக்கப்பட்டுள்ளது.'' என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.
எலிசபெத் ராணியின் அரண்மனையில் உள்ள அறைகள்
ராணி எலிசபத் , ஆண்டின் மூன்றில் ஒரு பகுதியை, நிர்வாக தலைமையிடமான பக்கிங்காம் அரண்மனையில் நிகழ்ச்சிகளை நடத்தச் செலவழிக்கிறார்.
லண்டனில் இருக்கும் போது, ஒவ்வொரு வாரமும் பிரதமரை சந்திக்கிறார். மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 50,000க்கும் மேற்பட்ட விருந்தினர்களை அரச விருந்து நிகழ்வுகள், இரவு விருந்துகள், வரவேற்பு நிகழ்வுகள் மற்றும் தோட்டத்தில் நடைபெறும் விருந்துகளுக்கு வரவேற்கிறார்.
அரண்மனையில் 775 அறைகள் உள்ளன. அவற்றில் 19 அரச அறைகள், 52 ராஜாங்க மற்றும் விருந்தினர் படுக்கை அறைகள், 188 ஊழியர்களுக்கான படுக்கை அறைகள், 92 அலுவலகங்கள் மற்றும் 78 குளியல் அறைகள் அடங்கும்.
1837லில் இருந்து, இந்த அரண்மனை லண்டனில், பிரிட்டனின் ராஜாங்க அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வருகிறது. இந்த அரண்மனையில் வரலாற்று முக்கியத்துவம் நபர்கள்- சார்லஸ் டிக்கன்ஸ், அமெரிக்க அதிபர்கள் உட்ரோ வில்சன் மற்றும் ஜான் எஃப் கென்னடி, நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி எனத் தொடர்ந்து பல்வேறு நபர்களுக்கு இங்கு விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
விருந்தில் ஐந்தாம் ஜார்ஜ் அரசரோடு கலந்து கொண்ட மகாத்மா காந்தி, அப்போது அரை ஆடையும், செருப்பும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராணி வசிக்கும் பல அரண்மனைகளை, அவர் நாட்டின் சார்பாக, ஒரு அறங்காவலர் என்ற ரீதியில், வைத்திருக்கிறார். ஆனால் இவைகளைப் பராமரிக்கும் செலவு அரசைச் சேர்ந்தது.
பராமரிப்பு பணிகள் படிப்படியாக நடத்தப்படும். ஒரு நேரத்தில், அரண்மனையின் ஒரு பகுதியில் மட்டும் பராமரிப்பு வேலைகள் நடக்கும். ஒவ்வொரு கட்டத்துக்கும் தனித்தனியாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நிதி மற்றும் நடைமுறை அபாயத்தைக் குறைப்பதை இலக்காகக் கொண்டு இவ்வாறு முடிவுசெய்யப்பட்டுள்ளது என அரச மாளிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
English Summary:
British Queen Elizabeth's official London residence, Buckingham Palace, the British finance ministry announced 369 million pound refurbishment at state expense.