கிருஷ்ணகிரி: ‛‛ போயஸ் கார்டனில் இருந்து சசிகலா உடனே வெளியேற வேண்டும். அவரை முதல்வராக தேர்ந்தெடுத்த முடிவை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
மன்னிப்பு கடிதம்:
கிருஷ்ணகிரியில், இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவை சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். அதை தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் , 2011ல் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இருந்தும் கட்சியில் இருந்து வெளியேற்றினார். அப்படி வெளியேற்றியதற்கு சில பல காரணங்கள் இருந்தாலும், அந்த காரணங்களை சசிகலா கொடுத்த மன்னிப்பு கடிதம் மூலம் உணர முடிகிறது. அதில், ‛அரசியலில் ஈடுபடவோ, கட்சியில் ஈடுபடவோ, எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக வேண்டும் என்றோ, பொதுவாழ்க்கையில் ஈடுபடவோ விருப்பம் இல்லை. ஜெயலலிதாவிற்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்' என்று கூறியுள்ளார். சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அரசியல் ஈடுபாடு தான் காரணம் என்பது அந்த கடிதம் மூலம் தெரிய வந்தது.
பிராயசித்தம் தேட வேண்டும்:
முதல்வர் ஜெயலலிதா டிச., 5ல் மறைகிறார். பிப்.,5ல் சசிகலாவை முதல்வராக்க எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை செய்கின்றனர். இவரும், இவரது குடும்பத்தினரும் ஜெயலலிதா வீட்டில் வேலை செய்கிறேன் என்ற போர்வையில், எப்படியாவது பதவியை கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்; துரோகம் செய்துள்ளனர். வேலை செய்வதற்காக தான் அவரை ஜெயலலிதா வீட்டில் வைத்து இருந்தார். நடராஜன் மற்றும் குடும்பத்தினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். ஜெ., ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால், பிராயசித்தம் தேட வேண்டும். முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறி சசிகலா வெளியே வர வேண்டும். இல்லாவிடில், சதி கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளீர்கள் என்று குற்றம் சாட்ட வேண்டியது இருக்கும். போயஸ் கார்டன் வீட்டில் நீங்கள் இருக்க, உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை. அந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும்.
எந்தவித அரசியல் தியாகம் செய்யாமல், அரசியல் பின்னணி இல்லாமல், சதி செய்து, முதல்வர் ஜெயலலிதா மறைந்த 60 நாட்களுக்குள் பின்புற கதவு வழியாக வந்து பதவி ஏற்றுள்ளார். இது கருப்பு சரித்திரமாக மாறும். அவரது கணவர் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனை நிர்வாகம் ஜெ.,க்கு அளித்த சிகிச்சை குறித்து தகவல் வெளியிட உள்ளது. இதை கண்காணிக்கவே அவர் சென்றுள்ளா் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். இதில் தவறு நடந்தால், நடராஜனும், மருத்துவமனை நிர்வாகமும் தான் காரணம்.
அடகு வைத்தது ஏன்?
பன்னீர்செல்வத்திடம், இரண்டு முறை முதல்வர் பதவியை ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார். அந்த பொறுப்பை ஏன் சசிகலாவுக்கு விட்டு கொடுத்துள்ளீர்கள். என்ன நிர்பந்தம் இதற்கு உள்ளது. நீங்கள் தனிப்பட்ட மனிதர் இல்லை. இந்த மாநிலத்தின் முதல்வர். அந்த பொறுப்பை, இரண்டு மணி நேரத்தில் அடகு வைத்தது ஏன்? இது குறித்து பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும்.
சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்த முடிவை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
English Summary:
Krishnagiri: '' Poes Garden Sasikala from the need to leave immediately. Digg's decision to select him as the CM - MLAs will have to change, '' the former minister said K.P.Munisamy