சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்துக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்டோர் நேற்று மாணவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை முதலே மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.
"மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். தடியடி, வன்முறை என ஆயுதங்களைப் பிரயோகித்தும் பலன் இல்லாததால், 'யார் வந்து பேசினால், மாணவர்கள் கேட்பார்கள்' என ஆலோசித்து, அதற்கேற்ப தமிழ் உணர்வாளர்களை கடற்கரைக்கு வரவழைத்தனர். அதேநேரம், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் போலீஸார் 'திடீர்' தாக்குதலை நடத்தினர். பெண்கள், இளைஞர்கள் என ஒருவரும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இப்படியொரு தாக்குதலின் பின்னணியில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் உள்ளனர்" என அதிர்ச்சியோடு விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"ஜல்லிக்கட்டு தடையைப் போலவே, ரேக்ளா பந்தயத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வண்டியில் மாடுகளைப் பூட்டிக் கொண்டு நடத்தப்படும் ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் வெகுபிரசித்தம். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்காகத்தான் மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. வரலாறு காணாத மெரினா போராட்டத்தால், அதிர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லி சென்று ஒருநாள் தங்கியிருந்து அனுமதியைப் பெற்று வந்தார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் திறந்து வைக்க மகிழ்ச்சியோடு பயணமானார் ஓ.பி.எஸ். மாவட்ட அமைச்சர்களும் தங்கள் ஊரில் போட்டிகளைத் தொடங்கி வைக்க ஆர்வத்துடன் கிளம்பினர். 'வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளிக் குதித்து பாய்ந்தோடும்' என பேட்டியளித்த முதல்வரை, கிராமத்துக்குள்லேயே பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர் அமைச்சர்கள் சிலர். சேலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டார். இந்நிலையில், ரேக்ளா பந்தயத்தைத் தொடங்கி வைக்க சில அமைச்சர்கள் கிளம்பினர். 'காலையில் ஒன்பது மணிக்கு ரேக்ளா பந்தயங்கள் தொடங்கும்' என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், 11 மணி கடந்தும் போட்டிகளை நடத்த முடியவில்லை. காரணம். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதுதான். சொந்த ஊருக்குள்ளேயே தனக்கு எதிராகப் போராட்டம் நடந்ததை அமைச்சரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை முதலமைச்சரிடம் பேசிய அந்த அமைச்சர், 'இத்தனை வருஷமா எம்.எல்.ஏவாக இருக்கிறேன். என்னை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசியதில்லை. என்னையே இரண்டு மணி நேரம் சிறைவைத்துவிட்டார்கள். தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்தார்கள்.
அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? மாவட்டத்துக்குள் வலுவாக இருப்பதால்தான், இவ்வளவு வெற்றிகளை வாங்கித் தர முடிந்தது. இந்த அவமானத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கொந்தளிப்புடன் கேட்டார். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்த முதல்வர் அலுவலக அதிகாரி, 'மினிமம் ஃபோர்ஸ் யூஸ் பண்ணுங்க. தேவையற்ற கலவரத்துக்குக் காரணமாக இருந்துவிட வேண்டாம்' என அறிவுறுத்தினாராம். இதையடுத்து, மெரினாவில் நெருக்கடியைக் கொடுத்த காவல்துறை, மாவட்டங்களின் பல பகுதிகளில் தடியடி பிரயோகத்தை அரங்கேற்றியது. ரேக்ளா பந்தயத்தால் அவமானமடைந்த அமைச்சர் ஊரிலும், பெரும் தாக்குதல் நடந்தது. போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது" என்றார் விரிவாக.
"தொடக்கத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை மென்மையான போக்கிலேயே கையாண்டார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். மெரினாவில் கூட்டத்தைக் கூட அனுமதித்து, கடைசியாக மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைப் போராடி பெற்றது போன்ற, ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசு இறங்கியது. 'ஆந்திர முதல்வரிடம் 2.5 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத் தந்தது; ஜல்லிக்கட்டுக்காக போராடி அவசரச் சட்டம் கொண்டு வந்தது' என ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முயற்சித்தார் முதலமைச்சர். ஆனால், போராட்டத்தை முடித்து வைக்க கையாண்ட விதமே விமர்சனங்களை உருவாக்கிவிட்டது. இது மாநில அரசின் உளவுத்துறைக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழா ஒத்திகைக்காக மெரினா கூட்டத்தைக் கலைத்தாலும், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவசரச் சட்டத்தால் நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால், மாணவர்கள் மீண்டும் வீதிகளில் அமர்வார்கள். நேற்று திருவல்லிக்கேணி வீதிகளில் போலீஸார் நடத்திய கோரத் தாண்டவத்தை மாணவர்கள் மறந்துவிடவில்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.
'அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே, மாணவர்கள் போராட்டத்தின் நகர்வு தெரியவரும்' என்கின்றனர் போராட்டக் குழுவினர்.
‛ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய சட்டப்படிதான் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என பீட்டா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா தெரிவித்துள்ளார்.
பீட்டா தலைவர் பூர்வா ஜோஷிபுரா
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், சேவாக், முகமது கைஃப், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் போன்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ‛ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றால் குத்துச்சண்டை போட்டிக்கும் தடை விதிப்பதுதான் நியாயமானதாக இருக்கும்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
‛டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது. அதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் தங்கையும், விலங்குகள் நல ஆர்வலருமான அம்பிகா சுக்லாவும் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது, அம்பிகா சுக்லாவை நோக்கி, 'முரட்டுக்காளை' படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலைப் பாடி கலாய்த்து எடுத்து விட்டார் ஸ்ரீகாந்த். அம்பிகா சுக்லாலோ தொடர்ந்து எதையோ ஒப்புக்கு பேசி சமாளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில்' தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க, தமிழ் கலாச்சாரம் வாழ்க' என ஸ்ரீகாந்த் பேசி முடித்தார். அம்பிகா சுக்லா வாயை மூடிக் கொண்டார்.
எப்போதும் அமைதியாகவே இருக்கும் தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டு நாடே வியக்கிறது. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும், சேலத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
இதற்கிடையே பீட்டா இந்தியா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா ஆங்கில இணையதளத்துக்கு ஒரு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, ''ஜல்லிக்கட்டுத் தடைக்கு நாங்கள் காரணம் இல்லை. எங்களைப் போலவே பல அமைப்புகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அதில் நாங்களும் ஒன்று. இந்திய சட்டப்படித்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உரிமையை, பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். தமிழகத்தில் 144 விவசாயிகள் இறந்து போனார்களே... அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள். நாட்டுக் காளைகளை காக்க பல்வேறு வழிகள் உள்ளன.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படும் நாட்டு மாடுகளை காக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களது அந்த முயற்சிக்கு நீங்களும் உதவ முன்வாருங்கள். அவைகளும் நாட்டு மாடுகள்தானே. இறைச்சிக்காகவும், தோல் போன்றத் தேவைகளுக்காகவும் அவைகள் கொல்லப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதால் நாட்டு மாடுகள் அழிவது குறைவுதான்.
இந்தியாவின் பிற மாநிலங்கள் நாட்டு மாடுகளை காப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்து ஆதாயங்கள் பெறுகின்றன. நமது அரசியல் அமைப்பு சட்டம், ஒவ்வொரு இந்திய குடிமகனும் விலங்குகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. சட்டத்தை மதிப்பது நமது கடமை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழ் கலாசாரம் உயர்ந்தது. இதற்கு மேல் எதுவும் கூறத் தேவையில்லை'' என தெரிவித்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் கெடு விதித்திருந்தனர். தற்போது கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் சங்கமும் நாளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. போராட்டக் களமும் சூடுபிடித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளதால், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு தற்காலிக தீர்வு தேவையில்லை. நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டத்தை கைவிட முடியாது. அதனால் எங்களது போராட்டம் தொடரும். நாட்டு மாடுகளை காப்பதற்கு நடவடிக்கை வேண்டும்' என தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், இன்று மாநிலத்தில் பெரும்பாலான வர்த்தகர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சில ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் இன்று ஆட்டோக்கள் இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெரும்பாலான கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில தனியார் பள்ளிகளுக்கும் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கமும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. இதில் அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு என்ற ஒருவார்த்தை, தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரியும் தீ போல பரவி விட்டது. இந்தத் தீயை ஜல்லிக்கட்டு நடத்தி மட்டுமே அணைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும்.
மேலும், தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கு, இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்து காவலர்களுக்குமே இதே போன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார்.
இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரை இளைஞர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். இதற்கிடையே அவர் பேசும் போது, சில காவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியழகை தொடர்ந்து பேச வைத்தனர்.
புது டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானம் போராட்டங்களுக்கு என்றே புகழ்பெற்றது. அந்தளவுக்கு அதில் பல நாட்கள் நீடித்த போராட்டங்கள் பலவும் நடைபெற்றுள்ளன.
அப்போது, இரவு நேரங்களில் குழுக்களாக இணைந்து உரையாடுவதும், குளிர் காய்வதும் நடக்கும். சென்னை மெரினாவும் அதுபோல ஆகிவிட்டதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டிருப்போர் எண்ணுகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கூடிய இளைஞர்கள் கடுங்குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, குழுக்களாக சேர்ந்து தீ மூட்டி குளிர்காய்தனர். பல குழுக்கள் இதேபோல செய்யும் காட்சி, குளிரோ, வெயிலோ எதுவந்தாலும் போராட்டத்தை அவை பாதிக்காது என்பதைக் காட்டும் விதத்தில் இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், கல்லூரிகளை மூடி விட்டால் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி இரவு முழுவரும் கொட்டும் பனியிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அழைத்துப் பேசிய தமிழக அமைச்சர்கள், மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்த போதிலும், போராட்டம் நீடித்தது.
வீரத்தமிழ் சொல்லும் ஜல்லிக்கட்டு பாடல்!
அலங்காநல்லூர் போராட்டகளத்தில் மாணவர்கள் சோர்வை தவிர்க்க, அவர்களுக்கு வீர உணர்ச்சி ஊட்டும் வகையில் அங்குள்ள பெண்கள் வீரத்தமிழ் சொல்லும் ஜல்லிக்கட்டு பாடல்களை பாடினர். வீடியோ: இ.ஜே.நந்தகுமார்
பீட்டாவை சட்டரீதியில் தடை செய்ய முயற்சி- சசிகலா
நாளை அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது பற்றி கோரிக்கை வைக்க உள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா, பீட்டாவை தடை செய்ய சட்டரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம். பீட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது. பீட்டாவை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்டரீதியாக மேற்கொள்வோம்.' என்று கூறியுள்ளார்.
#Jallikattu லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கம்: வீடியோ: மோ.கிஷோர் குமார்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, நெல்லை, கோவை, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல நகரங்களுக்கும் இந்த போராட்டம் பரவத் தொடங்கி உள்ளது.
தமுக்கம் எதிரேயுள்ள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மாணவர் ஒருவர் கூறி வருகிறார். அவரை சமாதானப்படுத்தி சக மாணவர்கள் கீழே இறக்க முயற்சித்து வருகிறார்கள்.
அலங்காநல்லூரில் மக்கள்முன்பு இயக்குனர் கௌதமன் ஆவேச பேச்சு.
மதுரை கோரிப்பாளையம் சிகனல் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் மைதானம்வரையிலும் மாணவர்கள் நிரம்பியுள்ளார்கள். பல தன்னார்வலர்கள் உணவு, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் வழங்குகிறார்கள். கீழே சிதறி கிடக்கும் குப்பைகளை மாணவர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு போராட்டத்தை கண்ணியமாக நடத்தி வருகிறார்கள்.
எங்கள் மீது போலீஸ் கை வைத்தால் பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும்:சு.ப.உதயகுமார் எச்சரிக்கை
நாகர்கோவில் மாணவர் போராட்டத்துக்கு வந்த அதிமுகவினரை மாணவர்கள் விரட்டி விட்டனர்.
இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்து அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் கடந்த 3-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்ததால் போராட்டம் வலுத்தது.
இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்து அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் அமைதி பேரணி
ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தங்களை இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக போராட்டம் நடந்துவரும் நிலையில் தற்போது ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தங்களை இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் ஐ.டி ஊழியர்களும் சேர்ந்தது, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு வலு சேர்த்துள்ளது.
அலங்காநல்லூர் போராட்டத்திற்கு டிராக்டர் மூலம் கிராம மக்கள் வர ஆரம்பித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் மாணவர்கள் போராட்டம்.
கரூர் குமாரசாமி கல்லூரியில் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.
மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட திடீர் உத்தரவு!
அலங்காநல்லூர் பகுதியில் தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது.
புதுச்சேரி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகள் வரும் 20-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் விஜய் வசந்த் மெரினாவில் அமைதி பேரணி.
மதுரை கோரிப்பாளையத்தில் 20 ஆயிரம் மாணவர்கள், பொதுமக்கள் களத்தில் உள்ளனர்.
அலங்காநல்லூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், போராட்டம் செய்யும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் மோர், சர்பத் என குளிர்ச்சியான பொருட்கள் கிராம பொதுமக்கள் சார்பாக வழங்கப்படுகிறது.
அலங்காநல்லூர் மக்களின் போராட்டத்தில் பியூஸ் மனுஷ் கலந்து கொண்டிருக்கிறார்.
அலங்காநல்லூருக்கு பக்கத்து கிராம பெண்கள் தொடர்ந்து படையெடுத்து வந்துகொண்டே இருக்கின்றனர். அலங்காநல்லூரில் கைதான 21 நபர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என குற்றச்சாட்டு.
அலங்காநல்லூர் பகுதியில் போராடும் மாணவர்களுக்காக புதுப்பட்டி கிராமத்தில் இருந்து உணவு தயார் செய்யப்படுகிறது .
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் 3 நாட்கள் நீதிமன்றத்தை புறகணிக்க வழக்கறிஞர்கள் முடிவு.
சாயல்குடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அருப்புக்கோட்டை சாலையில் நடந்த இந்த தர்ணாவில் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
கார்கில் போரில் விமான படையில் வேலை செய்த சேலம், கொங்கனாபுரம் செல்வராமலிங்கம் என்பவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதக்கத்தை திருப்பி கொடுக்க சேலம் கலெக்டர் அலுவலம் வந்தார்.
படம்: விஜயகுமார்
திருப்பூரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுக்கு சில அமைப்புகள் வாட்டர் பாக்கெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர். குப்பைகூடைகளில் பீட்டா என்று எழுதி போராட்டத்தில் விழும் குப்பைகளை அதில் சேகரித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காமராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை எதிர்த்தும் பேரணியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதால் சேலம் ஸ்தம்பித்தது.
7000 மாணவர்களுக்கும் அதிகமானோர் கோவை வ.உ.சி மைதானத்தில் கூடியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் 20-ம் தேதி பந்த்: போராளிகள் இயக்கம் அறிவிப்பு
தேனி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று காலை நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். காளையுடன் வந்த மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைகளில் பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பீட்டா அமைப்புக்கு எதிராகவும், தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தையொட்டி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 600 மாணவர்கள் தற்போது போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தடையை நீக்கும் வரை போராட்டமானது தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலங்காநல்லூார் போராட்டத்தில் குவிந்துள்ள பெண்கள்.
இமான் அண்ணாச்சி அலங்காநல்லூாரில் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், மாணவர்களின் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான், ஜல்லிக்கட்டு இல்லை என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக புதிய சட்டம் கொண்டு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும் என்று கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி.ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் உடல் நிலை பாதிப்பிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்றுள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் போராட்டம் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று காலை மெரினாவிற்கு வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகானும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றும், பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை ஜே ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியில் மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இதனால் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டி.எஸ்.பி.மங்களேஸ்வரன் வாகனம் தாக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லை மாவட்டம் தென்காசியில் நடக்கும் ஆர்ப்பாட்டம்..
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள்ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் 1000த்திற்கும் மேற்பட்டோா் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாணவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வருகின்றனர்
மதுரை யாதவா கல்லூரி மாணவர்கள் திருப்பாலையில் உள்ள அவர்களது கல்லூரியில் இருந்து 5 கி.மீ தூரம் நடந்து சென்று தமுக்கம் மைதானத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற மாணவர்களுடன் கைகோர்க்கின்றனர். வீடியோ: வெ.வித்யா காயத்ரி.
திருப்பூரில் மாணவர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கான கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது... பல்வேறு அமைப்புகளும், பெண்கள் பள்ளி மாணவர்கள் என திரண்டிருக்கிறார்கள்
தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம், எதிரேயுள்ள எஸ்.ஏ.வி. விளையாட்டு மைதானத்தின் முன்பு இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்களின் ஜல்லுக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடந்து வருகிறது...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் 1500க்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டு க்கு ஆதரவாக போராட்டம். ராமநாதபுரத்திற்கு நடை பயணம் செல்ல முயன்ற மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு தற்போது கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறுமி கோஷம் எழுப்பும் வீடியோ காட்சியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பலர் இச்சிறுமியின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! வீடியோ: க.பாலாஜி
திருப்பூர் இணைந்தது... தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர் மாந கராட்சி முன்பு மாணவர்கள் திரள துவங்கியுள்ளனர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி மாணவ ,மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ஏப்டி மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
#Jallikattu மதுரை தமுக்கம் மைதானம் முன் உள்ள தமிழ் அன்னை சிலை முன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்வீடியோ: க.விக்னேஷ்வரன்
2-வது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ஏப்டி மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஊர்வலமாக வந்தனர் :
நெல்லை மாவட்டம் தென்காசியில் போராட்டம் நடப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சூழலில், வள்ளியூரிலும் போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டத்திற்கு முழு பாதுகாப்பளிப்போம் என்று சென்னை கூடுதல் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் கூச்சலிடாமல் போராட்டத்தை அமைதியாக தொடர்ந்தால் காவல்துறை முழு பாதுகாப்பளிக்கும் என்று கூடுதல் காவல்துறை ஆணையர் சங்கர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் நள்ளிரவில், அதிமுக அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் முதல்வர் அறிக்கைக்கு பிறகே போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவெடுப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
English Summary:
Full support for the ongoing struggle in Marina Jallikattu protests Chennai Additional Commissioner of Police said.
If you continue to struggle to calm the youth sound additional police commissioner Shankar promised that the police complete safety.
In this case, the youth staged a midnight meeting with AIADMK Ministers expressed satisfying. But the Chief Minister categorically said that after a struggle to decide to abandon.