சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும்; அதனால், இந்த சூழ்நிலையிலாவது நீங்கள் அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்று, ரஜினியின் நண்பர்களும்; ரசிகர்களும் தொடர்ந்து உசுப்ப, அரசியலில் களம் இறங்கும் எண்ணத்துக்கு அவர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆசை, பதட்டம்:
இது குறித்து, ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:நடிகர் ரஜினிக்கு, அரசியல் மீது தீராத காதல் உண்டு. ஆனால், அரசியலில் இறங்கி தீவிரமாக செயல்பட்டும் தன்னால், முதல்வராக முடியாமல் போனால், அரசியலில் தோற்று, இருக்கும் புகழுக்கும் பங்கம் விளைவித்து விடுவோமோ என்ற பதட்டமும் நிறைய உண்டு.
அதனால்தான், 1996ல், அ.தி.மு.க., ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, ஜெயலலிதா, தமிழக மக்களின் அதீதமான கோபத்துக்கு ஆளாகி நின்ற சூழ்நிலையில், அவரை அரசியலுக்கு வருமாறு, பத்திரிகையாளர் சோ, த.மா.கா., தலைவர் மூப்பனார் உள்ளிட்ட பலர் அழைத்தனர். வழக்கமான அவரது பதட்டமும் பயமும் அவரை தொற்றிக் கொள்ள, யோசித்தபடியே அமைதியாக இருந்து விட்டார்.
அதன்பின்பும் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் ரஜினி நழுவவிட்டுக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் அவருக்கு அரசியலில் தீவிர ஆர்வம் பொங்கும் போதெல்லாம், நண்பர்களை அழைப்பார். மக்கள் மனநிலை அறிந்து சொல்லச் சொல்வார். நாங்கள், கணிப்பே நடத்தி, அவரிடம் முடிவுகளைக் கொடுப்போம். ஆனாலும், அவர் பயந்தபடியே பம்மிவிடுவார்.
அவரது அரசியல் ஆர்வம், நிஜமாகாவிட்டாலும், அவரது படங்களுக்கான வெளிச்சமாகவே அது இருந்தது. அதனால் ஒருகட்டத்தில், ரஜினியோடு சேர்ந்து, அரசியல் ஆர்வமாக இருந்த அவரது ரசிகர்கள் இது வேலைக்காகாது என விலகினர். இருந்த போதும், ரஜினிக்கு, அரசியல் ஆர்வம் விடவில்லை. தற்போது, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றதும், தன்னை வைத்து அந்த வெற்றிடத்தை நிரப்பலாம் என நினைக்கிறார்.
அதற்கேற்ப, பா.ஜ., தரப்பில் இருந்தும் தொடர்ந்து பல தலைவர்களும் ரஜினியின் அரசியல் ஆர்வத்துக்கு தூபம் போட, பழைய படியே, மக்கள் கருத்தறிந்து சொல்ல, ரஜினி, கேட்டுக் கொண்டார்.
அதன்படி,, தமிழகம் முழுவதும் பல தரப்பட்ட மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டன. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., பின்புலத்துடனோ அல்லது பா.ஜ.,வில் இணைந்தோ ரஜினி, அரசியலுக்கு வரும்பட்சத்தில், நாங்கள் ஆதரிப்போம் என பெரும்பாலான மக்கள் கூறியிருக்கும் தகவல்கள் அனைத்தையும் ரஜினியிடம் கொடுத்து விட்டோம்.
ரஜினி சந்தோஷம்:
மக்கள் எண்ணத்தை பார்த்துவிட்டு, ரஜினி சந்தோஷமாகி விட்டார். அந்த ஆர்வத்தில்தான் அவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், தமிழக அரசியலில் எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாக கூறினார். அது கடும் விமர்சனங்களை கிளப்பினாலும், அதன் மூலம், ரஜினியின் அரசியல் ஆர்வம் மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந்துவிட்டது.
தற்போது நேரடியாக அரசியல் களத்தில் குதிக்காமல், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் என பலவற்றிலும் கலந்து கொண்டு, அதன்மூலம், அரசியல் பேசிவிட்டு, மக்களின் எண்ணங்களை படித்து, கொஞ்சம் கொஞ்சமாக தீவிர அரசியலில் இறங்க முடிவெடுத்து விட்டார்.
அடுத்த கட்டமாக, ஏதாவது ஒரு மக்கள் பிரச்னையை கையில் எடுத்து போராடுவதோடு, அந்த பிரச்னைக்காக, பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவும் ரஜினி திட்டமிட்டு வருகிறார். ஆக, விரைவில், ரஜினி தமிழக அரசியலில் குதிப்பார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Chennai: Tamil Nadu politics only you can fill the void; So, this situation that you have to come to politics, Rajini's friends; Following wake fans, he said to the political arena with the intention of landing.