சென்னை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, தமிழக அரசு சார்பில் அவசர சட்டமெல்லாம் இயற்றி, அதன்பின்,‛ நானே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறேன்' என, மதுரை அலங்காநல்லூருக்குச் சென்ற தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை ஊருக்குள்ளேயே வரக்கூடாது எனக்கூறி திருப்பி அனுப்பினர் அங்குள்ள மக்கள். இது பன்னீர்செல்வத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
புது தகவல்:
பன்னீர்செல்வத்தை கிராமத்துக்குள் விடாமல் விரட்டிய கிராம கமிட்டியினர், தற்போது ஒன்று கூடி, வரும் பிப்.,1ல், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தீர்மானித்துள்ளனர். இப்படி ஊருக்குள் விடாமல் பன்னீர்செல்வம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது, முதல்வர் பதவிக்கு வந்து அதிகாரத்தை சுவைக்க நினைத்து அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் சசிகலா தரப்பினரின் கைங்கர்யம்தான் என, முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது தரப்பினரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,‛ அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கே, பலமான ஜாதி அரசியல் நடக்கிறது. அங்குள்ள மக்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தை எதிர்க்கவில்லை; ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வையும் எதிர்த்துள்ளனர்' என, சசிகலா தரப்பினர், புதுத் தகவல் சொல்லி, பன்னீர்செல்வத்தின் புண்பட்ட மனதுக்கு ஆறுதலாக மருந்து போட துடிக்கின்றனர்.
பல்வேறு ஜாதியினர்:
இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது:மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைப் பொறுத்த வரையில், அங்கு நாயுடு, முத்தரையர், பள்ளர், பறையர், முக்குலத்தோர் என நிறைய ஜாதி இனத்தவர் கலந்து வாழ்கின்றனர். அதில், நாயுடு மற்றும் முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுக்கு அடுத்தடுத்த நிலைகளில்தான் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தோர் உள்ளனர்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போதே, முத்தரையர் இனத்தவர், அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சால், அ.தி.மு.க., மீது கடும் அதிருதி அடைந்தனர். தமிழகம் முழுவதும், பரவலாக இருக்கும் அந்த மக்கள் ஒன்று திரண்டு, அ.தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளனர். தற்போதும், அந்த எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.
அதேபோல, கட்சியிலும், ஆட்சியிலும் தங்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற எண்ணம் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்களிடமும் உள்ளது. பள்ளர், பறையர் இனத்தவர் வெகு காலமாக அ.தி.மு.க., எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே உள்ளனர். இப்படி அம்மக்களின் மனநிலை இருக்க, அலங்காநல்லூரில் பெரும்பான்மையானவர்களாக இருக்கும் அம்மக்கள் ஒன்றிணைந்து, ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து, தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்:
முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக, அலங்காநல்லூர் வாடி வாசலுக்கு வரும் முயற்சியை தடுத்தது, இதன் பின்னணியில்தான். ஆனால், பன்னீர்செல்வத்தை, ஊருக்குள் விடாமல், பாதி வழியிலேயே கிராம மக்களால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில், சசிகலா தரப்பினரின் செயல்பாடுகள் இருப்பதாக, பிரச்னையை சமூக ரீதியில் பார்க்காமல், அரசியல் ரீதியில் பார்த்து, சிலர் கருத்து பரப்புகின்றனர்; இது தவறானது.
தென் மாவட்டங்களில், யாதவர், நாடார், தலித், பிள்ளைமார், நாயுடு என பல சமூகத்தை சேர்ந்தவர்களும், அ.தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையில் உள்ளதை, அ.தி.மு.க., தலைமையும் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதற்கேற்ற வகையில், கட்சியிலும், ஆட்சியிலும் அம்மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம்தான், இப்படிப்பட்ட எதிர்ப்புகளை இனி, அ.தி.மு.க., சந்திப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு அத்தரப்பினர் கூறினர்.
English summary:
Chennai: jallikattu run on behalf of the State Government has enacted emergency law then, 'I'll put jallikattu launching the program', as the Chief Minister of Tamil Nadu Madurai alanganalur Paneerselvam district turned back, calling the people to come. Paneerselvam It is very shocked.