புதுடெல்லி - ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தை திசைதிருப்பவே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பி வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
பார்லி.யில் அமளி
அருணாசலப்பிரதேச மாநிலத்தில், நீர்மின் திட்ட முறைகேட்டில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ மற்றும் அவருடைய உறவினர் கோபோய் ரிஜ்ஜு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பி வருகிறது. மேலும் கிரண் ரிஜ்ஜூ பதவி விலகக் கோரி இருஅவைகளிலும் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெங்கையா பேட்டி
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தை திசைதிருப்பவே, கிரண் ரிஜ்ஜூ பெயரை காங்கிரஸ் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். கிரண் ரிஜ்ஜூ முறைகேட்டில் ஈடுபடவில்லை என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சி ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கிரண் ரிஜ்ஜூ பேட்டி
இதேபோல், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அளித்த பேட்டியில், தனக்கு எதிராக குற்றச்சாட்டை கூறி, காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தவறு இழைத்து விட்டதாக தெரிவித்தார். இதற்கான விளைவை காங்கிரஸ் கட்சி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரும் என்றும் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார். இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் நோட்டு விவகாரத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, முழக்கம் எழுப்பினர்.