ஜெயலலிதா மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு முழு உண்மைகளையும் மக்களுக்கு வெகு விரைவாகத் தெரிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது மரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கையையும் எந்தத்தரப்பிலிருந்தும், எவ்வித சந்தேகமும் எழாத வகையில் அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நினைப்பது பொதுமக்களின் உரிமையுமாகும். அதனால் தான் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன்.
தமிழகத்தில் உள்ள பிற கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், ஊடகத்துறையில் சிலரும், நடுநிலையாளர்களும் மறைந்த முதல்வரின் சிகிச்சைக்கும் உயிர்ப் பாதுகாப்பிற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிமுகவினர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பலத்த சந்தேகங்களையும், மர்மங்களையும் களைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு சிறிதும் அக்கறை செலுத்தாத நிலையில், ஜெயலலிதாவுடைய மரணத்தில் மர்மங்களுக்கும், பலத்த சந்தேகங்களுக்கும் இடம் இருப்பதாக, ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த விடுமுறைக் கால நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில், நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருப்பதுடன், சிகிச்சையில் இருந்த முதல்வரை நேரில் பார்க்க, உறவினர்கள் யாரையும் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை, மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களின் மரணம் தொடர்பாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை மேற்கோள் காட்டி, ஜெயலலிதாவின் மரணத்தில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளதாகவும், ஜெயலலிதா உடல்நிலை குறித்து முழுத் தகவலை ஏன் வெளியிடவில்லை. மத்திய அரசு ஏன் வாயே திறக்கவில்லை ? எனக் கேள்விகள் எழுப்பியிருப்பதுடன், தானே இந்த மனுவைத் தொடர்ந்து விசாரிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தால், புதைக்கப்பட்ட உடலைத்தோண்டி எடுத்து உடல் கூறாய்வு நடத்த உத்தரவிடுவேன் எனத் தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளிலும், ஊடங்களிலும் வரும் செய்தியை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அத்தகைய ஒரு நிலைக்கு இடம்தராமல் அ.தி.மு.க. அரசு முழுமையான தகவல்களை வெளியிட வேண்டியது கட்டாயமாகும். முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அவர் மரணமடைந்த அதிகாரப்பூர்வத் தகவலைக் கூட மருத்துவமனை நிர்வாகம் தான் முதலில் வெளியிட்டது. அதன் பிறகே, தலைமைச் செயலாளரிடமிருந்து அறிக்கை வந்தது.
மூடுமந்திரமான இத்தகைய செயல்பாடுகள் தான் மறைந்த முதல்வர் குறித்த மர்மங்களுக்கும், பலத்த சந்தேகங்களுக்கும் மக்கள் மத்தியில் இடமளித்துள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றது தொடர்பான படங்களை வெளியிட வேண்டும் எனத் தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்த போது, அதனை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உண்மை நிலையை ஆளுந்தரப்பினர் விளக்கியிருந்தால் இன்று பிரச்னை நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்காது.
இப்போதும் கூட காலந்தாழ்த்தாமல் முழுமையான மருத்துவ அறிக்கைகள், சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ-புகைப்பபட ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது ஆளுந்தரப்பின் கடமையாகும். அதுமட்டுமின்றி, மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்ததால், அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உள்ளது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இது குறித்து அளித்துள்ள உறுதி காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கிறேன். முன்னாள் முதல்வரின் மரணம் குறித்து உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் நீதிபதியைக் கொண்டு முழுஅளவில் விசாரணை நடைபெற்று முழு உண்மைகளையும் மக்களுக்கு வெகு விரைவாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அதேநேரத்தில் மக்களின் பக்கம் நின்று உண்மைகளை உரைக்க வேண்டிய கடமை ஊடகத்துறை நண்பர்களுக்கும் உள்ளதை அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.
முதல்வரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்து பேட்டி எடுக்கும் நண்பர்கள் தயக்கமின்றி, மறைந்த முதல்வரின் உடல்நிலை குறித்து மக்கள் எழுப்பும் பலத்த சந்தேகங்களையும், மர்மங்களையும், உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ள கேள்விகளையும் தெரிவித்து, பதில்களைப் பெற்று வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் அரசியல்-சமூக நிலவரங்களை 24 மணி நேரமும் தொலைக்காட்சி ஊடகங்கள் வழங்கி வருகின்றன. அதுபோலவே நாளேடுகள், வார ஏடுகள் உள்ளிட்ட பத்திரிகைகளும் மக்களுக்கான செய்திகளை வழங்கி வருகின்றன. மக்களின் அவலங்கள் குறித்து ஆட்சியாளர்கள், குறிப்பாக முதல்வரின் கருத்தை நேரடியாகப் பெற்று வெளியிடும் மரபு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அற்றுப் போய்விட்டது.
தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது தலைமைச் செயலகத்திலும், அவரது இல்லத்திலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளிலும் ஊடக நண்பர்கள் அவர்களிடம் கருத்துகளைக் கேட்டு வெளியிடுவார்கள். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் அத்தகைய நடைமுறை அருகிப் போனது. வாரம் ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என 2011ல் பதவியேற்ற நாளில் ஜெயலலிதா வாக்குறுதி தந்தார். ஆனால், அதனை அவர் தனது ஆட்சிக்காலம் முழுவதும் நிறைவேற்றவில்லை. ஊடகத்துறை நண்பர்களும் அவரது வாக்குறுதி குறித்து அவரிடம் வலியுறுத்தவில்லை.
தற்போது முதல்வராக திரு ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஊடக நண்பர்கள் அவரை சந்தித்து, அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து நேரடியாகக் கருத்துகளைப் பெற வேண்டியது அவசியமாகும். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்துக் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். பத்திரிகையாளர்களுடன் கலந்தாலோசிக்கிறார்கள். அதுபோல தமிழகத்திலும் ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும். அதற்கு முதல்வர் வாய்ப்பளிப்பார் என்றே நினைக்கிறேன்.
முன்னாள் தலைமைச் செயலாளர் அளித்த பேட்டியில், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து குற்றம்சாட்டும் தொனியில் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். தான் இன்னமும் தலைமைச் செயலாளர் பதவியில் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வருக்கு உள்ளது. அதுபோலவே மறைந்த முதல்வரின் சிகிச்சை தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.
நேற்றைய தினம் போயஸ் தோட்டத்தில் முதல்வரை சந்தித்து பேட்டி எடுத்த ஊடக நண்பர்கள், முன்னாள் தலைமைச் செயலாளரின் குற்றச்சாட்டு குறித்தோ, முன்னாள் முதல்வரின் மரணம் குறித்தான சந்தேகம் பற்றி நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் குறித்தோ எந்தக் கேள்வியும் எழுப்பாமல் இருந்தது வேதனையளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக தலைமைச் செயலாளரின் குற்றச்சாட்டு பற்றி என்னிடம் கேட்டபோது, ”தமிழக அரசு பற்றி குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதால் முதல்வர் பதிலளிப்பதுதான் முறையாக இருக்கும். அவரிடம் கேளுங்கள்”, எனவும் தெரிவித்தேன். தி.மு.க.வைச் சேர்ந்தவர்களிடம் சுதந்திரமாக கேள்வி கேட்கும் உரிமையுள்ள ஊடக நண்பர்கள், அதே சுதந்திரத்தையும், உரிமையையும் ஆளுங்கட்சியிடமும் வெளிப்படுத்த ஏன் தயங்குகிறார்கள் எனத் தெரியவில்லை. உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊடக நண்பர்கள் தயக்கமின்றி செயல்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலன் கருதி ஊடக நண்பர்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
Further investigation led to the death of her High Court judge the full truth of Stalin insisted that the people should express very rapidly.