சென்னை: வங்ககடலில் உருவான வர்தா புயல் நேற்று கரை கடந்த போது, சென்னை மாநகரை புரட்டிப் போட்டு விட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், நேற்றிரவு தொடங்கி இன்று பகல் வரை போக்குவரத்து, மின்சப்ளை அடியோடு துண்டிக்கப்பட்டிருக்கிறது. தொலை தொடர்பும் துண்டானதால், மக்கள் கடந்த ஆண்டை போல் அவதிக்குள்ளாகினர். தண்ணீர் கிடைக்காமல் மக்கள் துன்பப்பட்டனர். மழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென் கிழக்கு வங்க கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி காற்றழுத்தமாக மாறியது. இந்த காற்றழுத்தம் காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருபெற்றது. இதற்கு வர்தா என பெயரிடப்பட்டது.
இந்த புயல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா - நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் கடந்த 10ம் தேதி தெரிவித்தது. ஆனால், திசை மாறிய புயல் சென்னையை மையம் கொண்டு நேற்று காலை முதல் ருத்ர தாண்டவமாடியது. நேற்று பகல் 12.45 மணி அளவில் புயல் கரையை கடக்க தொடங்கியது. சென்னை துறைமுகம் அருகே வர்தா புயல் நேற்று மாலை 5 மணிக்கு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீட்டர் முதல் 120 கி.மீட்டர் வரை காற்று வீசியது. பலத்த மழையும் பெய்தது. பின்னர், காற்றின் வேகம் குறைந்து 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் வீசியது. சென்னையில் வீசிய பயங்கர புயல்காற்றால் பல இடங்களில் வீடுகள் இடிந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்தன. சுற்றுசுவர்கள் இடிந்து விழுந்தன.
கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டது. மாநகர் முழுவதுமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொலை தொடர்பு மற்றும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் அபாய நிலையில் கிழே விழுந்து கிடக்கின்றன. இதனால் நேற்று காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வர்தா புயலின் கோர தாண்டவத்தில் அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்களும் தப்பவில்லை. மந்தைவெளி, தி.நகர் உள்பட பெரும்பாலான பஸ் நிலையங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று பிற்பகல் முதல் சென்னை மாநகரில் மின்சப்ளை அடியோடு நிறுத்தப்பட்டது. சாலைகளில் மரங்கள் கிடப்பதால் போக்குவரத்தும் துண்டானது. நேற்றிரவு சில இடங்களில் மட்டும் மரங்கள் அகற்றப்பட்டன. பல இடங்களில் மக்களே மரங்களை ஒருபுறமாக இழுத்து போட்டு, இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர்.
இன்று சென்னை மாநகராட்சியுடன் பல்வேறு அரசு துறையினர் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பிற்பகல் வரை போக்குவரத்தும் சீராகவில்லை. இதற்கிடையே, துரைசாமி ரோடு, ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் நகர், மயிலாப்பூர் சிவசாமி சாலை, ஆர்.கே.மடம் ரோடு, ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி உள்பட பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்தமுறை மழையின் போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சந்தோஷ்புரம், குரோம்பேட்டை, முடிச்சூர் உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இரண்டாவது நாளாக இன்றும் நகரில் பெரும்பாலான இடங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தடை பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தட்டுப்பாட்டில் வீட்டில் குடிநீர் மட்டுமல்லாமல் வீட்டு பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லை. ஒட்டு மொத்தத்தில் சென்னை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது. சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் புயல் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு வரை 9 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலையில் ஆயிரம்விளக்கு பகுதியில் செல்போன் டவர் இடிந்து விழுந்ததில் அழகுமுத்து என்பவர் உயிரிழந்தார். ராயபுரத்தில் மாடியில் நின்று கொண்டிருந்த பிரபாகரன் என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். கிண்டியில் ஆறுமுகம் என்பவர் குளிருக்கு உயிரிழந்தார். அதில் சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் மட்டும் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்களுடன் மற்ற அரசு அதிகாரிகளும் சேர்ந்து சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் ஆள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் மின்சார கம்பிகள் அறுந்தும், மின்கம்பங்கள் கீழே விழுந்தும் உள்ளன. இவற்றை உடனடியாக சரி செய்ய முடியுமா என்பதும் சந்தேகம் தான். இதனால் இன்றும் பெரும்பாலான இடங்களுக்கு மின்சார வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பால் விலை இருமடங்கு உயர்வு:
வர்தா புயல் ருத்ரதாண்டவத்தாலும், கடும் மழையினாலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன. பஸ், ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கியமான சாலை சந்திப்புகளில் மட்டுமே பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வந்தடைந்தன. மரங்கள் கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத மற்ற இடங்களில் பால் கிடைக்கவில்லை. சில்லரை வியாபாரிகள் சிலர் பாலை இரு மடங்கு விலைக்கு விற்றனர். இதனால் பல இடங்களில் அரை லிட்டர் பால் ரூ.50க்கு விற்கப்பட்டது. அதே போன்று காய்கறிகளின் விலையும் இரண்டு மடங்கு விற்பனை ஆனது.
நீண்ட தூரம் நடந்த மக்கள்:
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மதியம் முதலே பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் வெளியூரில் இருந்து வந்த பஸ்கள் பெருங்களத்தூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு பைபாஸ் சாலை வழியாக கோயம்பேடு சென்றடைந்தது. இன்று அதிகாலை பெருங்களத்தூரில் மாநகர பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருந்த பயணிகள், பஸ் வராததால் நடக்க ஆரம்பித்தனர். அங்கிருந்து தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் சுமார் 15 கி.மீட்டருக்கு மேல் நடந்தே வீடு வந்து சேர்ந்தனர்.
English Summary:
Chennai: In bay of bengal formed varta storm struck the coast yesterday, when we had been put through the city of Chennai. More than one million trees were felled on current wired. Thus, starting last night until this day transportation, current is completely disconnected.