சென்னை : சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவின் அபார பந்துவீச்சால், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்திய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், கடைசி போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்று 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.
முதல் இன்னிங்சில் 759 ரன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிக்கெட் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. இதற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தின் ஸ்கோரை விட 282 ரன் கூடுதலாகும்.
கருண்நாயர் டிரிபிள் சதம் :
கருண்நாயர் டிரிபிள் சதம் அடித்து 2-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவர் 303 ரன்னும் (அவுட் இல்லை), லோகேஷ் ராகுல் 199 ரன்னும் எடுத்தனர். ஸ்டூவர்ட் பிராட், டாசன் தலா 2 விக்கெட் எடுத்தனர். 282 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்று முன்தினம் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்து இருந்தது. ஜென்னிங்ஸ் 12 ரன்னும், அலஸ்டைர் குக் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
வெற்றிக்கு வழிவகுத்த ஜடேஜா :
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 270 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, விக்கெட்டை காப்பாற்றி ஆட்டத்தை ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடினர். இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் வேட்கையில் பந்து வீசினார்கள். எனினும் துவக்க ஜோடி அலைஸ்டர் குக்- ஜென்னிங்ஸ் இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். எனவே, போட்டி டிராவில் முடியவே வாய்ப்பு இருந்தது. ஒரு வழியாக அரை சதம் கடந்த ஜென்னிங்ஸ் 54 ரன்களிலும், குக் 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துவக்க வீரர்கள் தவிர ஜோ ரூட் (6 ரன்), மொயீன் அலி (44 ரன்), ஸ்டோக்ஸ் (23 ரன்) என முன்னணி வீரர்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஜடேஜா. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஜடேஜா வெளியேற்றிய பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது.
தோல்வியை நோக்கி...:
பேர்ஸ்டோவ் ஒரு ரன்னில் இஷாந்த் சர்மா ஓவரில் ஆட்டமிழந்தார். டவ்சனை டக் அவுட் ஆக்கினார் மிஸ்ரா. இதனால் 196 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, தோல்வியை நோக்கி பயணித்தது. 8-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஷித்தை நீண்ட நேரம் நிற்க விடவில்லை உமேஷ் யாதவ். 2 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திருப்பி அனுப்பினார். 9-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஸ்டூவர்ட் பிராட் ஜோடி சேர்ந்தார். அப்போது இந்தியாவிற்கு 15 ஓவர்கள் மீதம் இருந்தது. 2 விக்கெட்டுக்கள் தேவையிருந்தது.
207 ரன்னில் ஆல்-அவுட்:
இந்த ஜோடி 5.3 ஓவர்கள் தாக்குப்பிடித்தது. ஜடேஜா வீசிய 88-வது ஓவரின் 3-வது பந்தில் பிராட் அவுட் ஆனார். அவர் 1 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஜேக் பால் ஜோடி சேர்ந்தார். அப்போது இங்கிலாந்து அணிக்கு 9.3 ஓவர்கள் இருந்தது. அடுத்த 3-வது பந்தில் ஜேக் பால் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 207 ரன்னில் சுருண்டது.
இந்தியா அபார வெற்றி:
இதனையடுத்து, இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், கடைசி டெஸ்ட் வெற்றி மூலம் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றுள்ளது. ஜடேஜா 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆட்ட நாயகனாக இந்தியா இமாலய ஸ்கோர் குவிக்க காரணமான கருண்நாயருக்கும், தொடர் நாயகனாக அணியை சிறப்பாக வழிநடத்தி இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட விளையாடிய கேப்டன் விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.
English Summary:
Chennai: Chennai, Sehwag held on the 5th and final Test match against England, spinner Jadeja's bowling match India won by an innings and 75 runs. Having already captured the series 3-0 in India, the Indian team won the final match 4-0 championed by India.