சென்னை: பருவ மழை பொய்த்து போனதால், வறட்சி தற்போதே கடுமையை காட்ட துவங்கிய நிலையில், கோடை காலங்களில் வறட்சியை நினைத்து அச்சத்தில் தமிழக மக்கள் உள்ளனர். வறட்சியையும், புயல் பாதிப்பையும் ஏற்படுத்திய, வடகிழக்கு பருவமழை, ஜனவரி4ம் தேதியுடன் முன் முடிவுக்கு வந்தது. 141 ஆண்டுகளுக்கு பின், பருவமழை காலத்தில், மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.நடப்பு பருவத்திற்கான, வடகிழக்கு பருவமழை, 2016 அக்., 30ல் துவங்கியது; ஜன., 4ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. நவம்பர், டிசம்பர் மாதங்களில், 'வர்தா' புயல் பாதிப்பையும், வறட்சியையும் மட்டுமே, பருவமழை கொடுத்தது. வடகிழக்கு பருவத்தில், தமிழகத்தில், 44 செ.மீ., மழை பெய்ய வேண்டும். அதில், இந்த ஆண்டு, 62 சதவீதம் குறைந்தது.
கடந்த, 1876ல், வடகிழக்கு பருவ மழை, 63 சதவீதம் குறைவாக பெய்தது. 141 ஆண்டுகளுக்கு பின், தற்போது, 62 சதவீதத்துக்கு, பருவமழையில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
நெற்பயிர்கள் கருகின:
* தேனியில் கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வெறும் 467.77 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.130 கண்மாய்கள் வறண்டுள்ளன. பல ஆயிரம் ஏக்கரில் பயிர் சாகுபடி கைவிடப்பட்டுள்ளது. 13 ஆயிரம் எக்டேரில் சாகுபடி கைவிடப்பட்டது. இறவை, மானாவாரியில் 1,26,259 எக்டேரில் செய்த சாகுபடியில் 50 சதவீதம் கூட பலன் அளிக்க வில்லை.
* ராமநாதபுரம் மாவட்டத்தில், 3 லட்சத்து 66 ஆயிரத்து 977 ஏக்கரில் நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கருகின. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள், மிளகாய், கொத்தமல்லி ஆகியவை கருகின.
* நெல்லையில் 14 ஆயிரத்து 839 ஏக்கரில் மட்டுமே நெல் நடவு செய்யப்பட்டது. அதிலும் நெல் உற்பத்தி முழுமையாக களம் வந்து சேருமா என்பது கேள்விக்குறியாகும்.
* சிவகங்கை மாவட்டத்தில், 61 ஆயிரம் எக்டரில் நெற்பயிர்கள் கருகின. 3, 831 எக்டேர் மிளகாய் கருகும் நிலையில் உள்ளது.
* விருதுநகரில், 1.75 லட்சம் ஏக்கரில் விளைவித்த விவசாய பயிர்கள் கருகி உள்ளன.
* தூத்துக்கடி மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயிறு, உளுந்து, நெல், மல்லி, வெங்காயம், மிளகாய் ஆகியவை கருகியுள்ளன.
* நாகை மாவட்டத்தில் மட்டும் போதிய மலை இல்லாததால் 45 ஆயிரம் எக்டேர் நிலத்தில் மட்டும் பயிர் செய்யப்பட்டது. கிணற்று பாசனம் காரணமாக இதில் 25 சதவீத பயிர் மட்டுமே தப்பியது. மற்றவை கருகின.
* தஞ்சாவூர் மாவட்டத்தில், 1.60 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின. இதனால் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
* திருவாரூர் மாவட்டத்தில் 88 ஆயிரம் எக்டேரில் பயிர் செய்த நெற் பயிர்களும் கருகியுள்ளது.
பயிர்கள் கருகியதால், விவசாயிகள் அதனை, ஆடு, மாடுகள் சாப்பிட விட்டுள்ளனர். புல் தீவனத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தவிக்கும் கால்நடை வளர்ப்போர், மாடுகளை அடிமாட்டுக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட விவசாயிகள்: பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர். இதில், நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 43க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 18 பேரும், தஞ்சாவூரில் 16 பேரும், தூத்துக்குடியில் 4 பேரும், விருதுநகரில் 3 பேரும், சிவகங்கையி்ல 4 பேரும் பலியாகியுள்ளனர். ஈரோடு, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் விவசாயிகள் பயிர்கள் கருகய அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளனர்.
சரியும் நீர்மட்டம்:
பருவ மழை பொய்த்த காரணத்தினால், அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடியாக உள்ளது. பாபநாசம் அணையில் 28.50 அடியாகவும், சேர்வலாறு அணையில் 60.17 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 36.78 அடியாகவும் உள்ளது.
கன்னியாகுமரியில் உயிர்நாடி அணையான பேச்சிப்பாறையில் 7.65 அடி தண்ணீர் உள்ளது. இதன் மொத்த கொள்ளவு 48 அடி. 77 அடி கொண்ட பெருஞ்சாணியில் 29.20 அடி தண்ணீர் உள்ளது. வைகை அணையில் 25.75 அடியும், முல்லைப் பெரியாறு அணையில் 110.70 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மேலும், அனைத்து குளங்கள், ஏரிகள், ஊரணிகள் வறண்டுள்ளன. இதனால் தற்போதே பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீருக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது.
பொது மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை மறியல், முற்றுகை போராட்டம் என தினசரி ஆங்காங்கே நடந்து வருகிறது. தற்போதே, வறட்சி கடுமையாக உள்ள நிலையில், கோடை காலத்தில் வறட்சியின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
English Summary:
Chennai: The failure of the monsoon rains, which began to show the severity of the present drought, drought in the summer and are thinking of the people in fear. Drought, storm impact, the northeast monsoon, ended before January 4.