தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சட்டப் பேரவையில் அந்தக் கட்சியின் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதி உறுப்பினராக இருந்த சீனிவேல் மரணத்தால் அங்கு இடைத் தேர்தலும் நடந்தன. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ஆம் தேதி நடந்தது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூரில்...: தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (நவ.22) எண்ணப்பட்டன. அரவக்குறிச்சியில் பதிவான வாக்குகள் கரூரில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட வாக்குகள் குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் பதிவானவை மதுரை மருத்துவக் கல்லூரியிலும் எண்ணப்பட்டன.
வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மூன்று தொகுதிகளிலும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
அரவக்குறிச்சி தொகுதி வாக்குகள் எண்ணப்பட்ட குமாரசாமி பொறியியல் கல்லூரியில் போதிய இடவசதி இல்லை எனக் கூறி பாஜக, தேமுதிக வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மற்ற இரண்டு தொகுதிகளான திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற்றது.
தொடர்ந்து முன்னிலை: அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி (அதிமுக), கே.சி.பழனிசாமி (திமுக), எஸ்.பிரபு (பாஜக), எம்.முத்து (தேமுதிக), எம்.பாஸ்கரன் (பாமக), ஜி.அரவிந்த் (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, அதிமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் திமுக வேட்பாளர் பழனிசாமியை விட செந்தில் பாலாஜி முன்னிலை பெற்றிருந்தார். அரவக்குறிச்சியில் மொத்தம் 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தம் பதிவான ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு 88 ஆயிரத்து 68 வாக்குகள் (53.51 சதவீதம்) கிடைத்தன. திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிக்கு 64 ஆயிரத்து 407 வாக்குகளும் (39.13 சதம்) வாக்குகள் கிடைத்தன. மொத்தமுள்ள 18 சுற்றுகளின் முடிவில், 23 ஆயிரத்து 661 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதியில் எம்.ரங்கசாமி (அதிமுக),
அஞ்சுகம் பூபதி (திமுக), எம்.எஸ்.ராமலிங்கம் (பாஜக), அப்துல்லா சேட் (தேமுதிக) உள்ளிட்ட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 444 வாக்குகள் பதிவாயின.
அதில், ஆளும் அதிமுகவைச் சேர்ந்த எம்.ரங்கசாமி ஒரு லட்சத்து ஆயிரத்து 362 வாக்குகள் (54.37 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் அஞ்சுகம் பூபதி, 74 ஆயிரத்து 488 வாக்குகள் (39.95 சதம்) பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதிமுக வேட்பாளர் ரங்கசாமி, 26 ஆயிரத்து 874 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தஞ்சாவூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்: சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேல் உடல் நலக் குறைவால் இறந்ததால், அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டார். பி.சரவணன் (திமுக), ஆர்.சீனிவாசன் (பாஜக), டி.தண்டபாணி (தேமுதிக), மகாதேவன் (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 2 லட்சத்து 3 ஆயிரத்து 98 வாக்குகளில், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 32 வாக்குகள் பெற்று (55.65 சதவீதம்) அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். திமுகவின் பி.சரவணன், 70 ஆயிரத்து 362 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதையடுத்து, 42 ஆயிரத்து 670 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பேரவையில் 136 பேர்
மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, அந்தக் கட்சிக்கு பேரவைத் தலைவர் பி.தனபாலுடன் சேர்த்து 133 பேர் இருந்தனர். இப்போது, மூன்று தொகுதிகளின் வெற்றி காரணமாக சட்டப் பேரவையில் அதிமுகவின் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது.
ஓரிரு நாள்களில் பதவியேற்பு
வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த மூன்று பேரும் சட்டப் பேரவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.
ஓரிரு நாளில் சட்டப் பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் பி.தனபால் முன்னிலையில் மூவரும் சட்டப் பேரவை உறுப்பினர்களாக பதவியேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரவக்குறிச்சி
மொத்த வாக்குகள் 2.00,352
பதிவானவை 1,64,582
வி.செந்தில் பாலாஜி (அதிமுக) 88,068
கே.சி.பழனிசாமி (திமுக) 64,407
எஸ்.பிரபு (பாஜக) 3,162
எம்.முத்து (தேமுதிக) 1,513
எம்.பாஸ்கரன் (பாமக) 995
ஜி.அரவிந்த் (நாம் தமிழர்) 793
நோட்டா (யாருக்கும் வாக்கில்லை) 1,538
தஞ்சாவூர்
மொத்த வாக்குகள் 2,68,757
பதிவானவை 1,86,444
எம்.ரங்கசாமி (அதிமுக) 1,01,362
அஞ்சுகம் பூபதி (திமுக) 74,488
எம்.எஸ்.ராமலிங்கம் (பாஜக) 3,806
அப்துல்லா சேட் (தேமுதிக) 1,534
ஏ.நல்லதுரை (நாம் தமிழர்) 1,192
குஞ்சிதபாதம் (பாமக) 794
நோட்டா 2,295
திருப்பரங்குன்றம்
மொத்த வாக்குகள் 2,86,483
பதிவானவை 2,03,098
ஏ.கே.போஸ் (அதிமுக) 1,13,032
பி.சரவணன் (திமுக) 70,362
ஆர்.சீனிவாசன் (பாஜக) 6,930
டி.தண்டபாணி (தேமுதிக) 4,105
எல். மகாதேவன் (நாம் தமிழர்) 1,082
நோட்டா 2,214
English Summary : AIADMK landslide win 3 seats.3 seats in Tamil Nadu, AIADMK's election, the ruling party won a landslide victory. However, the strength of the party in the Legislative Assembly increased to 136.