சென்னை:முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும், அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களை மலர் மாலைகளால் அலங்கரித்தும், மலர்கள் தூவியும், அமைதிப் பேரணி நடத்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம்:
சேலம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கடைவீதி வழியாக அண்ணாசிலை வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டம்:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரக்கழகம் சார்பில் நடைபெற்ற மவுன ஊர்வலத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் பங்கேற்றனர். பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திரளான இஸ்லாமிய பெண்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். இதேபோல், திருவாரூர் மாவட்ட அனைத்து செய்தி-ஊடகத்துறை சார்பில் இரங்கல் தெரிவித்து மவுனம் அனுசரிக்கப்பட்டது.
நாகை மாவட்டம்:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை சிவபுரம், வேதசிவாகம பாடசாலையில், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வேதம்படித்த 50 மாணவர்கள் பங்கேற்று, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேதபாராயணம் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவப் படத்திற்கு, பள்ளிக்குழந்தைகள் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், குன்னூரின் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்டம் :
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு முன்பு, ஊழியர்கள் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். பரமக்குடி பேருந்து நிலையத்தில் கழக தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.
கன்னியா குமரி மாவட்டம் :
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவம் மணல் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரூர் புது கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், 9 டன் மணலைக் கொண்டு, 8 மணி நேரத்தில் இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இதனை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தஞ்சை வடக்கு மாவட்டம்:
கும்பகோணம் நகர 21-வது வார்டு சார்பில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தின் முன்பு, குத்துவிளக்கேற்றி, மலர்களைத் தூவி, கழக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாநகர் மாவட்டம்:
29-வது வார்டில், 3-வது நாளாக கழகத்தினர் ஏராளமானோர், மொட்டை அடித்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவி, கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்,:
பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு வழக்கறிஞர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியக் கழகம் சார்பில், 100-க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதி, தாண்டாம்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மவுன ஊர்வலத்தில், அ.தி.மு.க.வினருடன் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்று, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை மாவட்டம் :
கோவை சுகுணாபுரத்தில் இருந்து, மைல்கல், கிருஷ்ணாநகர், ரெயின்போ காலனி உள்ளிட்ட பகுதிகள் வழியாக, பொதுமக்கள் மவுன ஊர்வலம் சென்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்று, மலரஞ்சலி செலுத்தினர். திருச்சி அரசு மருத்துவமனை அருகே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் திருவுருவப் படத்திற்கு, அ.தி.மு.க. மகளிரணியினர் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி மாநிலம்:
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில், மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பில், இசையஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மறைந்த முதலமைச்சரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் புறநகர் மாவட்டம்:
தாராபுரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் மொட்டையடித்து, முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் நீதிமன்ற வளாகத்தில், திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்று, முதலமைச்சரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். திருத்தணி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் ஏராளமான வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம்:
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து புறப்பட்ட மவுன ஊர்வலம், பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட முதலமைச்சரின் திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலமைச்சரின் ஜெயலலிதா மறைவுக்கு, வெளிநாடுவாழ் தமிழர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லண்டனில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதியான குஹாய்டனில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், தமிழர்கள் ஏராளமானோர் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.
English Summary:
Chief Minister Jayalalithaa's death, Tamilnadu is mired in grief. Various parts, Digg Volunteers, members of the public, the late Chief Minister Jayalalithaa's photo Images garlands decorating, floral, peaceful demonstrations have been paying tearful tribute