சென்னை: லோக்பால் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் குட்டு மத்திய அரசுக்கு மட்டுமல்ல.. அதிமுக அரசுக்கும்தான்; ஆகையால் தமிழகத்தில் லோக் அயுக்தாவை உடனே அமைக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எந்நேரமும் ஆர்வம் காட்டுவதாக கூறும் மத்திய அரசு லோக்பால் அமைப்பை ஏன் இன்னும் ஏற்படுத்தவில்லை என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம். அதிமுக ஆட்சியில் தாண்டவமாடும் ஊழலைக் காணும் அனைத்து ஊழல் ஒழிப்பு ஆர்வலர்கள் மத்தியிலும் உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்வி தமிழகத்தில் உள்ள அதிமுக அரசின் தலை மீதும் வைத்த குட்டு என்றே எண்ணப்படுகிறது.
லோக்பால் அமைப்பு உருவாக்குவதற்காக காந்தியவாதி அன்னா ஹசாரே, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தற்போது புதுவை மாநில ஆளுனராக இருக்கும் மாண்புமிகு கிரன்பேடி, உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் ஆகியோர் நடத்திய ஆகஸ்ட் போராட்டமும் அதையொட்டி நிகழ்ந்த போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் அனைத்தும் நாட்டில் ஊழல் ஒழிப்பில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஊழலை முற்றிலுமாக துடைத்தெரிய தேவையான லோக்பால் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று வலியறுத்தினார்கள்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க தமிழகத்தில் முதன் முதலில் "பொது வாழ்வில் ஈடுபட்டோர் இலஞ்ச ஊழல் குற்ற தடுப்புச் சட்டம்" கொண்டு வந்து 5.4.1973 அன்று தமிழக சட்டமன்றம் மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றிய தலைவர் கருணாநிதியும் மத்தியில் லோக்பால் அமைப்பு உருவாகவும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்தவும் பேராதரவு தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் முதலமைச்சரையும் விசாரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் போல், பிரதமரையும் விசாரிக்கும் வகையில் லோக்பால் சட்டம் இருக்க வேண்டும் என்றே அன்று கழகத்தின் சார்பில் கருணாநிதி கோரிக்கை விடுத்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, "லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டம் 2013" பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று 16.1.2014 அன்று நடைமுறைக்கு வந்து விட்டது.
ஆனால் அதன் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான அரசு இதுவரை லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை. லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியை (பதவியில் இருப்பவரோ அல்லது ஓய்வு பெற்றவரோ) நியமிக்க லோக்பால் சட்டப் பிரிவு 3(2) கூறுகிறது. "பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவர் நியமிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி, மிகச்சிறந்த நீதியாளர்" ஆகிய ஐந்து உறுப்பினர்கள் கொண்ட தேர்வு கமிட்டி லோக்பால் அமைப்பின் தலைவரையும், இதர உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் என்றும் அப்படி தேர்வு செய்யப்படுபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்றும் லோக்பால் சட்டப்பிரிவு 4(1) கூறுகிறது.
பதினாறாவது பாராளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சி இல்லை என்பதால், லோக்பால் சட்டப்பிரிவில் உள்ள "எதிர்கட்சித் தலைவர்" என்பதை "Single largest party- தலைவர்" என்று திருத்தம் செய்வதற்காக, திரு சுதர்ஸன் நாச்சியப்பன் தலைமையிலான "பணியாளர் மற்றும் குறை தீர்ப்பு, சட்டம், நீதி" பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அக் குழுவும் தனது பரிந்துரையை 7.12.2015 அன்றே மத்திய அரசிடம் கொடுத்து விட்டது. ஆனாலும் இதுவரை லோக்பால் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் மத்திய அரசு தாமதிக்கிறது. அதனால்தான், "அவசரச் சட்டம் கொண்டு வந்து இந்த திருத்தங்களை நிறைவேற்றி லோக்பால் அமைப்பு ஏன் உருவாக்கக் கூடாது?" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அவர்கள் தலைமையிலான அமர்வு மத்திய அரசைப் பார்த்து நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு ஒருபுறமிருக்க, அதிமுக ஆட்சியில் எந்த துறையில் எடுத்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கமிஷனும், கலெக்ஷனும் ஆளுங்கட்சியினரின் நிரந்தர நண்பர்களாக இருக்கின்றன. ஆனால் ஏற்கனவே கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட"பொது வாழ்வில் ஈடுபட்டோர் இலஞ்ச ஊழல் குற்ற தடுப்புச் சட்டத்தை" 1977-ஆம் ஆண்டு ரத்து செய்த மோசமான வரலாற்று பின்னனியைக் கொண்டுள்ள அதிமுக அரசு தற்போதும் லோக் அயுக்தா அமைப்பை மாநிலத்தில் ஏற்படுத்த தயக்கம் காட்டுகிறது.
லோக்பால் சட்டத்தில் உள்ள பிரிவு 63-ன்படி அதிமுக அரசு 365 நாட்களுக்குள் லோக்அயுக்தா அமைப்பை தமிழகத்தில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் 34 மாதங்களாக "லோக் அயுக்தா" அமைக்கும் கோப்பை கிடப்பில் போட்டு வைத்துள்ளது அதிமுக அரசு.
இந்த அமைப்பை உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையிலும் கூட வழக்கமான "வாய்தா வாங்கும்" செயலில்தான் அதிமுக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, ஊழல் ஒழிப்பில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஊழலை தடுக்கும் லோக் அயுக்தா அமைப்பையும் ஏற்படுத்தவில்லை.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால் ஆளுங்கட்சியின் ஊழல்வாதிகளை மாட்டிக் கொண்டு சிறை கம்பிகளை எண்ண வேண்டிய வரும் என்ற அச்சத்தால் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்குவதை ஊறுகாய் பானையில் போட்டு அடைத்து வைத்துள்ளது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி "லோக்பால் அமைப்பு" தேவையோ, அதே மாதிரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு "லோக் அயுக்தா" அமைப்பு இன்றியமையாதது.
பொது வாழ்வில் தூய்மையை நிலைநாட்டவும், அப்பழுக்கற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கவும் உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனத்திற்குப் பிறகாவது "லோக்பால்" அமைப்பை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் இன்றுடன் முடிவதால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த சலுகைகளை 31.3.2017 அன்று வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
லோக்பால் விஷயத்தில் மத்திய அரசுக்குத் தானே உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்று அலட்சியமாக இருக்காமல், தமிழகத்தில் "லோக் அயுக்தா" அமைப்பை உடனடியாக அதிமுக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
English Summary:
DMK treasurer MK Stalin has urged the TN govt. should set up Lokayukta.