ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களில் பாதி பேர் இதுவரை ஜல்லிக்கட்டைப் பார்த்ததே இல்லை என்று பலரும் கூறிவந்தனர். இனி அப்படி சொல்ல முடியாது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களுக்கு, ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் ஒரு படி மேலே சென்று மாடுபிடி வீரராக மாற வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? மாடு பிடிப்பது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா? இதோ... ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறார் தமிழ்நாடு மாடுபிடி சங்க தலைவர் முத்தையா.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக குவிந்துள்ள மாடுகளை, தன் கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்த முத்தையாவின் பின்னால் பெரும் கூட்டம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அவர் ஏதாவது ஒரு மாட்டின் அருகில் நின்றால்... ‛‛ஏலேய் இந்த தடவ இந்த மாடு பிடிபடாது'' என்று அவரின் எண்ண ஓட்டத்தை சிலர் சொல்லிக் கொண்டிருக்க, மாடு பிடிப்பது எப்படி என்ற கேள்வியுடன் முத்தையாவை ஓரம் கட்டினோம்.
''தமிழ்நாடு முழுக்க மாடு பிடிப்பதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு கொடுத்துகிட்டு இருக்கேன். திண்டுக்கல், தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர், சிவகங்கை, சேலம், ராமநாதபுரம், கரூர், மதுரை உள்பட 14 மாவட்டத்துல 1,400 மாடுபிடி வீரர்களை உருவாக்கி இருக்கேன். நம்மட்ட இருக்குற வீரர்கள் எல்லாரும் ஜல்லிக்கட்டுல டிவி, ஃபிரிட்ஜ் ஜெயிக்கக் கூடியவங்க. மாடு வாடி வாசல்ல இருந்து வரும்போதே அத கணிச்சுருவேன். அது எந்தப் பக்கம் பாயும், எங்க வரும்ன்னு கரெக்டா சொல்லிடுவேன். கூசாம புடிடான்னு மாடு புடிக்குறவனுக்கு தெம்பு கொடுத்துருவோம். இதுதான் பயிற்சி. ஒரு மாடு பிடி வீரனுக்கு தேவை மனதைரியம் மட்டும்தான்.
தமிழ்நாட்டுல பல லட்சம் மாடு இருக்கு. இதுல நல்லா பாயுறது 70 மாடுதான். நாமக்கல்ல அழகு நாச்சியார்னு ஒரு அம்மா வளக்குற மாடுதான் இப்ப வரைக்கும் நம்பர் ஒன்னு. இதுவர யாரும் அந்த மாட்டைப் பிடிக்க முடியல. போன தடவ என் தம்பி மேட்டுப்பட்டி மூர்த்திய குத்தி சரிச்சுப்புடுச்சு. அவனுக்கு கன்னத்துலயும், கம்முகூட்டுலயும் 15 தையலு. அதுக்காகவே கங்கணம் கட்டி காத்து இருந்தோம். இப்ப தடை நீங்குனதுனால இந்த வருஷம், அலங்காநல்லூர்ல அதைப் பிடிச்சுப்புடுவோம்.
அப்புறம்... பட்டமங்கலம் செந்தில். அவரோட மாடு ஏசி வண்டிலதான் வரும். தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் ஒரு மாடு வச்சிருக்காரு. முன்னாள் எம்.பி ரித்தீஷ் ஒரு மாடு வச்சிருக்காரு. சேலம் வீரபாண்டியார் மகன் ராஜா மாடு வச்சிருக்காரு. வைத்தியலிங்கம் மகன்ட்ட மூணு மாடு இருக்கு. புதுக்கோட்டை கண்ணன், ஆலங்குடி சுரேஷ், அண்ணா பஸ் ஸ்டாண்ட் என்ஜினீயர் சபாபதி, அண்ணாநகர் பிரேம், அவனியாபுரம் ஏ.கே கண்ணன் இவங்ககிட்டதான் தமிழ்நாட்டுல, ஜல்லிக்கட்டுக்கு பாயுற சரியான மாடுகள் இருக்கு.
அரசியல்வாதிகள், தொழிலதிபர், என்ஜினீயர்கதான் மாடு அதிகமா வச்சிருக்காங்க. இந்த மாடுகளை கவனிக்க தனி ஆளு, மாட்டுக்கு ஃபேன் போட்ட ரூம், அதுக்கு பச்சரிசி, தேங்காய், சோள மாவு, கருக்க தவுடு, பருத்திக்கொட்டை, வாரத்துக்கு ஒரு நாளு லைஃப் பாய் சோப்பு போட்டு நீச்சல்... இப்படி அம்சமா பார்த்துப்பாங்க. பிள்ளைய கூட அப்படி வளர்க்க மாட்டாங்க. இந்த 70 மாட்டுல பணக்காரங்க வீட்டு மாடை விட சாதாரண வீட்டு மாடுதான் நல்லா பாயும். மாடு வாங்குறது மட்டும்தான் ஆம்பளையா இருக்கும். அத வளக்குறது எல்லாமே பொம்பள ஆளுக தான்.
மாடு அவங்க அவங்க ராசிக்கு தக்கதான் அமையும். தனக்கு சாப்பாட்டுக்கு இல்லைனாலும் மாட்டுக்கு எல்லாம் கொடுத்துருவாங்க. அவுக எவ்வளவு கொஞ்சி வளத்தாலும், அது யாரோட மாடா இருந்தாலும் களத்துல அது எல்லாம் செல்லாது. எங்கிட்ட திறமை இருக்கு, உங்கிட்ட மாடு பலம் இருக்கு. மாடு நினைச்சா குத்தட்டும் அப்டின்னு தான் இறங்குவோம்.
முதல்ல அலங்காநல்லூர்ல 2பேரு தான் மாடு புடிச்சோம். இப்போ 600 பேரு புடிக்குறாங்க. எந்த ஊருல ஜல்லிக்கட்டு நடந்தாலும் எங்களுக்கு அழைப்பு வந்துரும். நாங்க கார் புடிச்சு போயிருவோம். எத்த பெரிய அடங்காத மாட்டையும் அலங்காநல்லூர்காரன் அடக்கிருவான். சவால் விட்டு புடிப்போம். முதல்ல மாடு புடிக்க வர்றவனுக்கு போக்கு மாடு புடிக்க கத்துக் கொடுப்போம். போக்கு மாடுன்னா ஓடுற மாடு. அத புடிச்சுகிட்டு 150 மீட்டர் ஓடிட்டா ஜெயிச்சதா அர்த்தம். அதுக்கு பரிசா தங்க காசு, அண்டா, குண்டா, வேட்டி , வாட்ச், குத்துவிளக்கு கொடுப்பாங்க.
அப்புறம் சுத்து மாடு. ஒரு இடத்துல நிண்டு மாடு சுத்தும்போது, அத மூணு புடி புடிச்சா, புடிகாரனுக்கு பரிசு. ரெண்டரையில இறங்கிட்டா பரிசு மாட்டுகாரனுக்கு. இதுக்கு ஃப்ரிட்ஜ், சைக்கிள், கிரைண்டர், மிக்சி, ஸ்கூட்டர், கொடுப்பாங்க. ஜல்லிக்கட்டுல சாதி, மதம் கிடையாது. திறமை இருந்தா யாருனாலும் மாடு புடிக்கலாம். வருஷத்துல 4 மாசம்தான் இந்த விளையாட்டு நடக்குது. அதனால இதையே முழு வேலையா பாக்க முடியாது.
படிச்ச பையங்க நிறைய பேரு மாடு பிடி வீரர்களா இருக்காங்க. மாடு பிடி வீரர்கள்ல பாதி பேருபோலீஸ் வேலையில இருக்காங்க. ஜல்லிக்கட்டுனா லீவு போட்டுட்டு வந்துருவாங்க. இந்த ஜல்லிக்கட்டுத் தடைய நீக்குறதுக்கு தமிழ்நாடே போராடுனதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. இந்த தடை உடைச்சதுக்கு அப்புறம் இப்ப நிறைய பேரு ஜல்லிக்கட்டு விளையாட ஆர்வமா வாராங்க.
தமிழ்நாடு முழுக்க 14 மாவட்டங்கள்ல பயிற்சி கொடுத்துட்டு வர்றேன். காசு, பணம் எதுவும்வாங்காம ஒரு சேவையாதான் இத செய்றேன். இதுக்காக அரசாங்கத்துல கிடைச்ச விளையாட்டு வாத்தியார் வேலையையும் விட்டுட்டு வந்துட்டேன். திரும்பவும் சொல்றேன், இந்த விளையாட்டை மீட்டு கொடுத்த மாணவர்களுக்கு, பெண்களுக்கு, பொதுமக்களுக்கு நன்றி. என்ன... போராடுன பிள்ளைங்க மேல போலீஸ் தடியடி நடத்துனது தான் மனசுக்கு சங்கடமா இருக்கு'' என்று நெகிழ்கிறார் முத்தையா.
‛ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய சட்டப்படிதான் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என பீட்டா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா தெரிவித்துள்ளார்.
பீட்டா தலைவர் பூர்வா ஜோஷிபுரா
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், சேவாக், முகமது கைஃப், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் போன்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ‛ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றால் குத்துச்சண்டை போட்டிக்கும் தடை விதிப்பதுதான் நியாயமானதாக இருக்கும்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
‛டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது. அதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் தங்கையும், விலங்குகள் நல ஆர்வலருமான அம்பிகா சுக்லாவும் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது, அம்பிகா சுக்லாவை நோக்கி, 'முரட்டுக்காளை' படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலைப் பாடி கலாய்த்து எடுத்து விட்டார் ஸ்ரீகாந்த். அம்பிகா சுக்லாலோ தொடர்ந்து எதையோ ஒப்புக்கு பேசி சமாளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில்' தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க, தமிழ் கலாச்சாரம் வாழ்க' என ஸ்ரீகாந்த் பேசி முடித்தார். அம்பிகா சுக்லா வாயை மூடிக் கொண்டார்.
எப்போதும் அமைதியாகவே இருக்கும் தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டு நாடே வியக்கிறது. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும், சேலத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
இதற்கிடையே பீட்டா இந்தியா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா ஆங்கில இணையதளத்துக்கு ஒரு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, ''ஜல்லிக்கட்டுத் தடைக்கு நாங்கள் காரணம் இல்லை. எங்களைப் போலவே பல அமைப்புகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அதில் நாங்களும் ஒன்று. இந்திய சட்டப்படித்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உரிமையை, பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். தமிழகத்தில் 144 விவசாயிகள் இறந்து போனார்களே... அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள். நாட்டுக் காளைகளை காக்க பல்வேறு வழிகள் உள்ளன.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படும் நாட்டு மாடுகளை காக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களது அந்த முயற்சிக்கு நீங்களும் உதவ முன்வாருங்கள். அவைகளும் நாட்டு மாடுகள்தானே. இறைச்சிக்காகவும், தோல் போன்றத் தேவைகளுக்காகவும் அவைகள் கொல்லப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதால் நாட்டு மாடுகள் அழிவது குறைவுதான்.
இந்தியாவின் பிற மாநிலங்கள் நாட்டு மாடுகளை காப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்து ஆதாயங்கள் பெறுகின்றன. நமது அரசியல் அமைப்பு சட்டம், ஒவ்வொரு இந்திய குடிமகனும் விலங்குகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. சட்டத்தை மதிப்பது நமது கடமை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழ் கலாசாரம் உயர்ந்தது. இதற்கு மேல் எதுவும் கூறத் தேவையில்லை'' என தெரிவித்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் கெடு விதித்திருந்தனர். தற்போது கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் சங்கமும் நாளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. போராட்டக் களமும் சூடுபிடித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளதால், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு தற்காலிக தீர்வு தேவையில்லை. நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டத்தை கைவிட முடியாது. அதனால் எங்களது போராட்டம் தொடரும். நாட்டு மாடுகளை காப்பதற்கு நடவடிக்கை வேண்டும்' என தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், இன்று மாநிலத்தில் பெரும்பாலான வர்த்தகர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சில ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் இன்று ஆட்டோக்கள் இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெரும்பாலான கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில தனியார் பள்ளிகளுக்கும் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கமும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. இதில் அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு என்ற ஒருவார்த்தை, தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரியும் தீ போல பரவி விட்டது. இந்தத் தீயை ஜல்லிக்கட்டு நடத்தி மட்டுமே அணைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும்.
மேலும், தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கு, இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்து காவலர்களுக்குமே இதே போன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார்.
இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரை இளைஞர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். இதற்கிடையே அவர் பேசும் போது, சில காவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியழகை தொடர்ந்து பேச வைத்தனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், இளைஞர்கள் போராட்டமாக வெடித்துள்ளது. ஒரு சிறு பொறியாக கிளம்பும் நெருப்பு ஒரு ஊரையே அல்லது மிகப்பெரிய வனப்பகுதியையே எரித்துச் சாம்பலாக்கி விடும். அதுபோன்று, சிறிய அளவில் அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள், அடுத்தடுத்து சென்னை மெரினா, மதுரை,கடலூர், திருச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி என தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவி விட்டது.
தமிழர் திருநாள், தமிழர்கள் பண்டிகை, உழவர் திருநாள் என்றெல்லாம் இதுவரை பேசிவந்த நிலையில், உண்மையான தமிழர் பண்டிகையாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொங்கல் திருநாளாக இந்த ஆண்டு பண்டிகை அமைந்துள்ளது எனலாம்.
இளைஞர் சக்தி என்பதை தமிழகமும், மத்திய, மாநில அரசுகளும், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அக்கறையாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், நாளை (ஜனவரி 20) மவுனப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுவரை இந்த நடிகர்-நடிகைகள் எங்கே சென்றிருந்தார்கள்? இளைஞர்கள், மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள், மருத்துவ மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஒன்று திரண்ட பின்னரே, திடீரென சுதாரித்துக் கொண்டு, இளைஞர்கள் இல்லாவிட்டால், திரைப்படம் இல்லை என்ற உணர்வு உரைத்து, மவுனப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு. தமிழர்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாக, இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஏதாவது செய்திருக்கலாம். மாநில அரசாவது அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். கடைசி வரை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது போன்ற சூழலில்தான், இளைஞர்கள் வீதியில் இறங்கி அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்களின் போராட்டத்தில் சென்னை மெரினாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்றார். "தங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியின் சாயமும் வேண்டாம். எந்த திரைப்பட நடிகரும் தங்களுக்குத் தேவையில்லை. இது இளைஞர்களின் ஒற்றுமைப் போராட்டம்" என மிகத் தெளிவாகக் கூறி விட்டதால், இந்தப்போராட்டத்தால், தாங்கள் அரசியல் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அரசியல்வாதிகளுக்கும், அனைத்து நடிகர்களுக்குமே உள்ளது எனலாம்.
காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கொக்கரித்தபோது, இந்த தமிழ் திரைப்படத்துறையினர் எங்கே இருந்தார்கள்? அனைத்து நடிகர்-நடிகைகளும் வெளிநாட்டுக்கு அவுட்டோர் சென்று விட்டார்களா? ஏனென்றால், தங்களின் திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்பட வேண்டும் அல்லது அந்த மொழியில் உரிமைக்கு விற்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கலாம். திரைப்பட நடிகர்களிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் உள்ளது.
"கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்துப் போனதாலும், விவசாயிகள் கொத்து கொத்தாக மரணம் அடைந்தது, தற்கொலை செய்து கொண்டது பற்றி எந்தவொரு திரைப்பட நடிகராவது கவலைப்பட்டிருப்பாரா? அல்லது தாங்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தில், ஏதாவது ஒரு சிறு தொகையை உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உதவித்தொகையாக இதுவரை அளித்துள்ளார்களா? இல்லையே. இப்போது, எதிர்பாராத வகையில், இளைஞர்கள் போராட்டம் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளதால், திரைத்துறையினரும் பெயரளவுக்கு உணர்வுகளைத் தெரிவிப்பதாக காலங்கடந்து அறிவித்துள்ளனர்." என்கிறார்கள் போராட்ட களத்தில் நிற்கும் இளைஞர்கள்.
'காவிரிக்காக போராடாத நடிகர் சங்கம் எங்கள் போராட்டத்தில் தலையிட வேண்டாம்' என்ற கோஷம் மெரினாவில், அலங்காநல்லூரில், கும்பகோணத்தில், தமுக்கத்தில் உரக்க கேட்கிறது.
இந்தப் போராட்டம் என்பது அரசியல்வாதிகள், கட்சிகளுக்கு மட்டுமல்ல, திரைப்படத்துறையினருக்கும், புகழ்பெற்ற நடிகர்களுக்கும் ஒரு எச்சரிக்கைதான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இது ஏதோ ஒரு நடிகருக்கான அறிவுறுத்தல் அல்ல. அனைத்து நடிகர்-நடிகைகளுக்குமானது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டம் உச்சம் பெற்று வருகிறது. 51 ஆண்டுகளுக்கு முன், இதேபோன்றதொரு தன்னெழுச்சிப் போராட்டத்தைத் தமிழகம் சந்தித்தது. தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைத்த அந்தப் போராட்டம் இந்திக்கு எதிரானது. தொடக்கத்தில் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அந்தப் போராட்டம் மாணவர்களின் கரத்திற்கு வந்த பின்னால் விஸ்வரூபமெடுத்தது. தமிழக இளைஞர்களின் குரல் இந்தியாவையே நடுங்கச் செய்தது. ‛இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம், அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது’ என்கிறார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் எழுத்தாளர் ஜெயப்பிரகாசம்
“உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜல்லிக்கட்டில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் வாடிவாசலைத் தாண்டி வெளியேறி இருக்கிறது. தமிழ்க் கலாசாரத்தைக் காக்கிற போராட்டமாக, காவிரி நீர் உரிமையைக் கேட்கிற போராட்டமாக, விவசாயிகளுக்கான போராட்டமாக, தமிழர்களுடைய ஒட்டுமொத்த பிரச்னைகளுக்காக போராட்டமாக மாறி விட்டது. இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி.
1965ல் நடந்த போராட்டம் என்பது, மொழிக்கான ஒற்றைப் போராட்டமாகவே இருந்தது. அன்று இருந்த மொத்த பிரச்னைகளுக்கான போராட்டமாக அது பரிணாமம் பெறவில்லை. ஆனால் இன்று, தமிழ்நாட்டின் பிரதான பிரச்னைகளின் பரிணாமமாக இந்தப் போராட்டம் மாறியிருக்கிறது.
இந்தப் போராட்டம், தன்னெழுச்சியாகத் தொடங்கினால் கூட தேர்ந்த திட்டமிடல் போராட்டக்குழுவினரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், இளைஞர்களையும் மாணவர்களையும் ஈர்த்து, அந்த மையத்தில் இருந்து வெளியேறி தமிழகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. அதற்குப் பின்னால் தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அமைச்சர்கள் வந்து பேசும்போது கூட, பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மாணவர்கள், "முதலமைச்சர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட வேண்டும், அதை வைத்து நாங்கள் போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என்பதைத் தீர்மானிப்போம்.." என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்கள்.
இதுநாள் வரையிலும் தங்கள் பிரச்னைகளை வெளிப்படுத்தாமல் தங்களுக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அதை வெளிப்படுத்த தகுந்த வெளி இப்போது அமைந்திருக்கிறது. இளைஞர்களை திசைதிருப்புவதற்கான பல்வேறு சூழல்கள் இருந்த போதிலும் அதையெல்லாம் கடந்து ஒற்றைக்குரலில் அனைவரையும் இணைத்திருப்பது இந்தப் போராட்டத்தின் வெற்றி.
1965ல் இல்லாத சில வாய்ப்புகள் இப்போது இளைஞர்களுக்குக் கிடைத்திருப்பதும் முக்கியமானது. அப்போது தொலைக்காட்சிகள் கிடையாது, வலைதளங்கள் கிடையாது, வானொலியும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பத்திரிகைகளும் ஒரு கட்டத்திற்கு மேல் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மாணவர்களுக்கு அப்போதிருந்த ஒரே தொடர்பு, கடிதத் தொடர்பு தான். ஒரு கட்டத்தில் அஞ்சல் அலுவலகங்களிலும் தணிக்கைகள் நடந்தன. இன்று வலைத்தளங்கள், முகநூல் வாய்ப்புகள், உரிமையோடு செயல்படக்கூடிய ஊடகங்கள் என பல வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இது கூடுதல் வலிமை.
1965-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும், தற்போதைய போராட்டத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு போராட்டங்களுக்குமான வீரியமான தொடக்கம் மதுரையில் தான் நடந்திருக்கின்றன. 1965, ஜனவரி 25ம் தேதி மாணவர்கள் கருப்புப்பட்டை அணிந்து கல்விக்கூடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தலைமை அறிவிக்கிறது. மதுரையில் அதைப்போல மாணவர்கள் கருப்புப்பட்டை அணிந்து ஊர்வலம் செல்கிறார்கள். அப்போது வடக்குமாசி வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கொடும் தாக்குதலை நடத்தினார்கள். 5 மாணவர்கள் வெட்டப்பட்டார்கள். உடனடியாக மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, காங்கிரஸ் கொடிக்கம்பங்கள், குடியரசு தினத்திற்காக வைக்கப்பட்டுள்ள வளைவுகள் அனைத்தையும் உடைத்து நொறுக்குகிறார்கள். மதுரையில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தி எங்கும் பரவுகிறது.
மறுநாள் 26ம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார். சென்னையில் பல கல்லூரி மாணவர்களும் ஒருங்கிணைந்து கோட்டை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். ஊர்வலம் முடிந்து திருவல்லிக்கேணி வெங்கடேஸ்வரா ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர்களைச் சுற்றி வளைத்து காவலர்கள் கொடும் தாக்குதலை நடத்தினார்கள். பச்சையப்பன் கல்லூரியிலும் தாக்குதல் நடந்தது. இப்படி கடும் நெடுக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தொடர்ந்தன. ஆனால், போராட்டத்தை வடிவமைத்தது மாணவர் அமைப்புகளின் தலைமை. அந்தப் போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைப்பு இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் போராட்டம் என்பது முழுக்க, முழுக்க தன்னெழுச்சியாக நடக்கிறது. எவ்வித பிரசாரமும் இல்லாமல் உணர்வுப்பூர்வமாக ஆண்களும் பெண்களும் கூடுகிறார்கள்.
மீண்டும் எனக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சிகள் மனக்கண் முன் வந்து போகின்றன. இது முக்கியமான தொடக்கம். இளைஞர்களின் ஒழுங்கும், கட்டுப்பாடும், தங்கள் நியாயத்தை எடுத்து வைத்துப் போராடும் பாங்கும் உண்மையிலேயே நம்பிக்கையை உருவாக்குகிறது. அதே நேரம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை எப்படி வெறியோடு நடந்து கொண்டதோ அதே அடக்குமுறை உணர்வோடு தான் இப்போதும் காவல்துறை நடந்து கொள்கிறது. அன்று எப்படி மத்திய மாநில அரசுகள் போராட்டத்தை எதிர்கொண்டனவோ அதைப்போலவே இப்போதைய அரசுகளும் எதிர்கொள்கின்றன.
இன்றிருக்கும் வாய்ப்புகளும், இளைஞர்களின் வலிமையும் நிச்சயம் நல்லதொரு விளைவை நோக்கி தேசத்தை இட்டுச்செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..." என்று உணர்ச்சிப் பூர்வமாக சொல்கிறார் பா.ஜெயப்பிரகாசம்.
தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் உலகத்தமிழர்கள் மத்தியிலும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் ஒரு பகுதியாக இலங்கை யாழ்ப்பாணத்தில்,தமிழக ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் முருகன் ஆலய முன்றலில் இன்று (புதன்கிழமை) மாலை இளைஞர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தன்னெழுச்சியாக ஒன்றுகூடிய இளைஞர்கள் எவ்வித குழப்பங்களுக்கும் இடம்கொடுக்காமல் அமைதியான முறையில் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரியம், பீட்டாவை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "அலங்கா 'நல்லூர்' ஆடும் வரை ஈழ 'நல்லூர்' அடங்காது", "தமிழனின் தனித்துவத்தை தடுக்காதே", "தலைகள் குனியும் நிலையில் இனியும் தமிழன் இல்லையடா", "பீட்டா எம் இனத்தின் எதிரி - நின்று பார் எம் நெருப்பின் முன்னால்", "பண்பாட்டை சிதைக்காதே - எம் பண்பாட்டை மறவோம்", ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி இருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில், தமிழின மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை அந்நாட்டு நீதித்துறை நீக்க வேண்டும். அங்கே மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். முத்துக்குமார் உட்பட பலர் ஈழத்தமிழர்களாகிய நாம் ஈழத்தில் உரிமைகளுடன் வாழவேண்டும் என வலியுறுத்தி தம் இன்னுயிரையே கொடுத்திருந்தார்கள். இன்று அவர்களின் மரபின் மீது அடக்குமுறை விதிக்கப்படுவதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் தான் இந்தப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டது என்றனர்.
யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சமூகவலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்ற போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் தங்களது ஆதரவை ஃபேஸ்புக் மூலம் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இணையம் மூலம் இணைந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தால் தமிழகத்தின் பல கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கு 2 நாட்கள் விடுமுறை. கோவை அரசு கலைக் கல்லூரிகளுக்கும், மதுரை மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை. தமிழக சட்டக் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை. அம்பேத்கர் சட்டப்பல்கலையின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப்பள்ளிக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைக்கும் 22-ம் தேதி வரை விடுமுறை. பல்கலைக்கழக விடுதிகளை விட்டு வெளியேற மாணவ, மாணவிகளுக்கு பல்கலை., நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கும், அதன் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, இது விவசாயிகளுக்கு... கிராம மக்களுக்கு மட்டும் சொந்தமான விஷயம் இல்லை என்பது தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களைவைத்தே சொல்லிவிட முடிகிறது. ஜல்லிக்கட்டுக்காக இந்த ஆண்டு அதிகப்படியான ஆதரவுகள் பெருகியிருக்கின்றன. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (17.01.2017) தொடங்கிய இளைஞர்கள் மற்றும் பெண்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதி காத்த தமிழக மக்களின் பொறுமையை, மாநில மற்றும் மத்திய அரசுகள் சோதித்துப் பார்க்கின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு பெண்கள் போட்டிகள் நடத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா கடற்கரையில் இருக்கும் மக்கள், ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் பேசியவற்றைத் தெரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்...
ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்கக்கோரி போராட்டங்கள் உச்சம் பெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி நீதிமன்றம் சென்ற பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த அமைப்பின் ஆதி அந்தங்கள் குறித்தும், அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்களும் அழுத்தமாக எழுந்திருக்கின்றன.
People for the Ethical Treatment of Animals (PETA) அமைப்பு, 1980ல் அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் தொடங்கப்பட்டது. விலங்குகள் மீதான வதையை தடுத்து சுதந்திரமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காகவே இந்த அமைப்பை தொடங்குவதாக தெரிவித்தார்கள்.
பெரும்பாலான நாடுகளில் இந்த அமைப்புக்கு கிளைகள் உண்டு. அந்தந்த நாடுகளில் பிரபலமாக இருக்கும் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், பிரபலங்களை தங்கள் அமைப்பின் தூதர்களாக நியமித்து, நிர்வாண போட்டோக்கள் எடுத்து விளம்பரம் செய்வது இந்த அமைப்பின் பிரசார யுத்திகளில் ஒன்று. இதுமாதிரியான விளம்பரங்களால் பீட்டா எளிதில் பிரபலமானது.
வெளிப்படையாகப் பார்க்கும்போது, நல்ல கொள்கைகளைக் கொண்ட அமைப்பாகத் தெரியும் பீட்டா, உண்மையில் விபரீதமான பல செயல்களுக்கு துணைபோவதாக விலங்குகள் நல ஆர்வலர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.
“அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை மிகவும் அழுத்தமானது. தனிமையை விரும்புபவர்கள். தனிமையால் உருவாகும் மன உளைச்சலைத் தடுப்பதற்காக வளர்ப்புப் பிராணிகள் கலாச்சாரம் அங்கே உருவானது. பல ஆயிரம் கோடி வணிகம் அதற்குள் இருக்கிறது. அப்படி வளர்த்து கைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆதரவு தரும் அமைப்பாகத் தான் பீட்டாவை உருவாக்கினார்கள். ஆனால் அப்படி கைவிடப்படும் பிராணிகளுக்கு ஆதரவு தர ஒரு சிறு அறை கூட பீட்டாவிடம் இல்லை என்று சர்வதேச பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. தெருக்களில் சுற்றும் பிராணிகளை 15 நாட்கள் வரை கூண்டுக்குள் வைத்து பராமரிப்பார்கள். அதுவரை யாரும் வந்து அந்த பிராணிக்கு பொறுப்பேற்கவில்லை என்றால் அவற்றை கொன்று புதைத்து விடுவார்கள். இதற்கென ஏராளமான நன்கொடைகளை கார்பரேட் நிறுவனங்களிடம் பெறுகிறார்கள். தங்கள் வலிமையைப் பயன்படுத்தி தங்களுக்குச் சாதகமாக சட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கால்நடைகள் சமூகச் சொத்து. காங்கேயம் மாடு, ஓங்கோல் மாடு என பகுதிக்கொரு ரகம் இருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கால்நடைகள் கம்பெனிகளின் சொத்து. ஒரு ரகத்தை ஒரு கம்பெனி சொந்தம் கொண்டாடும். ஒவ்வொரு கம்பெனியும் 50 ஆயிரம், 1 லட்சம் என ஏராளம் மாடுகள் வளர்ப்பார்கள். இறைச்சி, பால் வணிகமெல்லாம் அவர்கள் கையில்தான் இருக்கும். அந்த கம்பெனிகள் தங்கள் வணிகமுறைக்கு இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றன. இதற்கு துணைபோகிறது பீட்டா.
இயற்கையை மேய்ந்துதான் நம் மாடுகள் வளரும். மேயப் போகும் இடத்தில் கோயில் மாடுகள், பொலிகாளைகளோடு தானாக இணைந்து பிரசவிக்கும். இவற்றின் வீரியம் குறையாமல் இருக்கத்தான் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுகளை நடத்துவார்கள். பொலிகாளைகள், கோயில் காளைகள் இருக்கும் வரை நம் நாட்டு மாட்டினங்களை அழிக்கவே முடியாது. அவைதான் மாடுகளுக்கு விதை.
உரம், பூச்சிக்கொல்லிகள் வழியாக நம் விவசாயத்தை அழித்து பாரம்பரிய விதைகளை ஒழித்து, பாதி சந்தையை ஆட்கொண்டுவிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்து கண் வைத்திருப்பது நம் கால்நடைகள் மேல். அதற்கு மூன்று விதமான காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தியாவின் பிரமாண்டமான பால் சந்தையைக் கைப்பற்றுவது. இரண்டாவது காரணம், இறைச்சி.
உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பது இந்தியாதான். 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. மாட்டிறைச்சி வர்த்தகத்தில் இருப்பது மொத்தம் 8 நிறுவனங்கள்.
இந்திய நாட்டு மாடுகள், இயற்கையாக விளையும் செடி, கொடிகளை மேய்ந்து வளர்வதால் அவற்றிற்கு ஏக வரவேற்பு. ஜல்லிக்கட்டு போன்ற கேளிக்கைகளை அழித்துவிட்டால் மக்கள் தங்கள் மாடுகளை அடிமாட்டுக்கு விற்றுவிடுவார்கள். மூன்றாவது, கலப்பின மாட்டு ரகங்களை இந்தியாவுக்குள் கொட்டுவது. ஜெர்ஸி உள்ளிட்ட பல கலப்பினங்கள் ஏற்கனவே இந்தியாவை ஆக்கிரமித்து விட்டன. இந்தக் கலப்பின மாடுகளில் பெரும் காசு பார்க்கின்றன அந்நிய நிறுவனங்கள்.
நாட்டு மாடுகளை குறி வைக்கும் பீட்டா
இந்த மூன்று துறைகளைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் அஜெண்டாவை பீட்டா இந்தியாவில் செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு உண்டு. நானும் பீட்டாவோடு தொடர்பில் இருந்தவள்தான். அவர்களின் நோக்கம் புரிந்தபிறகு வெளியே வந்துவிட்டேன். முரண்பாடுகளின் மொத்த உருவாக மாறிவிட்டது பீட்டா. நாய்கள் இணை சேர்வது அதன் பிறப்புரிமை. ஆனால், பீட்டா குடும்பக் கட்டுப்பாடு செய்ய வலியுறுத்துகிறது. ஆகப் பெரிய வன்முறை இது. இதில் உள்ளூர் விலங்குகள் நல அமைப்புகளும் பெரும் காசு பார்க்கின்றன. முன்பு வீட்டுக்கு வீடு கோழி வளர்ப்பார்கள். பிராய்லர் கோழியைக் கொண்டு வந்து நாட்டுக்கோழி இனங்களை அழித்தார்கள். இன்று பிராய்லர் கோழி விற்பனையில் இருப்பது உலக அளவில் இரண்டே கம்பெனிகள்தான். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கோழித்துண்டில் இருந்தும் அந்த நிறுவனங்களுக்குப் பணம் போகிறது. விதையை கம்பெனிகளிடம் எப்படி வாங்குகிறோமோ, அதைப்போல வெளிநாட்டில் விந்தணுக்களை வாங்கித்தான் நம் கலப்பின மாடுகளைக் கன்று போட வைக்கமுடியும். அதற்காகத்தான் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஜல்லிக்கட்டை தடை செய்வதற்குப் பின்னால் இருப்பது நிச்சயம் கார்பரேட் நிறுவனங்கள் தான். பீட்டா போன்ற அமைப்புகள் அதற்கு துணை நிற்கின்றன’’ என்கிறார் தேசிய கால்நடை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், விலங்குகள் நல ஆர்வலருமான ஹௌகர் அஜீஸ்.
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவ சேனாதிபதியும் பீட்டா மீதான குற்றச்சாட்டுகளை வழிமொழிகிறார்.
பீட்டா முகத்திரையை கிழிக்கும் சமூக ஆர்வலர்
“ஜல்லிக்கட்டைத் தடுப்பதில் சர்வதேச அளவிலான சதி இருக்கிறது என்று நெடுங்காலமாக குற்றம் சாட்டி வருகிறோம். அது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கும் தை 3ம் தேதியன்று டென்மார்க்கில் இருந்து 100 வெளிநாட்டு காளைகள் சென்னையில் வந்து இறங்கியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்திய உணவுச் சந்தையைக் கைப்பற்றும் சதி அரசுகள் மற்றும் நீதிமன்றத்தின் உதவியோடு கிட்டதட்ட நிறைவு பெறும் நிலைக்கு வந்திருக்கிறது. . இந்த சதியில் இருந்து மீண்டு நம் வேளாண் பாரம்பரியத்தையும் நாட்டு மாடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் விவசாயிகள் அரசியல் மறந்து, மதம் இனம் மறந்து கரம் கோர்த்து நிற்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டுக் காளைகளை விவசாயிகள் மாற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வீரியமிக்க நாட்டு மாடுகள் கிடைக்கும். ஒரு காளை மற்றும் பசுவின் மூலம் பிறக்கும் கன்றுகள் மூன்று ஆண்டுகளில் இனப்பெருக்கம் செய்ய தயாராகி விடும். அவற்றை மீண்டும் தாய் அல்லது தந்தை மாடுகளுடனே இனப்பெருக்கம் செய்ய விட்டால் காலப்போக்கில் இனம் சிறுத்து அருகிப்போய் விடும். அதனால் வெவ்வேறு மாடுகளோடு கலக்கச் செய்ய வேண்டும். அதற்கு இந்தப் பகிர்வு மிகவும் முக்கியம்.
நாட்டு மாட்டு வளர்ப்பை ஒரு தவம் போல செய்ய வேண்டிய காலக்கட்டம் இது. நாட்டு மாடு வளர்ப்பது என்பது ஒரு தேச சேவை. ஊருக்கு ஊர் மாடு வளர்ப்போர் சங்கங்களை உருவாக்க வேண்டும். மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் பாதுகாப்பதற்கான செயல்பாடுகளையும் இந்த சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். நாட்டு மாடு பிறப்பைப் பெருநிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.
பீட்டா - முரண்பாடுகளின் முகத்திரை!
நாட்டு மாடுகளை, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் மிக சாதாரண விவசாயிகள். ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு உணவுக்கு மட்டுமே 250 ரூபாய் 300 ரூபாய் வரை செலவாகும். பலர் மாடுகளை தங்களை குழந்தைகளை விட மேலாக நேசம் காட்டி வளர்க்கிறார்கள். வெறும் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு மட்டுமின்றி பேரிச்சை, பாதாம் பருப்பெல்லாம் கொடுக்கிறார்கள். அன்றாடம் தங்கள் உழைப்பில் பெரும்பகுதியை மாடுகளுக்கு செலவிடுகிறார்கள். தங்கள் உணவை தவிர்த்து விட்டு மாட்டை பராமரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டை ஆதரித்து குரல் கொடுப்பவர்கள், உள்நாடு, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் நாட்டு மாடு, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும். இதற்கென சர்வதேச அளவில் ஒரு நிதி ஆதார அமைப்பை உருவாக்க வேண்டும். நாட்டு மாடுகளை ஒழிக்க சர்வதேச கார்பரேட் நிறுவனங்கள் களமிறங்கியுள்ள நிலையில் இப்படியான ஒரு நிதி ஆதார அமைப்பு கட்டாயம் தேவை.
மத்திய அரசின் உதவியோடு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொள்ளும் நம் பாரம்பரியத்திற்கு எதிரான சதியை தமிழக அரசு நேர்மையாக கையாள வேண்டும். 1998களில் தான் பீட்டா போன்ற சர்வதேச அமைப்புகள் தமிழகத்தில் காலூன்றின. அப்போது தொடங்கி 2014 வரையிலான காலக்கட்டத்தில் 60 சதவீதம் பாரம்பரிய காளைகள் அழிந்து விட்டன. உதாரணத்துக்கு, மதுரை வட்டாரத்தின் பாரம்பரிய நாட்டு மாடுகளான புளிக்குளம் மாடுகளின் எண்ணிக்கை சுமார் 35 ஆயிரமாக குறைந்து விட்டது. இதில் காளைகளின் எண்ணிக்கை வெறும் 4000 தான்.
மாநில அரசு உடனடியாக நம் பாரம்பரிய நாட்டு மாடுகள் பற்றி ஒரு ஆய்வு செய்து மொத்தமுள்ள மாடுகளின் எண்ணிக்கையை கண்டறிய வேண்டும். நாட்டு மாடுகள் வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். மாநில அரசு நிர்வகிக்கும் மாவட்ட கால்நடைப் பண்ணைகள் பெயரளவுக்குத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. போதிய நிதியை ஒதுக்கி அவற்றை மேம்படுத்த வேண்டும். நல்ல கால்நடைகளை உருவாக்கி மக்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். ஒவ்வொரு பாரம்பரிய ரகத்துக்கும் அந்தந்த பகுதியிலேயே பண்ணைகளை உருவாக்கி பராமரிக்க வேண்டும். 1970களில் ‛கீ வில்லேஜ் சென்டர்’ என்ற பெயரில் பாரம்பரிய கால்நடைகளை வளர்க்கும் திட்டங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டன. அதன்பிறகு, இத்திட்டத்தை ‛இன்டக்ரேட்டட் காட்டில் டெவலப்மெண்ட் புரோக்ராம்’ என்று பெயர் மாற்றி கலப்பின மாடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள்.
கலப்பின மாடுகளின் இறக்குமதியை தடுத்து, நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். மிக முக்கியமாக, மிருகநல ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களின் பின்புலம் என்ன? எந்தெந்த வெளிநாட்டு அமைப்புகளோடு, நிறுவனங்களோடு அவர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்கள்? எங்கெங்கு இருந்தெல்லாம் அவர்கள் நிதி வாங்குகிறார்கள்? 1 ஏக்கர் பரப்பளவில் எப்படி அவர்களால் வீடு கட்ட முடிகிறது? அவர்களின் திறைமறைவுச் செயல்பாடுகள் என்னென்ன என்றெல்லாம் ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தி அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்...” என்கிறார் கார்த்திகேய சிவசேனாதிபதி.
பீட்டா மறுப்பு:
ஆனால், பீட்டா தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள். “பால், தேன், பட்டு, கம்பளி உட்பட உயிரினங்களிடமிருந்து பெறும் எந்தப் பொருளையும் பயன்படுத்தக்கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு இயங்கி வருகிறது பீட்டா. இறைச்சி விற்பவர்கள், பால் விற்பவர்களிடம் எல்லாம் பணம் வாங்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. எங்கள் மீதான காழ்ப்புணர்வில் இப்படியான ஆதாரமற்ற குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அந்தந்த நாடுகளில் உள்ள சட்டத்திற்கு உள்பட்டு செயல்படுகிறோம். பீட்டா இணையதளத்தில் நன்கொடை தருபவர்கள் பற்றியும் எங்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் வெளிப்படையாக தகவல்கள் இருக்கின்றன. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை’’ என்கிறார்கள் அவர்கள்.
புது டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானம் போராட்டங்களுக்கு என்றே புகழ்பெற்றது. அந்தளவுக்கு அதில் பல நாட்கள் நீடித்த போராட்டங்கள் பலவும் நடைபெற்றுள்ளன.
அப்போது, இரவு நேரங்களில் குழுக்களாக இணைந்து உரையாடுவதும், குளிர் காய்வதும் நடக்கும். சென்னை மெரினாவும் அதுபோல ஆகிவிட்டதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டிருப்போர் எண்ணுகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கூடிய இளைஞர்கள் கடுங்குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, குழுக்களாக சேர்ந்து தீ மூட்டி குளிர்காய்தனர். பல குழுக்கள் இதேபோல செய்யும் காட்சி, குளிரோ, வெயிலோ எதுவந்தாலும் போராட்டத்தை அவை பாதிக்காது என்பதைக் காட்டும் விதத்தில் இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், கல்லூரிகளை மூடி விட்டால் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி இரவு முழுவரும் கொட்டும் பனியிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அழைத்துப் பேசிய தமிழக அமைச்சர்கள், மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்த போதிலும், போராட்டம் நீடித்தது.
வீரத்தமிழ் சொல்லும் ஜல்லிக்கட்டு பாடல்!
அலங்காநல்லூர் போராட்டகளத்தில் மாணவர்கள் சோர்வை தவிர்க்க, அவர்களுக்கு வீர உணர்ச்சி ஊட்டும் வகையில் அங்குள்ள பெண்கள் வீரத்தமிழ் சொல்லும் ஜல்லிக்கட்டு பாடல்களை பாடினர். வீடியோ: இ.ஜே.நந்தகுமார்
பீட்டாவை சட்டரீதியில் தடை செய்ய முயற்சி- சசிகலா
நாளை அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது பற்றி கோரிக்கை வைக்க உள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா, பீட்டாவை தடை செய்ய சட்டரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம். பீட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது. பீட்டாவை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்டரீதியாக மேற்கொள்வோம்.' என்று கூறியுள்ளார்.
#Jallikattu லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கம்: வீடியோ: மோ.கிஷோர் குமார்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, நெல்லை, கோவை, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல நகரங்களுக்கும் இந்த போராட்டம் பரவத் தொடங்கி உள்ளது.
தமுக்கம் எதிரேயுள்ள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மாணவர் ஒருவர் கூறி வருகிறார். அவரை சமாதானப்படுத்தி சக மாணவர்கள் கீழே இறக்க முயற்சித்து வருகிறார்கள்.
அலங்காநல்லூரில் மக்கள்முன்பு இயக்குனர் கௌதமன் ஆவேச பேச்சு.
மதுரை கோரிப்பாளையம் சிகனல் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் மைதானம்வரையிலும் மாணவர்கள் நிரம்பியுள்ளார்கள். பல தன்னார்வலர்கள் உணவு, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் வழங்குகிறார்கள். கீழே சிதறி கிடக்கும் குப்பைகளை மாணவர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு போராட்டத்தை கண்ணியமாக நடத்தி வருகிறார்கள்.
எங்கள் மீது போலீஸ் கை வைத்தால் பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும்:சு.ப.உதயகுமார் எச்சரிக்கை
நாகர்கோவில் மாணவர் போராட்டத்துக்கு வந்த அதிமுகவினரை மாணவர்கள் விரட்டி விட்டனர்.
இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்து அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் கடந்த 3-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்ததால் போராட்டம் வலுத்தது.
இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்து அலங்காநல்லூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் அமைதி பேரணி
ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தங்களை இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக போராட்டம் நடந்துவரும் நிலையில் தற்போது ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தங்களை இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் ஐ.டி ஊழியர்களும் சேர்ந்தது, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு வலு சேர்த்துள்ளது.
அலங்காநல்லூர் போராட்டத்திற்கு டிராக்டர் மூலம் கிராம மக்கள் வர ஆரம்பித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் மாணவர்கள் போராட்டம்.
கரூர் குமாரசாமி கல்லூரியில் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.
மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட திடீர் உத்தரவு!
அலங்காநல்லூர் பகுதியில் தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது.
புதுச்சேரி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகள் வரும் 20-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் விஜய் வசந்த் மெரினாவில் அமைதி பேரணி.
மதுரை கோரிப்பாளையத்தில் 20 ஆயிரம் மாணவர்கள், பொதுமக்கள் களத்தில் உள்ளனர்.
அலங்காநல்லூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், போராட்டம் செய்யும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் மோர், சர்பத் என குளிர்ச்சியான பொருட்கள் கிராம பொதுமக்கள் சார்பாக வழங்கப்படுகிறது.
அலங்காநல்லூர் மக்களின் போராட்டத்தில் பியூஸ் மனுஷ் கலந்து கொண்டிருக்கிறார்.
அலங்காநல்லூருக்கு பக்கத்து கிராம பெண்கள் தொடர்ந்து படையெடுத்து வந்துகொண்டே இருக்கின்றனர். அலங்காநல்லூரில் கைதான 21 நபர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என குற்றச்சாட்டு.
அலங்காநல்லூர் பகுதியில் போராடும் மாணவர்களுக்காக புதுப்பட்டி கிராமத்தில் இருந்து உணவு தயார் செய்யப்படுகிறது .
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் 3 நாட்கள் நீதிமன்றத்தை புறகணிக்க வழக்கறிஞர்கள் முடிவு.
சாயல்குடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அருப்புக்கோட்டை சாலையில் நடந்த இந்த தர்ணாவில் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
கார்கில் போரில் விமான படையில் வேலை செய்த சேலம், கொங்கனாபுரம் செல்வராமலிங்கம் என்பவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதக்கத்தை திருப்பி கொடுக்க சேலம் கலெக்டர் அலுவலம் வந்தார்.
படம்: விஜயகுமார்
திருப்பூரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுக்கு சில அமைப்புகள் வாட்டர் பாக்கெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர். குப்பைகூடைகளில் பீட்டா என்று எழுதி போராட்டத்தில் விழும் குப்பைகளை அதில் சேகரித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காமராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை எதிர்த்தும் பேரணியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதால் சேலம் ஸ்தம்பித்தது.
7000 மாணவர்களுக்கும் அதிகமானோர் கோவை வ.உ.சி மைதானத்தில் கூடியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் 20-ம் தேதி பந்த்: போராளிகள் இயக்கம் அறிவிப்பு
தேனி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று காலை நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். காளையுடன் வந்த மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைகளில் பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பீட்டா அமைப்புக்கு எதிராகவும், தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தையொட்டி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 600 மாணவர்கள் தற்போது போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தடையை நீக்கும் வரை போராட்டமானது தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலங்காநல்லூார் போராட்டத்தில் குவிந்துள்ள பெண்கள்.
இமான் அண்ணாச்சி அலங்காநல்லூாரில் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், மாணவர்களின் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான், ஜல்லிக்கட்டு இல்லை என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக புதிய சட்டம் கொண்டு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும் என்று கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி.ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் உடல் நிலை பாதிப்பிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்றுள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் போராட்டம் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று காலை மெரினாவிற்கு வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகானும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றும், பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை ஜே ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியில் மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இதனால் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டி.எஸ்.பி.மங்களேஸ்வரன் வாகனம் தாக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லை மாவட்டம் தென்காசியில் நடக்கும் ஆர்ப்பாட்டம்..
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள்ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் 1000த்திற்கும் மேற்பட்டோா் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாணவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வருகின்றனர்
மதுரை யாதவா கல்லூரி மாணவர்கள் திருப்பாலையில் உள்ள அவர்களது கல்லூரியில் இருந்து 5 கி.மீ தூரம் நடந்து சென்று தமுக்கம் மைதானத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற மாணவர்களுடன் கைகோர்க்கின்றனர். வீடியோ: வெ.வித்யா காயத்ரி.
திருப்பூரில் மாணவர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கான கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது... பல்வேறு அமைப்புகளும், பெண்கள் பள்ளி மாணவர்கள் என திரண்டிருக்கிறார்கள்
தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம், எதிரேயுள்ள எஸ்.ஏ.வி. விளையாட்டு மைதானத்தின் முன்பு இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்களின் ஜல்லுக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடந்து வருகிறது...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் 1500க்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டு க்கு ஆதரவாக போராட்டம். ராமநாதபுரத்திற்கு நடை பயணம் செல்ல முயன்ற மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு தற்போது கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறுமி கோஷம் எழுப்பும் வீடியோ காட்சியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பலர் இச்சிறுமியின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! வீடியோ: க.பாலாஜி
திருப்பூர் இணைந்தது... தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர் மாந கராட்சி முன்பு மாணவர்கள் திரள துவங்கியுள்ளனர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி மாணவ ,மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ஏப்டி மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
#Jallikattu மதுரை தமுக்கம் மைதானம் முன் உள்ள தமிழ் அன்னை சிலை முன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்வீடியோ: க.விக்னேஷ்வரன்
2-வது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ஏப்டி மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஊர்வலமாக வந்தனர் :
நெல்லை மாவட்டம் தென்காசியில் போராட்டம் நடப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சூழலில், வள்ளியூரிலும் போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களில் முக்கியமான ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு காளைகளை பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்தும் விதம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டிக்காக சாதாரண காளைகளை கூட பயிற்சி கொடுத்து தயார் படுத்துவது வழக்கம். ஆனால், ஜல்லிக்கட்டிற்கு மட்டும் என்றே தனியாக வளர்க்கப்படும் காளைகளும் தமிழ்நாட்டில் உண்டு. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள் அவிழ்த்து விடப்பட்டாலும் மாடுபிடி வீரர்கள் மத்தியில் சிறு சலனம் கூட இருக்காது. ஆனால் மதுரை மண்ணில் மட்டுமல்ல மாநில அளவில் நடக்கும் ஜல்லிக்கட்டில் 'அப்பு காளை' என்ற ஒரு பெயரை கேட்டாலே மாடுபிடிவீரர்களுக்கு சற்று கிலியாகத்தான் இருக்கும். மாடுகளை அணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் மாடுபிடிவீரர்கள் மத்தியில் 'அப்பு வருது' என சொன்னாலே பக்கத்தில் நெருங்க யோசிப்பர். இதுவரை தான் கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியே அறியாத காளை என ஜல்லிக்கட்டு வட்டாரத்தில் பேசப்பட்ட ஒரே காளை. 'ஜல்லிக்கட்டின் சத்ரியன்', 'ஆடுகளத்தின் ஆட்ட நாயகன்' என காளை பிரியர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரே காளையும் இந்த அப்புதான்.
சக காளைகளே மிரளும் அளவுக்கு ஜல்லிக்கட்டில் தனது ஆட்டத்தை இது வெளிப்படுத்தும். வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டவுடன் எல்லைக்கோட்டை தாண்டி செல்ல வேண்டும் என்ற நோக்கில் காளைகள் சீறிப்பாய்ந்து செல்லும். ஆனால் அப்பு காளை அவிழ்த்து விடப்பட்டவுடன் வாடிவாசல் அருகிலேயே சுற்றி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும். வாடிவாசலில் இருந்து கூட்டத்துக்குள் புகுந்து வீரர்களை பந்தாடிவிட்டு புழுதியை கிளப்பி நிற்கும் தோரணை அசாத்தியமானது. அதனை காண்பதற்காகவே செல்லும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உண்டு. காளைக்கு கொம்பு பெரியதாக இருப்பதாகவே நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்பு காளைக்கு கொம்பு சிறிதுதான், ஆனால் அதுதான் அப்புவின் பலம். அந்தக் கொம்பினால் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் தூசுபோல தட்டிவிட்டு செல்லும் திறமைசாலி அப்பு. மாநில அலவில் பல விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுபொருட்கள் என அப்பு வாங்கி குவித்த பரிசுகள் ஏராளம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அப்பு காளைக்கு சொந்தக்காரர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகரன். இவர் அப்பு காளைக்கன்றினை மதுரை மாவட்டம், சக்குடி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வழங்கினார். அதன் பிறகு இந்த கோவில்காளைக்கு ஜல்லிக்கட்டுக்கு தேவையான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முழுமையான பயிற்சிக்கு பின்னர் களத்தில் இறங்கிய காலம் முதல் தோல்வியை கண்டதில்லை என்ற பெருமையுடனே 2014-ம் ஆண்டு இறந்துபோனது. அப்பு காளையை அவிழ்த்து விடும்போது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் "ஓடிப்போ, ஓடிப்போ அப்பு வருது ஓடிப்போ", முடிஞ்சா பிடிப்புப்பாருடா" என்ற குரல் திரும்ப திரும்ப கேட்டவாறே இருக்கும். பிற ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரும் விரும்பும் காளைகளுள் முக்கிய இடம் அப்புவுக்குத்தான்.
இந்த அப்பு காளை இறந்த பிறகு அதைக்காண கூடிய மக்கள் கூட்டம் மிக அதிகம். அப்பு இறந்த செய்தி கேட்டு துன்பப்பட்ட மாடுபிடிவீரர்கள் ஏராளம். மனிதர்களுக்கு செய்யும் சடங்குகளும் இந்த அப்பு காளைக்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த காளையின் சொந்தக்காரரான ராஜசேகரனிடம் பேசினோம். "அப்பு காளை களத்தில் நின்று விளையாடக்கூடியது. மாடு சிறியதாக இருந்தாலும் அது களத்தில் வீரர்களை பந்தாடிவிடும். அதனுடைய திமிலில் கை வைத்து அணைத்தால் அவரை கொம்புக்கு வரவைத்து தூக்கி எறிவதில் கில்லாடி. அப்பு என்ன நினைக்குதுன்னு யாருக்கும் தெரியாது. இடப்பக்கம் வரும்னு நினைச்சா, வலது புறம் வரும். இராணுவவீரன் களத்தில் எப்படி யோசிப்பானோ அதுபோல களத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புரிந்து விளையாடும். அப்பு என்னிடம் ஏழு வருடங்களாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டது" என்றார்.
பாரம்பர்யமான ஜல்லிக்கட்டு விளையாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உச்சநீதிமன்றத்தின் தடையால் தவிக்கிறது. இதை தொடர்ந்து இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடையை எதிர்த்து தமிழ்நாட்டில் மெரினா உட்பட அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்து வருகின்றன. இதற்கு சரியான பலன் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கூட்டமாகவும் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தங்கள் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.
அப்பு காளை குறித்த கீழ்கண்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.