நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மீனவர்களின் உரிமைகளுக்காக இலங்கை மீனவர்களுடன் தொடர்ந்து நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் அவற்றில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்டும் வகையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை என்பது மிகுந்த கவலைக்குரியதாக அமைந்திருக்கிறது.
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான முதல் கட்டப் பேச்சுவார்த்தை 27.1.2014 அன்று சென்னையிலும், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 12.5.2014 அன்று கொழும்புவிலும் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிறகு மீண்டும் 24.3.2015 அன்று சென்னையில் இரு நாட்டு மீனவர்களிடையே நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும் தமிழக மீனவர்களின் நலனுக்கு உதவும் ஆக்கபூர்வமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளின் போதும் தமிழக அரசின் சார்பில் மிக முக்கியமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதையுமே இலங்கை அரசும் சரி, இலங்கை மீனவர்களும் சரி ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கவில்லை. குறிப்பாக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையை பாரபட்சமின்றி இரு தரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் கூடிய வகையில், மீன் பிடி உரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் கொடுந்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது மற்றும் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல் பாரம்பரிய கடல்பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உகந்த மீன்பிடி முறைகள் பற்றி முடிவு எடுக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதில் எந்த கோரிக்கைக்கும் இலங்கை அரசு தரப்பிலோ, இலங்கை மீனவர்கள் தரப்பிலோ எவ்வித உத்தரவாதமும் அளிக்காதது மட்டுமின்றி, பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என்பதையே திரும்பத் திரும்பக் கூறி வந்தார்கள். அதிலும் குறிப்பாக பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்த நிலையிலும் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்யப்படுவதும் நிற்கவில்லை.
இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையில் இப்படியொரு முட்டுக்கட்டை ஏற்பட்ட பிறகு நவம்பர் 2-ஆம் தேதி இப்போது மீண்டும் டெல்லியில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் மட்டத்தில் நான்காவது கட்டமாக பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த பேச்சு வார்த்தைகளும் இதுவரை வெளிவந்துள்ள தகவல்படி தோல்வியிலேயே முடிந்துள்ளது.
தமிழக மீனவர்களுக்கு சாதகமாக எவ்வித ஆக்கபூர்வமான முடிவுகளும் எடுக்கப்பட்டதாக செய்திகள் இல்லை. பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ள இந்த நிலையில் கூட இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் மீன் பிடி படகுகளையும் இலங்கை அரசு இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை. தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க முடியாது என்று தொடர்ந்து இலங்கை அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ''பேச்சுவார்த்தைக்கு முன்பாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க உத்தரவிடுங்கள்'', என்ற நியாயமான கோரிக்கையை கூட முன் வைக்கவில்லை. இப்போது நடைபெற்ற நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது என்றும் அமைச்சர் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு முன்னின்று நடத்தும் இரு நாட்டு மீனவர்களுடனான பேச்சுவார்த்தைகள் ஏதோ பெயரளவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழக மீனவர்களின் உரிமையையோ, நலன்களையோ பாதுகாக்கும் முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இது போன்ற சந்தர்ப்பத்தில் கூட பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசு அடம்பிடிக்கிறது.
படகுகளை திருப்பிக் கொடுக்காமல், மீன் பிடிக்கவும் விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தைகளில் இந்த முக்கியக் கோரிக்கைகள் குறித்து அதிமுக அரசோ, மத்திய அரசோ இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகத் தெரியவில்லை.
ஆகவே இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள படகுகளை திரும்பப் பெறவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
''ஏதோ நாங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறோம்'' என்று மீனவர்களின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினையை அதிமுக அரசு ஒரு சம்பிரதாய உணர்வுடன் அணுகாமல், தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை துணிச்சலுடன் கொடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் மீன் வளத்துறை அமைச்சருக்குப் பதில் முதல்வரின் இலகாக்களை கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே இது போன்ற முக்கியப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.