சென்னை: பெங்களூருவில் கட்டுக்கட்டாக ரூ.5.7 கோடி பணம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது. அது, தமிழக அமைச்சர்களின் கருப்பு பணமாக இருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதால், ஈரோடு கான்ட்ராக்டர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரோடு அடுத்துள்ள பூந்துறை வேலாங்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் என்.ராமலிங்கம். இவர், ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரை தலைமையிடமாக கொண்டு ராமலிங்கம் கன்ஸ்டரக்சன்ஸ் கம்பெனி (ஆர்சிசி) என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது தவிர, என்.ஆர்.ஹோல்டிங், என்.ஆர்.எனர்ஜி மற்றும் இன்பிரா, என்.ஆர்.இன்ஜினியரிங், கிரீன் புரொடக்ஸ்சன் உள்ளிட்ட 6 தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இதன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை ராமலிங்கமும், இயக்குநர்கள் பதவியை இவரது மகன்களான சந்திரகாந்த், சூர்யகாந்த் ஆகியோரும் வகித்து வருகின்றனர்.
இந்த நிறுவனங்களுக்கு சென்னை, கோவை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் வணிகம் நடத்தி வரும் இந்நிறுவனங்களில் கடந்த புதன்கிழமையன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஈரோடு வந்த வருமானவரித் துறையினர், 40 பேர் கொண்ட குழுவாக ராமலிங்கத்தின் வீடு, செட்டிபாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம், ராமலிங்கத்தின் நெருங்கிய உறவினர்கள் வீடுகள், நண்பர்கள் வீடுகள், என்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வீடுகளில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரிலும் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனையில் புதியதாக வெளியிடப்பட்ட ரூ.5.7 கோடி ரூபாய், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் பழைய செல்லாத பணம், தங்க கட்டிகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். பெருமளவில் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி ராமலிங்கத்திற்கு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஈரோட்டில் உள்ள 3 தனியார் வங்கிகளில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதும், இதற்கு வங்கி மேலாளர்கள் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ராமலிங்கத்தின் பின்னணி குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விவசாயம் செய்து வந்த ராமலிங்கம் ஆரம்பத்தில் சிறிய அளவில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
பின்னர் படிப்படியாக பிற தொழில் நிறுவனங்களை தொடங்கியது தெரியவந்துள்ளது. ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும் பெருந்துறையை சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியம் என்பவரது இளைய மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
தொழிலதிபர் சுப்பிரமணியத்தின் மூத்த மகள் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட வகையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ராமலிங்கமும் நெருங்கிய உறவினர்கள் ஆனார்கள். பல லட்சங்கள் செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக இந்த திருமணத்தை ராமலிங்கம் நடத்தி வைத்தார்.
அமைச்சரின் நெருங்கிய உறவினர் என்பதால் தமிழக அளவில் பொதுப்பணித்துறை கட்டுமான பணிகள் எளிதில் ராமலிங்கத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகம் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட பொன்விழா நுழைவாயில் கட்டுமான பணியை ராமலிங்கத்தின் நிறுவனம்தான் செய்திருந்தது. இதேபோல தமிழக அரசின் பல பணிகளை அந்த நிறுவனம் செய்துள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள பல கோடி மதிப்பிலான வணிக வளாகத்தை ராமலிங்கத்தின் உறவினர் சமீபத்தில் விலைக்கு வாங்கி இருப்பதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பணம் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary:
Chennai: Bangalore captured income of Rs .5.7 crore seized in the raid. It may be the Chief Ministers of the black money if they suspect that the income tax authorities, Erode contractor carried out a raid on the house.