சென்னை - பொங்கல் திருநாளை ஏழை-எளிய மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாட, 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை வருமாறு: -
ஜெயலலிதா வழியில்...:
இயற்கை இன்னல்களான வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகத் தான், சமீபத்திய ‘வர்தா’ புயல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், சீரமைப்புப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டன. ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு, இயற்கை இன்னல்களின் போது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உரிய நேரத்தில் அளிப்பதிலும் முனைந்து செயல்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடி திட்டம்:
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்காத நிலையில், ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு தொடர் மனுக்களை தாக்கல் செய்ததன் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவுகளின் காரணமாக 30.10 டி.எம்.சி அடி தண்ணீருடன் மொத்தமாக 66.60 டி.எம்.சி.அடி தண்ணீரை நாம் பெற முடிந்தது. இருப்பினும், போதிய நீர் கிடைக்கப் பெறாததாலும், தென்மேற்கு பருவமழையின் மூலம் போதிய மழைநீர் கிடைக்கப் பெறாததாலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 54 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி திட்டத்தினை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்து அது செயல்படுத்தப்பட்டது.
சம்பா சாகுபடி தொகுப்பு திட்டம் :
அதே போன்று, சம்பா பருவத்திலும், கர்நாடகத்திலிருந்து போதிய தண்ணீர் கிடைக்கப் பெறாததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலான சம்பா சாகுபடிக்கான தொகுப்பு திட்டம் ஒன்றினை ஜெயலலி்தா 18.8.2016-ல் அறிவித்தபடி செயல்படுத்தப்பட்டுள்ளது.
மழை குறைவு:
தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப் பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.3 மி.மீ. மழையே கிடைக்கப் பெற்றுள்ளது. மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 21 மாவட்டங்களில் மழை குறைவு 60 சதவீதத்திற்கும் அதிகமாகும். அதாவது, இந்த மாவட்டங்களில் 40 சதவீதம் வரையே வடகிழக்கு பருவத்தில் மழை கிடைக்கப் பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 11 மாவட்டங்களில் மழை குறைவு 35 முதல் 59 சதவீதமாக உள்ளது. அரசு வழங்கும் பயிர் நிவாரணத் தொகை தவிர, பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையையும் பெற இயலும். டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 12.86 லட்சம் ஏக்கர் நிலங்களில் 11.01 லட்சம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது 86 சதவீத பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. 5.48 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இந்த பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையாக விவசாயிகள் 44.81 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.
25,000 ரூபாய் வரை இழப்பீடு...:
அதே போன்று, டெல்டா அல்லாத பகுதிகளில் 6.71 லட்சம் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். இந்த பயிர்க் காப்பீட்டுக்காக பிரிமியம் தொகையாக விவசாயிகள் 36.30 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான மாநில அரசின் பங்காக 410 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 25,000/- ரூபாய் வரை இழப்பீடு தொகையாக பெற இயலும். இதர பயிர்களை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து இழப்பீடு பெற இயலும்.
சிறப்பு பரிசுத் தொகுப்பு ;
தமிழகத்தில் வறட்சி நிலவி வரும் இந்தச்சூழ்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுவர். ஏழை, எளிய, சாமானிய மக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இது வழி வகுக்கும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
English summary:
Chennai - Pongal Thirunal poor people Xero, special about celebrating, 1 crore, 80 lakh families, a kilo of raw rice, a kilo of sugar, cashew nuts, raisins, cardamom and two feet Length cane piece, which includes the special Pongal prize package that offered CM Wine pannircelvam announced