சென்னை - கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, கடலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை, இதுவரை குறைகள் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் தி.மு.க பொருளாளர் மு.கஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மு.க.ஸ்டலின் அறிக்கை:
டிசம்பர் 26-ம் தேதி நாளிட்ட நாளிதழில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் நவம்பர் 8-ம் தேதி பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் பெரிய அளவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், கருப்புப்பணத்தை டெபாசிட் செய்வதற்காக கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்திக் கொண்டுள்ளது போலவும் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், இதனை அனுமதித்தது போல ஒரு பிரமையை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறை அமைச்சரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்களும் இதை ஏன் அனுமதித்தார்கள் என்று ஒரு தேவையற்ற வினாவை எழுப்பி, இதுகுறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு வேண்டுகோள் விடுத்து அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
வங்கிகளில் வெளிப்படைத் தன்மை:
மு.க.ஸ்டாலின் கூறியதைப்போல் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக டெபாசிட் செய்ய முடியாது என்பதை முதலில் அவர் தெரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்சி அமைந்த பிறகு, கூட்டுறவு வங்கிகள் அனைத்து நிலையிலும் கணினிமயமாக்கப்பட்டு, இவற்றின் செயல்பாடுகளுக்கென தனியாக மென்பொருள் தயாரிக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.எடுத்துக்காட்டாக, ஒரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கமோ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியோ, அல்லது தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியாக இருந்தாலும், நாள்தோறும் அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு வங்கி பணிநேர முடிவில் இருப்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இறுதி இருப்புத்தொகை விவரங்கள் நாணயவாரியாக கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு நாளும் கணக்குகள் முடிக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப வசதி:
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முதல், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி வரை அனைத்துக் கூட்டுறவு அமைப்புகளும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு சிபிஎஸ் ஆர்.டி.ஜி.எஸ்., என்இஎப்டி போன்ற தொழில்நுட்ப வசதிகளை நடைமுறைப்படுத்தி, வணிக வங்கிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதைப்போல், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கேஒய்எப் வரைமுறைகளை மீறி விருப்பம் போல் டெபாசிட் செய்ய முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயலலிதா ஆட்சியில்தான். தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளன.
அவசரமாக தேர்தல் நடத்தப்படவில்லை:
தமிழக வரலாற்றிலேயே, முதன்முறையாக 2013-ம் ஆண்டு, கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் அமைத்து, கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான், தேர்தல் நடத்துகிறபோது தி.மு.க ஆட்சியில் நடந்த தவறுகளைப்போல் அல்லாமல் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற வகையில் விதிகளை திருத்தி தேர்தலை நடத்தினார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதன் மூலம் 4 கட்டங்களாக 24,082 கூட்டுறவுச் சங்கங்களுக்கு அமைதியான முறையில் நிர்ணயிக்கப்பட்ட கால வரைமுறைக்குள் தேர்தலை நடத்தி 2,37,239 நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தவர் ஜெயலலிதாதான். எனவே, தேர்தல் அவசர அவசரமாக நடத்தப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க மீது குற்றச்சாட்டு:
ஆனால், தி.மு.க ஆட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதுதான், 2008-ம் ஆண்டு கூட்டுறவு தேர்தலை நடத்த தி.மு.க அரசு முற்பட்டபோது, மாநிலம் முழுவதும் தி.மு.கவினர் பதவிவெறியோடு, நடத்திய அராஜக செயல்களினாலும், கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாலும், பதவிகளை பங்குபோட்டுக்கொள்வதில் ஏற்பட்ட அடிதடி வெட்டு குத்து காரணமாகவும், இவர்கள் அறிவித்த தேர்தலை இவர்களே ரத்து செய்த வரலாறு, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
தி.மு.க ஆட்சியில் தான் முறைகேடு :
தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகள் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வந்தன. தி.மு.க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான், இந்தச் சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. சமையல் எரிவாயு கடன் ஊழல், கொப்பரை கொள்முதல் ஊழல், மற்றும் தகுதியற்றவர்களுக்கு விவசாய கடன் வழங்குதல், போலி கடன்கள் வழங்குதல், வருவாய்க்கு மீறிய செலவினம், முறையற்ற பணி நியமனம், போன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகள், நசிந்து, சிதைந்தது. குறிப்பாக, கொப்பரை கொள்முதலில் ரூ.363.90 கோடியும், எரிவாயு கடன் வழங்கியதில் ரூ.84.34 கோடியும் என மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று, கூட்டுறவு அமைப்புகள் சீரழிந்தது முன்னாள் தி.மு.க ஆட்சியில்தான். அதுவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தான் என்பதை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.626.91 கோடி பயிர்க்கடன்:
கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை தீர்க்க தரிசனத்தோடு எடுத்து, வெளிப்படையான நிர்வாகம், உயர் தொழில்நுட்பம் போன்றவற்றை நடைமுறைப் படுத்தியதன் விளைவாக, தமிழக மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மீது, நம்பிக்கை வைத்து கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புத்தொகைகள் 30.9.2016 வரை ரூ.54,913.81 கோடி அளவிற்கு இட்டுவைத்துள்ளார்கள். எனவே, இதுபோன்ற தவறான செய்திகள் மூலமாக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் ஒரு அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புத் தொகை ரூ.15,000 கோடி என கூறியுள்ளது சரியான புள்ளிவிவரம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது உள்ள சூழ்நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முன்னோடியாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு தற்போது நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்தின்படி நவம்பர் 23 ம்தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை 23 மத்திய கூட்டுறவு வங்கிகளின் 813 கிளைகளில் 2,00,432 கணக்குகள் துவங்கப்பட்டு 1,52,644 நபர்களுக்கு ரூ.626.91 கோடி அளவிற்கு பயிர்க்கடன் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
எந்த முறைகேடும் இல்லை:
மேலும், கடந்த நவம்பர் 8-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லத்தக்கவை அல்ல என்று அறிவிக்கப்பட்ட பின்னர் நவம்பர் 14ம் தேதி வரை 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அவற்றின் 813 கிளைகள் பொதுமக்களிடமிருந்து மதிப்பிழந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கேஒய்சி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி விதித்த இதர நடைமுறைகளின்படி பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரித்துறை ஆகியவை 11 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டன. மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஆய்வு செய்த மத்திய புலனாய்வுத்துறை, தங்களது அறிக்கைகளில் எந்த தவறுகளும் நடைபெறவில்லை என சான்றளித்துள்ளார்கள். மேலும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியைப் பொறுத்தவரை வருமானவரித்துறையும், அமலாக்கப்பிரிவும் ஆய்வு செய்து இதுவரை குறைகள் ஏதும் தெரிவிக்கவில்லை. கோயம்புத்தூர், கும்பகோணம், வேலூர், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, கடலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறையும், இதுவரை குறைகள் ஏதும் தெரிவிக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
விருதுகள் பெற்று சாதனை :
தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பில் உள்ள தலைவர்களோ, நிர்வாககுழு உறுப்பினர்களோ, துறை பணியாளர்களோ முறைகேடுகள், தவறுகள் ஏதும் புரியும் பட்சத்தில் ஜெயலலிதா கடுமையாக தண்டித்துள்ளார்.. கழகத்தில் இருந்தும் அவர்களை நீக்கியும் உள்ளார்கள். அவர்கள் மீது குற்ற வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதே நிலை, தற்போதும் தொடர்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இதுபோன்ற சீரிய சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, ஜெயலலிதா ஆட்சியில் கூட்டுறவு அமைப்புகள் 19 விருதுகளை பெற்றுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தவறான செய்திகளை வெளியிட்டதால், பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து மக்கள் மத்தியில் கூட்டுறவு அமைப்புகள் மீது ஒரு அவப்பெயரை உருவாக்க முயற்சிப்பது சரியானது அல்ல என்பதை தெரிவிப்பதோடு, உண்மை நிலையை தெரிந்துகொண்டு ஸ்டாலினும் , தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டு கூட்டுறவு இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே, இதில் அரசியல் செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
Chennai - Coimbatore, Trichy, Erode and Cuddalore and Virudhunagar District Central Co-operative Bank study done Enforcement, far less did the cooperative banks of the old notes in the transfer of any abuse had taken place and that the DMK treasurer mukastal's to his charge Cooperatives Minister rival K raju has hit back.