புதுடில்லி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்; அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவும் போட்டிப் போட்டுக் கொண்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதத் துவங்கி இருப்பதை, டில்லி அரசியல் வட்டாரங்கள் கேலிக்கூத்தாகப் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, டில்லி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு முடிந்த மட்டும் குனிந்து வணக்கம் போடுவதோடு, நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கவும் தயார் என, உச்சகட்டமாக பணிவு காட்டி வரும் பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை மட்டும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. அதேநேரம், ஜெயலலிதாவைக் காட்டிலும், தன்னை சிறந்த முதல்வராகவும்; செயல்பாடுள்ள நல்ல முதல்வராகவும் காட்டிக் கொள்ளும் முயற்சியில் பன்னீர்செல்வம், களம் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பிடிக்காத சசிகலா:
இது, முதல்வராகத் துடிக்கும் சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. அவர் தன்னுடைய செயல்பாடுகள் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக புகழடைந்து வருவது, தன் முதல்வர் கனவுக்கு இடைஞ்சலாக இருக்கும் என நினைக்கிறார். அதனால்தான், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நினைவை ஒட்டி அவருக்கு, மத்திய அரசு சிறப்புத் தபால் தலை வெளியிட வேண்டும்; அவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என, பிரதமரை வலியுறுத்தி, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியதும், அதே வேண்டுகோளோடு, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் சசிகலாவும், பிரதமருக்கு கடிதம் அனுப்புகிறார். அதுமட்டுமல்ல, இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும்; படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பினார். அதே வலியுறுத்தலோடு, சசிகலாவும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது, முதல்வர் பன்னீருக்குப் போட்டியாக, சசிகலா கடிதம் அனுப்புவதில் தவறில்லைதான். ஆனால், ஒரே கருத்தை வலியுறுத்தி, ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே, தொடர்ந்து ஏன் கடிதம் அனுப்ப வேண்டும் என்பதுதான் கேள்வி. தான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்பதை, சசிகலா சொல்லாமல் வெளியே சொல்ல முற்படுகிறார் என வைத்துக் கொண்டாலும், அதனால், அவரது இமேஜ்தான் பொது மக்கள் மத்தியில் டேமேஜ் ஆகும் என்பதுதான் யாதார்த்தம். இவ்வாறு டில்லி அவ்வட்டாரங்கள் கூறின.
டில்லி பிரதிநிதியாக இருப்பவர்:
இது குறித்து, தமிழக அரசியல் பிரபலங்கள் சிலர் கூறியதாவது:
பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையை, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதன் மூலம் ஒரு தீர்வுக்கு முயல்வதில் ஒரு ஏற்பாடாக, மாநில முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதும் முறை, சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து வரும் நடைமுறைதான். ஆனால், அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டே இருந்தால், அது, பத்திரிகைகளில் வேண்டுமானால், செய்தியாகி, விளம்பரத்தைத் தேடித் தருமே தவிர, கடிதத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயவிடும். அப்படித்தான், தொட்டதுக்கும் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் முறையை, முதல்வராக இருந்த ஜெயலலிதா மேற்கொண்டிருந்தார். அதனால், கடிதம் எழுதுவதும், அது தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் வரவழைப்பது சம்பிரதாயமாகவே இருந்தது. வழக்கமான நடைமுறையில், ஒரு மாநிலத்தின் முதல்வரோ, அரசியல் கட்சிகளின் தலைவர்களோ, பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அந்த கடிதத்தை படித்து, அதில் முக்கியத்துவம் இருந்தால், அதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வர். பதில் அனுப்ப வேண்டியிருந்தால் மட்டும், பதில் அனுப்பப்படும். அதனால், மாநில நலனுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்காக மட்டும் கடிதம் அனுப்புவது நடைமுறை. மற்றபடி, தேவையானால், நேரிலேயே சென்று பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்துவார். ஆனால், இந்த நடைமுறைகளை தமிழகத்தில் பின்பற்றுவதில்லை. தேவையானால், தமிழக அரசின் டில்லி பிரதிநிதியாக இருப்பவர், முதல்வர் சார்பில், பிரதமரை சந்தித்து கருத்துக்களை வலியுறுத்துவார்; அல்லது முதல்வர் அனுப்பிய கடிதத்தை நேரிலேயே கொடுத்து வருவார். இதற்காகத்தான், தமிழக அரசு சார்பில் டில்லியில் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுகிறார். ஆனால், அவர், இப்படிப்பட்ட எந்த காரியத்தையும், சமீபத்தில் செய்ததாக குறிப்புகள் இல்லை. வெறும் சலுகைகளை மட்டுமே அனுபவித்துக் கொள்ள ஒரு பிரதிநிதி.
கடிதத்தின் முக்கியத்துவம் :
இது காலம் காலமாக இருக்கிறது. அதேபோல, தமிழகத்தின் சார்பில் ராஜ்யசபாவையும் சேர்த்து, 50க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் உள்ளனர். தமிழக நலன் களுக்காக, அவர்களையும் பிரதமரை சந்திக்க வைக்கலாம். இப்படி எந்த நடைமுறையையும் தமிழகத்தில் பின்பற்றுவதில்லை. தொட்டதுக்கும் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் நடைமுறையை, ஜெயலலிதா ஏற்படுத்திச் சென்று விட்டார். அதை பன்னீர்செல்வமும் பின்பற்றுகிறார். அவரோடு மல்லுக்கட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவும், பிரதமருக்கு கடிதம் அனுப்புகிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி இருந்து, இங்கிருக்கும் முதல்வர், பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அந்த கடிதத்தின் முக்கியத்துவம் அறிந்து, உடனடியாக பிரதமர் ரியாக்ட் செய்வார். அதேபோல, மத்தியில் கூட்டணி ஆட்சி இருந்து, கூட்டணியில் மாநிலத்தில் ஆளும் கட்சி, மத்தியில் உள்ள கூட்டணியில் இடம் பெற்றிருந்தால், பிரதமர், கடித கோரிக்கை மீது கவனம் செலுத்துவார். நடவடிக்கை எடுப்பார்.
தற்போதைய நிலை அப்படியில்லை. அதனால், தமிழகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் எந்த கடிதமும், குப்பைக்குப் போகும் காகிதத்துக்கு இருக்கும் மதிப்பைப் போன்றதுதான். அப்படியொரு நிலையில்தான், இங்கே, பிரதமருக்கு கடிதம் அனுப்புவதில் பன்னீர்செல்வத்தோடு, சசிகலா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்.
சசிகலாவுக்கு தமிழக நலன் கள் மீது கூடுதல் அக்கறை இருக்குமானால், இனியாவது போட்டி கடிதம் அனுப்புவதை விட்டு விட்டு, தன் கட்சி எம்.பி.,க்களை அனுப்பி, பிரதமரை சந்திக்க வைக்கலாம். கடித விவகாரத்தில், வெட்டி அரசியல்; போட்டி அரசியல் தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
NEW DELHI: Chief Minister O pannirselvam; AIADMK general secretary, began to write a letter to the Prime Minister to put a competitive Shashikala, reportedly sees joke Delhi political circles.