மும்பை: ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, நாட்டில் புழக்கத்தில் உள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு, 1.66 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிக்கை: ‛பழைய, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை டிச., 30ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்' என, ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் பிறகு, ரிசர்வ் வங்கி, ஜன.,6ம் தேதி வாரந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில், ‛டிச.,30ம் தேதியில், நாட்டில் புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 9.38 லட்சம் கோடி ரூபாய்' என, குறிப்பிட்டு இருந்தது.
நவ., 8 ம் தேதி தான் ரூபாய் நோட்டு வாபஸ் அறிப்பு வெளியானது. அதற்கு இரண்டு வேலை நாட்களுக்கு முன், அதாவது, நவ.,4ம் தேதியில், நாட்டில் புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 17.97 லட்சம் கோடி ரூபாய். எனவே, டிச.,30ம் தேதியில், புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுகளின் மதிப்பில், 8.59 லட்சம் கோடி ரூபாய் குறைந்து விட்டது.
காரணம் என்ன?:
இப்படி, புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுகளின் மதிப்பு குறைந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1.மக்கள் தங்களிடம் இருந்த பழைய, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்தது.
2. கூடுதல் கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது.
மக்கள் செய்த டெபாசிட்டால், புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்தது; ரிசர்வ் வங்கி கூடுதல் கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட்டதால், புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்தது. இந்த நடவடிக்கைகளால் தான், புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுகளின் மதிப்பு, டிச.,30ம் தேதியில், 50 சதவீதம் குறைந்து விட்டது.
புழக்கம்:
கூடுதல் கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி இரண்டு வகைகளில் புழக்கத்தில் விட்டது. அதன்படி,
1. ரிசர்வ் வங்கி தன்னிடம் ஏற்கனவே இருந்த, 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.
2. புதிய, 2,000 மற்றும், 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, நவ.,8 முதல், டிச., 30 வரை புழக்கத்தில் விட்டது.
புழக்கத்தில் விடப்பட்ட கூடுதல், 10,20, 50, 100 ரூபாய் நோட்டுகள்:
டிச.,19ல் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, 2,020 கோடி எண்ணிக்கையிலான, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வெளியிடப்பட்டன. இதன் மதிப்பை, ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. எனினும், 2016 மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி வசம் இருப்பில் இருந்த குறைந்த மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகளின் மூலம் இதை கணக்கிட முடியும்.
அந்த ஆண்டு அறிக்கையில், 10 ரூபாய் நோட்டுகள் 56 சதவீதம்; 20 ரூபாய் நோட்டுகள், 9 சதவீதம்; 50 ரூபாய் நோட்டுகள், 7 சதவீதம்; 100 ரூபாய் நோட்டுகள், 28 சதவீதம் என்ற அளவுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருப்பில் இருந்தன. இந்த அளவை கொண்டு, கூடுதலாக புழக்கத்தில் விடப்பட்ட, 2,020 கோடி குறைந்த மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகளின் மதிப்பை கணக்கிட்டால், 79 ஆயிரம் கோடி ரூபாய் என வரும். இந்த அளவுக்கு தான் ரிசர்வ் வங்கியால், கூடுதலாக, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
கரன்சி நோட்டுகளின் மதிப்பு :
இந்த விஷயத்தை மற்றொரு தகவல் மூலமும் உறுதிப்படுத்த முடியும். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்து இருந்தது. அதன்படி, 2016 நவ.,8 ம் தேதியில், நாட்டில் இருக்கும், குறைந்த மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 3.43 லட்சம் கோடி ரூபாய். இது, 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ரூபாய் நோட்டு; 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 ரூபாய் நோட்டு;33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 50 ரூபாய் நோட்டு; 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 100 ரூபாய் நோட்டு என்ற அளவில் இருந்தது. நவ., 8 ம் தேதிக்கு முன், 17.97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கரன்சி நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
இதில், 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு வாபஸ் பெற்றது. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த, 17.97 லட்சம் கோடி ரூபாயில், 15.44 லட்சம் கோடி ரூபாயை கழித்தால், 2.53 லட்சம் கோடி ரூபாய் என்ற விடை கிடைக்கும். இது தான், அப்போது நாட்டில் புழக்கத்தில் இருந்த குறைந்த மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகளின் மதிப்பு.
ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலான, 3.43 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2.53 லட்சம் கோடி ரூபாயை கழித்தால், 90 ஆயிரம் கோடி ரூபாய் என்ற விடை கிடைக்கும். ஏற்கனவே நாம் ஒரு கணக்கு போட்டு இருப்போம். அதில், 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு குறைந்த மதிப்பு கொண்ட கூடுதல் கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது என கணக்கிட்டு இருப்போம். தற்போது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் மூலம், இது, 90 ஆயிரம் கோடி ரூபாய் என்ற உறுதியான விஷயமாகி உள்ளது.
புதிய கரன்சி நோட்டுகள்:
ரிசர்வ் வங்கி, டிச.,1ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‛2,200 கோடி எண்ணிக்கையிலான புதிய, 500 மற்றும், 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதில் புதிய கரன்சி நோட்டுகளின் மதிப்பை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை. இதை கணக்கிட, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி வெளியிட்ட பதில் பெரிதும் உதவுகிறது. அந்த பதிலில், ‛2016 நவ.,8 ம் தேதியில், ரிசர்வ் வங்கியிடம் புதிய, 500 ரூபாய் கரன்சி நோட்டு ஒன்று கூட இல்லை' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அத்துடன், நவ.8 ம் தேதியில் ரிசர்வ் வங்கியிடம், 2,473 கோடி எண்ணிக்கையிலான புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் கையிருப்பாக இருந்தது எனவும், அந்த பதிலில் கூறப்பட்டு இருந்தது. எனவே, 2,200 கோடி எண்ணிக்கையிலான புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளை தான் ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டு இருந்தது என, இதன் மூலம் தெரிய வருகிறது.
இதன் பிறகு டிச., 19 தேதி முதல் புதிய, 500 ரூபாய் கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட தொடங்கியது.
எனவே, புழக்கத்தில் இருக்கும் புதிய கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 90:10 என்ற விகிதாச்சாரத்தில் இருக்கும். இந்த விகிதாச்சாரப்படி, 2,200 கோடி எண்ணிக்கையிலான புதிய கரன்சி நோட்டுகளின் மதிப்பை கணக்கிட்டால், 4.07 லட்சம் கோடி ரூபாய் என வரும்.
நாட்டில் உள்ள கரன்சி நோட்டு அச்சிடும் அச்சகங்களின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி கரன்சி நோட்டுகள். அதாவது, மாதத்திற்கு 200 கோடி கரன்சி நோட்டுகளை மட்டுமே அச்சிட முடியும்.
எனவே, டிச., 19 முதல், டிச.,30ம் தேதி வரை, 10 நாட்களில் அனைத்து அச்சகங்களையும் பயன்படுத்தி, 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய, 500 ரூபாய் கரன்சி நோட்டுகளை தான் அச்சிட்டு இருக்க முடியும்.
1.79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள குறைந்த மதிப்புள்ள கரன்சி நோட்டுகள்
2. 4.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய, 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகள்
3.34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய, 500 ரூபாய் கரன்சி நோட்டுகள் ஆகிய மூன்றையும் கூட்டினால், 5.20 லட்சம் கோடி ரூபாய் என்ற விடை கிடைக்கும். இது தான், ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட கரன்சி நோட்டுகளின் மதிப்பு.
நவ., 8ம் தேதிக்கு முன், 17.97 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில், 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு வாபஸ் பெற்றது. டிச.,30ம் தேதியில், 13.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு டெபாசிட் மூலம் வந்து விட்டன. 15.44 லட்சம் கோடி ரூபாயில், 13.78 லட்சம் கோடி ரூபாயை கழித்தால், 1.66 லட்சம் கோடி ரூபாய் வரும். இந்த தொகை தான் இன்னும் வங்கிகளுக்க வரவில்லை. எனவே, கணக்கில் வராத கறுப்பு பணத்தின் அளவு இந்த தொகையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
English Summary:
Mumbai: The rupee note after the announcement of the withdrawal, the value of black money in circulation in the country, 1.66 lakh crore was aroused suspicion.