தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 23-ம் தேதி தொடங்குகிறது. புதிய திட்டங்கள், நிவாரணம், அதிகாரிகளுடன் கலந்தாய்வு என பரபரப்பாக இயங்கி வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'முதல்வராக சசிகலா பதவியேற்பதற்காக குறிக்கப்பட்ட நல்ல நாட்கள் தள்ளிக் கொண்டே போகின்றன. பிரதமரை நேரடியாகச் சந்திக்கச் சென்ற தம்பிதுரைக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு எளிதாக வர முடிந்த சசிகலாவால், முதல்வர் பதவியை நோக்கி நகர முடியவில்லை. கடந்த சில நாட்களாக வெளிப்பட்டு வரும் முட்டல், மோதல்கள் நேற்று பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கின. இதை உணர்ந்து, தன்னுடைய நிலைப்பாட்டை உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் கார்டன் பார்வைக்குக் கொண்டு சென்றார் ஓ.பி.எஸ். அப்படியும் மன்னார்குடி உறவுகளின் கோபம் தணியவில்லை. "ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், பிரதமரை சந்திக்க முயற்சி மேற்கொண்டார் தம்பிதுரை. அப்போது முடியவில்லை. இரண்டாவது முறையாக, நேற்று ஜல்லிக்கட்டுக்காக சசிகலா கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பிரதமரை சந்திக்கச் சென்றார் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. 'கென்ய அதிபருடனான சந்திப்பில் பிரதமர் இருக்கிறார். அதனால்தான் அவரை சந்திக்க முடியவில்லை' என தம்பிதுரை சமாதானம் சொன்னாலும், பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடத்தப்படும் உள்கட்சி தாக்குதல்களை பிரதமர் கவனித்துக் கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் சமரசம் பேசத்தான் தம்பிதுரை சென்றார். அதற்கு மோடி இடம் கொடுக்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"டெல்லியில் நேற்று மீடியாக்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் முதல்வர் ஒருவர் இருக்கிறார் என்பதை எந்த இடத்திலும் அவர் நினைவூட்டவில்லை. அதேநேரம், 'ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம். பின்வாங்க மாட்டோம்' என அதிரடியைக் கிளப்பினார் பன்னீர்செல்வம். 'ஆட்சிக்குள் பன்னீர்செல்வம் பலம் பெற்றுவிடக் கூடாது' என்பதற்காகத்தான், கடிதம் எழுதுவது, நிர்வாகிகளை பேச வைப்பது போன்ற செயல்களை மன்னார்குடி உறவுகள் செய்து வருகின்றன. கட்சிக்குள் இருக்கும் உள் எதிரியாக பன்னீரையும் வெளி எதிரியாக தீபாவையும் பார்க்கிறார் சசிகலா. அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். பன்னீரை வீழ்த்தும் அவர்களின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டுவிட்டதால், சசிகலாவின் முதல்வர் கனவு தள்ளிப் போய்விட்டது" என்றார் விரிவாக.
"சசிகலா, தினகரன், நடராசன் உள்ளிட்ட மூவரும் அதிகாரத்துக்குள் வந்துவிட முடியாத அளவுக்கு வழக்குகள் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. பணப் பரிவர்த்தனை வழக்கில் டி.டி.வி.தினகரனை நெருக்கிக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. லெக்சஸ் கார் இறக்குமதியில் மோசடி செய்த வழக்கில் நடராசன் வகையாகச் சிக்கியிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரிக்குள் வரலாம் என்பதால் பதைப்புடன் இருக்கிறார் சசிகலா. இந்த வழக்குகளால் முதல்வர் பதவியைத் தொட்டுவிடுவது அவ்வளவு எளிதானதல்ல. தீர்ப்பு வருவதற்குள் முதல்வர் ஆகிவிட்டாலும், உறவுகளில் ஒருவரை பதவிக்குக் கொண்டு வரலாம் எனத் திட்டமிட்டிருந்தார் சசிகலா.
அவருடைய நினைப்புக்கு குறுக்கே பன்னீர்செல்வம் இருக்கிறார். அதன் விளைவை தம்பிதுரை நேரடியாகக் காட்டிக் கொண்டிருக்கிறார். 'உங்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன்' என பன்னீர்செல்வம் கூறினாலும், கார்டன் வட்டாரம் மிகுந்த எரிச்சலில் இருக்கிறது. பிரதமர் மூலமே விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வேலையில் மன்னார்குடி உறவுகள் இறங்கியுள்ளன. 'இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், தமிழக பா.ஜ.கவின் எதிர்காலத்துக்கு நல்லது' எனத் திட்டமிடுகிறார் அமித் ஷா. அதனாலேயே, சசிகலாவுக்கு எதிரான சக்திகளை சந்திப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். தீபாவுக்குக் கூடும் கூட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, விசாரித்திருக்கிறார். விரைவில் தீபாவை அவர் சந்திப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.
"குடியரசு தினத்தில் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சட்டசபை கூட்டத் தொடர், பட்ஜெட் வேலைகள் என முதல்வருக்கான பணிகளில் வேகத்தைக் கூட்ட ஆரம்பித்துவிட்டார் பன்னீர்செல்வம். முதல்வரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில் ஆளும்கட்சி ஊடகமும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. 'ஜெயலலிதா மரணமடைந்த நாளிலேயே, சசிகலா முதல்வர் பதவியை ஏற்றிருந்தால், இந்தளவுக்கு விவகாரம் நீண்டிருக்காது' என மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர். வெங்கய்ய நாயுடு சொன்னதால்தான், பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தினார். இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, பன்னீர்செல்வதைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. எந்த அசைவையும் காட்டாமல், பளீர் புன்னகையோடு வலம் வருகிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
English Summary:
The plenary session of the Legislative Tamilnadu commences on 23. New projects, relief, and is busy working with the authorities to discuss O.Pannir Selvam CM. "The good days are marked to take a charge as chief minister Shashikala keep pushing. Tampiturai directly went to see the prime minister did not receive the proper respect, "say the AIADMK in the locality.