ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களில் பாதி பேர் இதுவரை ஜல்லிக்கட்டைப் பார்த்ததே இல்லை என்று பலரும் கூறிவந்தனர். இனி அப்படி சொல்ல முடியாது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களுக்கு, ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் ஒரு படி மேலே சென்று மாடுபிடி வீரராக மாற வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? மாடு பிடிப்பது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா? இதோ... ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறார் தமிழ்நாடு மாடுபிடி சங்க தலைவர் முத்தையா.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக குவிந்துள்ள மாடுகளை, தன் கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்த முத்தையாவின் பின்னால் பெரும் கூட்டம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அவர் ஏதாவது ஒரு மாட்டின் அருகில் நின்றால்... ‛‛ஏலேய் இந்த தடவ இந்த மாடு பிடிபடாது'' என்று அவரின் எண்ண ஓட்டத்தை சிலர் சொல்லிக் கொண்டிருக்க, மாடு பிடிப்பது எப்படி என்ற கேள்வியுடன் முத்தையாவை ஓரம் கட்டினோம்.
''தமிழ்நாடு முழுக்க மாடு பிடிப்பதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு கொடுத்துகிட்டு இருக்கேன். திண்டுக்கல், தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர், சிவகங்கை, சேலம், ராமநாதபுரம், கரூர், மதுரை உள்பட 14 மாவட்டத்துல 1,400 மாடுபிடி வீரர்களை உருவாக்கி இருக்கேன். நம்மட்ட இருக்குற வீரர்கள் எல்லாரும் ஜல்லிக்கட்டுல டிவி, ஃபிரிட்ஜ் ஜெயிக்கக் கூடியவங்க. மாடு வாடி வாசல்ல இருந்து வரும்போதே அத கணிச்சுருவேன். அது எந்தப் பக்கம் பாயும், எங்க வரும்ன்னு கரெக்டா சொல்லிடுவேன். கூசாம புடிடான்னு மாடு புடிக்குறவனுக்கு தெம்பு கொடுத்துருவோம். இதுதான் பயிற்சி. ஒரு மாடு பிடி வீரனுக்கு தேவை மனதைரியம் மட்டும்தான்.
தமிழ்நாட்டுல பல லட்சம் மாடு இருக்கு. இதுல நல்லா பாயுறது 70 மாடுதான். நாமக்கல்ல அழகு நாச்சியார்னு ஒரு அம்மா வளக்குற மாடுதான் இப்ப வரைக்கும் நம்பர் ஒன்னு. இதுவர யாரும் அந்த மாட்டைப் பிடிக்க முடியல. போன தடவ என் தம்பி மேட்டுப்பட்டி மூர்த்திய குத்தி சரிச்சுப்புடுச்சு. அவனுக்கு கன்னத்துலயும், கம்முகூட்டுலயும் 15 தையலு. அதுக்காகவே கங்கணம் கட்டி காத்து இருந்தோம். இப்ப தடை நீங்குனதுனால இந்த வருஷம், அலங்காநல்லூர்ல அதைப் பிடிச்சுப்புடுவோம்.
அப்புறம்... பட்டமங்கலம் செந்தில். அவரோட மாடு ஏசி வண்டிலதான் வரும். தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் ஒரு மாடு வச்சிருக்காரு. முன்னாள் எம்.பி ரித்தீஷ் ஒரு மாடு வச்சிருக்காரு. சேலம் வீரபாண்டியார் மகன் ராஜா மாடு வச்சிருக்காரு. வைத்தியலிங்கம் மகன்ட்ட மூணு மாடு இருக்கு. புதுக்கோட்டை கண்ணன், ஆலங்குடி சுரேஷ், அண்ணா பஸ் ஸ்டாண்ட் என்ஜினீயர் சபாபதி, அண்ணாநகர் பிரேம், அவனியாபுரம் ஏ.கே கண்ணன் இவங்ககிட்டதான் தமிழ்நாட்டுல, ஜல்லிக்கட்டுக்கு பாயுற சரியான மாடுகள் இருக்கு.
அரசியல்வாதிகள், தொழிலதிபர், என்ஜினீயர்கதான் மாடு அதிகமா வச்சிருக்காங்க. இந்த மாடுகளை கவனிக்க தனி ஆளு, மாட்டுக்கு ஃபேன் போட்ட ரூம், அதுக்கு பச்சரிசி, தேங்காய், சோள மாவு, கருக்க தவுடு, பருத்திக்கொட்டை, வாரத்துக்கு ஒரு நாளு லைஃப் பாய் சோப்பு போட்டு நீச்சல்... இப்படி அம்சமா பார்த்துப்பாங்க. பிள்ளைய கூட அப்படி வளர்க்க மாட்டாங்க. இந்த 70 மாட்டுல பணக்காரங்க வீட்டு மாடை விட சாதாரண வீட்டு மாடுதான் நல்லா பாயும். மாடு வாங்குறது மட்டும்தான் ஆம்பளையா இருக்கும். அத வளக்குறது எல்லாமே பொம்பள ஆளுக தான்.
மாடு அவங்க அவங்க ராசிக்கு தக்கதான் அமையும். தனக்கு சாப்பாட்டுக்கு இல்லைனாலும் மாட்டுக்கு எல்லாம் கொடுத்துருவாங்க. அவுக எவ்வளவு கொஞ்சி வளத்தாலும், அது யாரோட மாடா இருந்தாலும் களத்துல அது எல்லாம் செல்லாது. எங்கிட்ட திறமை இருக்கு, உங்கிட்ட மாடு பலம் இருக்கு. மாடு நினைச்சா குத்தட்டும் அப்டின்னு தான் இறங்குவோம்.
முதல்ல அலங்காநல்லூர்ல 2பேரு தான் மாடு புடிச்சோம். இப்போ 600 பேரு புடிக்குறாங்க. எந்த ஊருல ஜல்லிக்கட்டு நடந்தாலும் எங்களுக்கு அழைப்பு வந்துரும். நாங்க கார் புடிச்சு போயிருவோம். எத்த பெரிய அடங்காத மாட்டையும் அலங்காநல்லூர்காரன் அடக்கிருவான். சவால் விட்டு புடிப்போம். முதல்ல மாடு புடிக்க வர்றவனுக்கு போக்கு மாடு புடிக்க கத்துக் கொடுப்போம். போக்கு மாடுன்னா ஓடுற மாடு. அத புடிச்சுகிட்டு 150 மீட்டர் ஓடிட்டா ஜெயிச்சதா அர்த்தம். அதுக்கு பரிசா தங்க காசு, அண்டா, குண்டா, வேட்டி , வாட்ச், குத்துவிளக்கு கொடுப்பாங்க.
அப்புறம் சுத்து மாடு. ஒரு இடத்துல நிண்டு மாடு சுத்தும்போது, அத மூணு புடி புடிச்சா, புடிகாரனுக்கு பரிசு. ரெண்டரையில இறங்கிட்டா பரிசு மாட்டுகாரனுக்கு. இதுக்கு ஃப்ரிட்ஜ், சைக்கிள், கிரைண்டர், மிக்சி, ஸ்கூட்டர், கொடுப்பாங்க. ஜல்லிக்கட்டுல சாதி, மதம் கிடையாது. திறமை இருந்தா யாருனாலும் மாடு புடிக்கலாம். வருஷத்துல 4 மாசம்தான் இந்த விளையாட்டு நடக்குது. அதனால இதையே முழு வேலையா பாக்க முடியாது.
படிச்ச பையங்க நிறைய பேரு மாடு பிடி வீரர்களா இருக்காங்க. மாடு பிடி வீரர்கள்ல பாதி பேருபோலீஸ் வேலையில இருக்காங்க. ஜல்லிக்கட்டுனா லீவு போட்டுட்டு வந்துருவாங்க. இந்த ஜல்லிக்கட்டுத் தடைய நீக்குறதுக்கு தமிழ்நாடே போராடுனதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. இந்த தடை உடைச்சதுக்கு அப்புறம் இப்ப நிறைய பேரு ஜல்லிக்கட்டு விளையாட ஆர்வமா வாராங்க.
தமிழ்நாடு முழுக்க 14 மாவட்டங்கள்ல பயிற்சி கொடுத்துட்டு வர்றேன். காசு, பணம் எதுவும்வாங்காம ஒரு சேவையாதான் இத செய்றேன். இதுக்காக அரசாங்கத்துல கிடைச்ச விளையாட்டு வாத்தியார் வேலையையும் விட்டுட்டு வந்துட்டேன். திரும்பவும் சொல்றேன், இந்த விளையாட்டை மீட்டு கொடுத்த மாணவர்களுக்கு, பெண்களுக்கு, பொதுமக்களுக்கு நன்றி. என்ன... போராடுன பிள்ளைங்க மேல போலீஸ் தடியடி நடத்துனது தான் மனசுக்கு சங்கடமா இருக்கு'' என்று நெகிழ்கிறார் முத்தையா.