புதுடில்லி : மத்திய பட்ஜெட்டில் தெளிவான இலக்கு இல்லை என்றும், விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்றும் காங்., துணைத் தலைவர் ராகுல் குறை கூறினார்.
வரவேற்பும், எதிரப்பும்:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பின், அதன், நான்காவது பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். இதனை பா.ஜ., வை சேர்ந்த அமித் ஷா, சுரேஷ் பிரபு, நிதின் கட்காரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வரவேற்ற போதும், காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலக்கு இல்லை:
மத்திய பட்ஜெட் குறித்து காங்., துணை தலைவர் ராகுல் தெரிவித்ததாவது: விவசாயிகள், இளைஞர்கள் என, யாருக்கும் நன்மை தராத பட்ஜெட்; இலக்கு இல்லாதது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது; அதற்கு எந்த தீர்வுமில்லை. இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, இரு ஆண்டுகளாக, மத்திய அரசு பொய் சொல்லி வருகிறது. புல்லட் ரயில் இயக்கப்படும் என, பிரதமர் மோடி கூறினார்; அதுபற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வார்த்தை ஜாலம்:
மத்திய பட்ஜெட் குறித்து திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது: மத்திய பட்ஜெட், எந்த இலக்கும் இன்றி, வெற்று வார்த்தைகளாக உள்ளது; உபயோகமற்ற, அடிப்படை இல்லாத, செயல்பாடற்ற பட்ஜெட். சொந்த பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க, இன்னமும் கட்டுப்பாடு நீடிக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான எங்கள் எதிர்ப்பு தொடரும்; அதனால் தான், முதல் இரண்டு நாட்கள், பார்லி., கூட்டத்தொடரில், எங்கள், எம்.பி.,க்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஏழை மக்களை பாதிக்கும்:
மத்திய பட்ஜெட் குறித்து திரிணமுல் மார்க்.கம்யூ., பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்ததாவது: மத்திய பட்ஜெட், முன்னுக்கு பின் முரணாக உள்ளது; மாயா ஜாலம் காட்டும் வெறும் அறிவிப்புகள் மட்டுமே உள்ளன. மறைமுக வரிகள் மூலம், வருவாயை கூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது; இதனால், பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான். விலைவாசி உயரும் ஆபத்துள்ளது. முக்கிய திட்டங்கள் எதற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தெளிவில்லை:
மத்திய பட்ஜெட் குறித்து பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்ததாவது: மத்திய பட்ஜெட்டில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குபின் எவ்வளவு கறுப்புப் பணம் பிடிபட்டது என்பதை பட்ஜெட் தெளிவாகக் கூறவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் அமைப்பு சாரா துறையில் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தருவது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்ததால், ரயில்வே துறையை அரசு சீரழித்து விட்டது.
பதவி எதற்கு?
பட்ஜெட் குறித்து ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாவது: பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பில்லை. ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்வது என்ற மரபை மத்திய அரசு சிதைத்து விட்டது. ரயில்வே பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் தாக்கல் செய்ய முடியாத நிலையில், அவர் பதவியில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
NEW DELHI: The target was not clear in the federal budget, and that the farmers did not have any notice Cong., Rahul said Lo.